சென்னை, ஜன. 19:
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று செங்கல்பட்டு மாவட்டம், நெம்மேலியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், திருப்போரூர் மற்றும் திருக்கழுக்குன்றம் வட்டங்களில் பழைய மாமல்லபுரம் சாலைக்கும் கிழக்கு கடற்கரை சாலைக்கும் இடையில் கோவளம் உபவடிநிலப் பகுதியில் 5,161 ஏக்கர் பரப்பளவில் 342 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய குடிநீர் நீர்த்தேக்கத்திற்கு “மாமல்லன்” என்று பெயர் சூட்டி, நீர்த்தேக்கம் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டி, கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
புதிய நீர்த்தேக்கம் அமைப்பதற்கு 34 கி.மீ நீளத்திற்கு மண் கரை அமைக்கும் பணி, கோகிலமேடு முகத்துவாரத்திற்கு வெள்ள நீர் செல்வதற்கு ஏதுவாக நீர் தேக்கத்தின் தெற்கு பகுதியில் நீரொழிங்கி அமைத்தல், நீர் உள்வாங்குவதற்கும் மழைநீரை வெளியேற்றுவதற்கும் தேவையான நீரொழிங்கிகள் அமைத்தல், தேவைக்கு அதிகமான வெள்ள நீரீனை மேற்கு மற்றும் கிழக்கு புற வெளிப்புற வடிகால்கள் மூலம் முட்டுக்காடு மற்றும் கோகிலமேடு முகத்துவாரங்கள் மூலம் வெளியேற்ற வடிகால்கள் அமைக்கும் பணிகள் அமையவுள்ளன. மேலும், பக்கிங்காம் கால்வாய் திருவிடந்தையிலிருந்து மகாபலிபுரம் வரை முற்றிலுமாக சீரமைத்து கடல்நீர் வருவதற்கேற்ப புனரமைக்க உத்தேகிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:–
சென்னையின் வளர்ந்து வருகின்ற பகுதிகளுக்காக நம்முடைய அரசு செய்த முக்கியமான பணியாக வரலாற்றில், இந்த நிகழ்வு நினைவுகூரப்படும். பொதுவாக, சிலர் உண்மை தெரிந்தும், பலர் உண்மை தெரியாமலும், “நம்முடைய கழக ஆட்சியில், அணைகளை கட்டவில்லை” என்று ஒரு பொய்யை சொல்லுவார்கள். ஆனால், உண்மை நிலை என்ன? கருணாநிதி தமிழ்நாட்டின் நீர் நிலைகளைக் காக்கக்கூடிய செயல்பாடுகளையும் அதிகமாக செய்திருக்கிறார்.
1967-–ம் ஆண்டு தி.மு.க. ஆட்சிக்கு வந்ததில் இருந்து, 2011 வரை தமிழ்நாட்டில், 43 அணைகள் கட்டப்பட்டிருக்கிறது.
திராவிட மாடல் ஆட்சி அமைந்து, நீர்வளம் பெருக்க பல நடவடிக்கைகளை நாம் தொடர்ந்து எடுத்துக் கொண்டு வருகிறோம்.
கடந்த ஐந்து வருடமாக மேட்டூர் அணை முழு கொள்ளளவு எட்டப்பட்டு, குறித்த நேரத்தில் திறந்து வைத்திருக்கிறோம்.
25 ஆயிரம் கி.மீ.
தூர்வாரும் பணி
2021–-25 ஆகிய ஐந்து ஆண்டுகளில், காவிரி டெல்டா பகுதிகளில், தூர்வாரக்கூடிய பணிகள் 459 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்றிருக்கிறது. 24 ஆயிரத்து 833 கிலோமீட்டர் நீளத்திற்கு சிறந்த முறையில், இவை செயல்படுத்தப்பட்டிருக்கிறது. இதனால், கடைமடை வரை விவசாயிகள் பயனடைந்தார்கள்.
மாநிலம் முழுவதும் புதிதாக 121 தடுப்பணைகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
63 அணைகட்டுகள் அமைக்கக்கூடிய பணிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
தாமிரபரணி – கருமேனியாறு – நம்பியாறு இணைப்பு கால்வாய் திட்டம். கடந்த ஆண்டு பிப்ரவரி 7-ஆம் நாள் துவங்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.
ஐந்தாண்டுகளில், 9 டி.எம்.சி. நீர் வறட்சிப் பகுதியான திசையன்விளை மற்றும் சாத்தான்குளம் வரை கொண்டு செல்லப்பட்டிருக்கிறது.
ஊரக வளர்ச்சித்துறை மூலமாக, தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும், 47 ஆயிரத்து 920 ஏரிகள் மற்றும் 1 இலட்சத்து 33 ஆயிரத்து 967 கிலோமீட்டர் கால்வாய்களை தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
இந்த வரிசையில்தான், சென்னை மாநகரத்தில், பெருகிவரும் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு, மற்றுமொரு புதிய நீர்த்தேக்கமான திராவிட மாடல் ஆட்சி இதை அமைத்திருக்கிறது.
342 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், இது அமைக்கப்பட இருக்கிறது.
செங்கல்பட்டு மாவட்டம் – திருப்போரூர் மற்றும் திருக்கழுக்குன்றம் வட்டங்களில், கிழக்கு கடற்கரைச் சாலைக்கும் – பழைய மாமல்லபுரம் சாலை எனும் ராஜீவ் காந்தி சாலைக்கும் இடையில் இருக்கின்ற கோவளம் உப வடிநிலத்தில், இந்த புதிய நீர்த்தேக்கம் அமைய இருக்கிறது.
69 ஏரிகள்
மானாமதி குழும 69 ஏரிகளில் இருந்து வரும் உபரி நீர் கடலில் கலக்காமல், இந்த நீர்த்தேக்கம் அமைக்கப்பட இருக்கிறது.
திருவிடந்தை முதல் கோகிலமேடு வரை 5 ஆயிரத்து 161 ஏக்கர் பரப்பளவில் இது அமையப் போகிறது.
34 கி.மீ. நீளம்
மொத்தம் 1.65 டி.எம்.சி. கொள்ளளவில், 34 கிலோமீட்டர் நீளமுள்ள கரை மற்றும் நீர் ஒழுங்கியத்துடன் கூடிய புதிய நீர்த்தேக்கம் அமைக்கப்பட இருக்கிறது.
இந்தத் திட்டத்தின் வாயிலாக, நாள் ஒன்றுக்கு 170 மில்லியன் லிட்டர் குடிநீரை நம்மால் மக்களுக்கு வழங்க முடியும்.
சென்னையின் புதிய அடையாளங்களாக, மிக வேகமாக உருவெடுத்திருக்கின்ற பகுதிகளான சோழிங்கநல்லூர், மேடவாக்கம், பள்ளிக்கரணை, சிறுசேரி, கேளம்பாக்கம், திருப்போரூர், மாமல்லபுரம் ஆகிய பகுதிகளில் வசிக்கின்ற 13 இலட்சம் மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்கு இது பயன்படும்.
சுற்று வட்டாரத்தில் இருக்கின்ற திருவிடந்தை, கோகில மேடு, மாமல்லபுரம், திருப்போரூர் தண்டலம், பையனூர் ஆகிய பகுதிகளில், நன்னீரை தேக்கி, கடல் நீர் உட்புகுதலை தடுத்து, நிலத்தடி நீரின் மட்டம் மற்றும் அதன் தரம் மேம்படும்.
இந்த பகுதியில் உள்ள பக்கிங்காம் கால்வாய் 15 கிலோமீட்டர் நீளம் 311 ஏக்கர் பரப்பளவில் சீரமைப்பதால், உவர் நீர் மீன் வளத்தை நம்பியிருக்கின்ற மீனவர்களின் வாழ்வாதாரம் மேம்படும்.
மேலும், அந்த பகுதியில் வசிக்கின்ற மீனவர்களுக்கு மீன் பிடி உரிமம் வழங்கப்படும்.
தொண்டை மண்டலத்தில், காஞ்சிபுரத்தைத் தலைநகரமாக கொண்டு கி.பி. மூன்றாம் நூற்றாண்டு முதல் ஒன்பதாம் நூற்றாண்டு வரை பல்லவர்கள் சிறப்பாக ஆட்சி செய்தார்கள். மகேந்திரவாடி, உத்திரமேரூர், தென்னேரி, தூசி மாமண்டுர் போன்ற 39 ஏரிகளை பல்லவர்கள் உருவாக்கியிருக்கிறார்கள். ஏரி வாரியம் அமைத்து உணவு மற்றும் நீர் பாதுகாப்பை தொண்டை மண்டலத்தில் உறுதி செய்தார்கள்.
மாமல்லன் நீர்தேக்கம்
பல்லவர்களில், ‘மாமல்லன்’ என்று போற்றப்படுகின்ற முதலாம் நரசிம்மவர்ம பல்லவன் உருவாக்கிய மாமல்லபுரம் அருகில், இந்த நீர்த்தேக்கம் அமைவதால், “மாமல்லன் நீர்த்தேக்கம்” என்று இதற்கு பெயர் சூட்டுவதுதான் பொருத்தமாக இருக்கும் என்று நான் கருதுகிறேன்!
சென்னையச் சுற்றி செம்பரம்பாக்கம் ஏரி, புழல் ஏரி, சோழவரம் ஏரி, பூண்டி ஆகியவை இருக்கிறது. இப்போது கூடுதலாக மாமல்லன் நீர்த்தேக்கமும் அமைய இருக்கிறது.
ஒரு நாட்டிற்கு நிதி மேலாண்மையைப் போலவே, இப்போது நீர் மேலாண்மையும் மிக மிக முக்கியம்! அந்த நீர் மேலாண்மைக்கு மிக மிக அதிக முக்கியத்துவம் வழங்க வேண்டும் என்று உணர்ந்து செயல்படுகின்ற ஆட்சி தான் இந்த ஆட்சி.
நீர் நிலைகளை மாசுபடாமல் காத்து வருகிறோம். நிலத்தடி நீரைப் பெருக்க அனைத்து முயற்சிகளையும் எடுக்கிறோம். கடல்நீரை குடிநீராக்கவும் முயற்சி செய்கிறோம்.
அரசு என்னதான் ஒரு பக்கம் நடவடிக்கைகள் எடுத்தாலும், மக்களுக்கும் இதில் கடமை இருக்கிறது. அதனால்தான், சமூக பொறுப்புணர்வு நடவடிக்கைகளை ஊக்குவிக்கின்ற நோக்கில், சிறப்பாக செயல்படுபவர்களுக்கு விருதுகளை தொடர்ந்து வழங்கிக் கொண்டிருக்கிறோம்.
நீர்வளத்துறை மற்றும் பிற துறைகளுடன் ஒருங்கிணைந்து, தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் இருக்கின்ற கால்வாய்கள் மற்றும் நீர்நிலைகளை தூர்வாரி, பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் நீண்டகால பயன்களைப் பெறும்வகையில், நிலையான நீர்வள மேலாண்மையினை உறுதி செய்யக்கூடிய அரசு சாரா தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் பணிகளைப் பாராட்டி இன்றைக்கு ‘சிறந்த நீர் பாதுகாத்தல்’ விருதை வழங்கியதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.
தலைநகர் சென்னைக்காக எத்தனையோ திட்டங்களை நம்முடைய கழக அரசு செய்து கொடுத்திருக்கிறது!
அடுத்து அடுத்து திறப்பு விழா
அண்ணா மேம்பாலம் தொடங்கி, டைடல் பார்க் வரை 100-க்கும் மேலாக என்னால் பட்டியல் போட்டு சொல்ல முடியும்.
கடந்த 5 ஆண்டுகளிலும், சென்னையின் முகமே மாறும் அளவுக்கு அனைத்து வகையான வளர்ச்சித் திட்டங்களையும் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம்!
அடுத்தடுத்து, நிறைய, தொடர்ந்து வரிசையாக திறப்பு விழா காண காத்துக் கொண்டிருக்கிறது!
இன்றைக்கு நான் தொடங்கிய இந்த நீர்த்தேக்கப் பணி மக்களுக்கு காலந்தோறும் வாழ்வளிக்கப் போகிறது.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.
நீர் பாதுகாப்பு விருதுகள்
மாமல்லன் நீர்தேக்க அடிக்கல் நாட்டு விழாவில், மாநிலம் முழுவதும் நீர்நிலைகளை புனரமைத்து பாதுகாத்து சிறப்பான முறையில் செயலாற்றிய தன்னார்வ தொண்டு நிறுவனங்களான – சிறு துளி, இந்திய சுற்றுச்சூழல் அறக்கட்டளை, எக்ஸ்னோரா சர்வதேச அறக்கட்டளை, எச்.சி.எல். அறக்கட்டளை, தன் அறக்கட்டளை, மெகா அறக்கட்டளை, ரோப் நிறுவனங்கள், டி.வி.எஸ். சீனிவாசன் அறக்கட்டளை, வடிவமைப்பு ஆராய்ச்சி மற்றும் கட்டுமான ஆதார பிரிவு, அண்ணா பல்கலைக் கழகம் – நீர்வள ஆதார மையம். பிரதான் அறக்கட்டளை, வனத்துக்குள் திருப்பூர், கோவை குளங்கள், பயோட்டா மண் அறக்கட்டளை, தர்மபுரி – ஆதி அறக்கட்டளை ஆகிய அரசு மற்றும் அரசு சாரா தொண்டு நிறுவனங்களுக்கு முதலமைச்சர் சிறந்த நீர் பாதுகாத்தல் விருதுகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் எ.வ.வேலு, தா.மோ.அன்பரசன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் க.செல்வம், கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.எஸ்.பாலாஜி, எஸ்.ஆர்.ராஜா, இ.கருணாநிதி, வரலட்சுமி மதுசூதனன், தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம்,
நீர்வளத்துறை செயலாளர் ஜெ.ஜெயகாந்தன், செங்கல்பட்டு கலெக்டர் தி.சினேகா, சார் ஆட்சியர் மாலதி ஹெலன், நீர்வளத்துறை முதன்மை தலைமைப் பொறியாளர் கோபாலகிருஷ்ணன், சென்னை மண்டல தலைமைப் பொறியாளர் பொதுப்பணி திலகம், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
![]()





