செய்திகள்

சென்னை கோட்டையில் முதல்வர் ஸ்டாலின் தேசியக்கொடி ஏற்றினார்

Makkal Kural Official

சென்னை, ஆக. 15–

சுதந்திர தினத்தைத்யொட்டி சென்னை கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று மூவர்ண தேசியக் கொடியை ஏற்றினார்.

79வது சுதந்திர தினம் நாடு முழுவதும் இன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

சுதந்திர தின கொடி ஏற்றுவதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போலீசாரின் மோட்டார் சைக்கிள் புடைசூழ கோட்டைகொத்தளத்திற்கு வந்தார். அவரை தலைமை செயலாளர் நா. முருகானந்தம் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

தென்னிந்தியப் பகுதிகளின் தலைமைப் படைத்தலைவர் லெப்டினென்ட் ஜெனரல் வி. ஸ்ரீரீஹரி, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ரியர் அட்மிரல் சதீஷ் எம் ஷெனாய், வான்படை அதிகாரி ஏர் கமோடோர் தபன் சர்மா, சென்னை கடலோரக் காவல்படை கமாண்டர் இன்ஸ்பெக்டர் ஜெனரல் பாலகிருஷ்ணன் முருகன், தமிழக டி.ஜி.பி. சங்கர் ஜிவால், கூடுதல் காவல் துறை இயக்குனர் டேவிட்சன் தேவாசிர்வாதம், சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் ஆ.அருண் ஆகியோரை மரபுப்படி முதல்வருக்கு தலைமைச் செயலாளர் அறிமுகம் செய்துவைத்தார்.

இதைத் தொடர்ந்து போலீசாரின் சம்பிரதாய அணிவகுப்பு மரியாதையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்றுக் கொண்டார். பின்னர் திறந்த ஜீப்பில் ஏறி போலீசாரின் அணிவகுப்பை பார்வையிட்டார். கோட்டை கொத்தளம் அருகே சென்றதும் ஜீப்பில் இருந்து இறங்கி கொத்தளத்திற்குள் படிகள் ஏறி விழா நடைபெறும் இடத்துக்கு சென்றார்.

சரியாக 9 மணிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தேசிய கொடியை ஏற்றி வைத்து வணக்கம் செலுத்தினார். அப்போது வண்ண பலூன்கள் வானில் பறக்க விடப்பட்டன. காவல் துறையினரின் கூட்டு குழல் இசைக்கப்பட்டது. அப்போது சுதந்திர தின விழாவை காண வந்த அனைவரும் எழுந்து நின்று தேசிய கொடிக்கு வணக்கம் செலுத்தினர்.

இதனை தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுதந்திர தின உரை நிகழ்த்தினார். அப்போது பல்வேறு அறிவிப்புகளை அவர் வெளியிட்டார். தகைசால் தமிழர் விருது, அப்துல் கலாம் விருது, கல்பனா சாவ்லா விருது, முதல்வரின் நல் ஆளுமை விருது, மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மிகச்சிறந்த சேவை புரிந்தோருக்கான தமிழ்நாடு அரசு விருதுகள், மகளிர் நலனுக்காக சிறப்பாக தொண்டாற்றிய தொண்டு நிறுவனம் மற்றும் சமூகப் பணியாளருக்கான விருதுகள், சிறந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான முதல்வர் விருதுகள், முதல்வரின் மாநில இளைஞர் விருதுகள் உள்ளிட்டவற்றை சாதனையாளர்களுக்கு வழங்கி முதல்வர் கவுரவித்தார். அவர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

சுதந்திர தின விழாவில் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, நீதிபதிகள், வெளிநாட்டு தூதர்கள், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசு உயர் அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். சுதந்திர தின விழாவையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *