செய்திகள்

சென்னை கம்பன் கழக பொன்விழா நிறைவு

Makkal Kural Official

சென்னை, ஆக 7–

சென்னை கம்பன் கழக பொன்விழா ஆண்டு நிறைவு விழாவை முதல்வர் மு.க. ஸ்டாலின் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி வைக்கிறார்.

சென்னை மயிலாப்பூரில் உள்ள ஏ.வி.எம். ராஜேஸ்வரி கல்யாண மண்டபத்தில் நாளை முதல் 3 நாட்கள் நடைபெறும் இவ்விழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துப் பேசுகிறார்.

சென்னை ஆழ்வார்கள் ஆய்வு மையம் நிறுவியுள்ள ‘கவிச்சக்ரவர்த்தி கம்பர் விருதை’ கவிஞர் வைரமுத்துவுக்கு வழங்குகிறார். பேராசிரியர் தெ.ஞானசுந்தரம், கம்பன் அடிசூடி பழ. பழநியப்பன், பேராசிரியர் சாரதா நம்பி ஆரூரன், ஆன்மிகச் சொற்பொழிவாளர்கள் சுகி.சிவம், இலங்கை ஜெயராஜ் ஆகியோருக்கு ‘இயற்றமிழ் அறிஞர்’ விருதுகளை வழங்குகிறார்.

தொடர்ந்து ‘நயம்பட உரைத்த நா’ என்ற தலைப்பில் எழுத்தாளர் பாரதி கிருஷ்ணகுமார் சிறப்புரையாற்றுகிறார். சென்னை கம்பன் கழகத் தலைவர் எஸ்.ஜெகத்ரட்சகன் எம்.பி. உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

2ம் நாளான சனிக்கிழமை (9ந் தேதி) காலை 9 மணி முதல் ஆய்வுரை அரங்கம், மாலை 6 மணிக்கு நீதிபதி வெ.ராமசுப்பிரமணியன் தலைமையில், ‘பேரிழப்புகளுக்கு முதல்காரணமாக பெண் பாத்திரங்களையே படைத்தது குற்றம்’ என்ற தலைப்பில் வழக்காடுமன்றம் நடைபெறுகிறது.

நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை (10ந் தேதி) காலை அமர்வில் பேராசிரியர் தெ.ஞானசுந்தரம், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்துணைத் தலைவர் சுதா சேஷய்யன், கோ.சரவணன், மருத்துவர் பிரியா ராமச்சந்திரன், வழக்கறிஞர் கோ.க.சிம்மாஞ்சனா, பேராசிரியர் விசாலாட்சி சுப்பிரமணியன் உள்ளிட்டோர் உரையாற்றுகின்றனர்.

மாலை 4 மணிக்கு ‘இராமா…நீயுமா!’ என்ற தலைப்பில் இலங்கை ஜெயராஜ் உரையாற்றுகிறார். தொடர்ந்து சுகி.சிவம் தலைமையில் ‘என்றுமுள கம்பன் என்பதன் காரணம்’ என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெறுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *