சென்னை, டிச.19–
சென்னை கடற்கரை பகுதிகளை பாதுகாக்க, தமிழ்நாடு அரசால் கடல்சார் உயரடுக்கு பாதுகாப்புப் படை அமைக்கப்பட்டு, அதனை வனத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் தொடங்கி வைத்தார்.
சென்னை கடற்கரை முழுவதும், குறிப்பாக கரையிலிருந்து ஐந்து கடல் மைல் வரையிலான எல்லைக்குள், தொடர்ச்சியான ரோந்து பணி மேற்கொள்ளப்படும். சட்டவிரோத மீன்பிடிப்பு மற்றும் வன உயிரின குற்றங்களுக்கு எதிராக எவ்வித சமரசமும் இல்லாத அணுகுமுறை கடைப்பிடிக்கப்படும்.
நவம்பர் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை நடைபெறும் ஆலிவ் ரிட்லி கடல் ஆமைகளின் முக்கியமான முட்டையிடும் மற்றும் குஞ்சு வெளிவரும் காலகட்டத்தில், சிறப்பு கண்காணிப்பு மேற்கொள்ளப்படுவதுடன், கடல்வாழ் உயிரினங்களுக்கு ஏற்படும் காயங்கள் மற்றும் பெருவாரியான உயிரிழப்புகளை சமாளிக்க விரைவு நடவடிக்கை செயல்பாடுகளும் மேற்கொள்ளப்படும்.
ஒவ்வொரு படகும் வனச்சரக அலுவலர் தலைமையில் வனவர், வன பாதுகாவலர்கள், கடல்சார் காவலர்கள் மற்றும் கடல்சார் படகு ஓட்டுநர்கள் என மொத்தம் 12 பணியாளர்களை உள்ளடக்கியதாகும் மேலும் இப்படையானது கள மேற்பார்வை, செயலாக்கம் மற்றும் கடல்சார் செயல்பாட்டு நிபுணத்துவம் ஆகிய பயனுள்ள பணிகள் மேற்கொள்வதை உறுதி செய்யும்.
நவீன ரோந்து படகு
இப்படையின் செயல்திறனை மேம்படுத்தும் நோக்கில், நவீன ரோந்து படகு, ஆழ்கடல் கண்காணிப்பிற்கான நீர்மூழ்கி ட்ரோன்கள் மற்றும் களப்பணிகளை பதிவு செய்யும் உடலில் அணியக்கூடிய புகைப்படக் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், திறம்வாய்ந்த கரையோர பாதுகாப்பை உறுதிப்படுத்த, அதிநவீன தொடர்பு சாதனங்கள், பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் களப்பணிக்கான தேவையான உபகரணங்களும் வழங்கப்பட்டுள்ளன.
இந்த கடல்சார் உயரடுக்கு பாதுகாப்புப்படையின் பணியாளர்கள், கடல் சூழலை பாரம்பரியமாக அறிந்த மீனவ சமுதாயத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்கள் கடல் சூழலியல் கண்காணிப்பு, கடல்வாழ் உயிரினங்களை அடையாளம் காணுதல் மற்றும் அதிநவீன கண்காணிப்பு கருவிகளை கையாளுதல் ஆகியவற்றில் சிறப்பு பயிற்சிகளை பெற்றுள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் வனத்துறை அரசு கூடுதல் தலைமைச்செயலாளர் சுப்ரியா சாகு, முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் சீனிவாஸ் ஆர்.ரெட்டி, தலைமை வன உயிரின பாதுகாவலர் ராகேஷ் குமார் டோக்ரா, மற்றும் வனத்துறை, மீன்வளத் துறை, தமிழ்நாடு கடலோர பாதுகாப்புக் குழு, இந்திய கடலோர காவல் படை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் மூத்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
![]()





