செய்திகள்

சென்னை உட்பட 7 மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்ச் அலர்ட்

Makkal Kural Official

சென்னை, நவ. 16–

தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதால், தமிழகத்தில்

சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு நாளை மிக கனமழை பெய்வதற்கான ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தென் இலங்கை மற்றும் அதையொட்டிய தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நேற்று காலை இலங்கை கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது. இதன்காரணமாக இன்று முதல் 22ம் தேதி வரை கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி–மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இன்று கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் மிக கனமழைக்கான ‘ஆரஞ்ச்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல, நாளை(17–ந்தேதி) சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் காரைக்காலில் மிக கனமழை பெய்வதற்கான ‘ஆரஞ்ச்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புதுவையிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் வருமாறு:–

திருபரப்பு – 6 செ.மீ., செம்பனார் கோவில் – 4 செ.மீ., பரங்கிப்பேட்டை – 3 செ.மீ., மயிலாடுதுறை, சிதம்பரம், தரங்கம்பாடி, வேளாங்கண்ணி – தலா 2 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

புதுச்சேரிக்கும் அலர்ட்

இந்த நிலையில் புதுச்சேரி ஆட்சியரும், மாவட்ட பேரிடர் மேலாண்மை மைய தலைவருமான குலோத்துங்கன் கூறுகையில், ‘வடகிழக்கு பருவ மழையின் தொடர்ச்சியாக, வங்காள விரிகுடா கடற்பரப்பின் மீது காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இன்று மற்றும் நாளை கன மற்றும் அதி கனமழை பெய்யக்கூடும் என்றும் காற்று மணிக்கு 55 கி. மீ. வரை வீசக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் புதுவை பகுதிக்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் மிக பாதுகாப்பாகவும், எச்சரிக்கையுடனும் இருக்கும் படியும் தேவை இருந்தாலன்றி வெளியே வர வேண்டாம். அரசு அளித்துள்ள வழிகாட்டுதல்களை பின்பற்றுவதுடன், வதந்திகளை நம்பாமல் அரசு அளிக்கும் செய்திகளை மட்டுமே பின் பற்றுங்கள். புகார்களை இலவச அழைப்பு எண்களான 1077, 1070, 112 அல்லது 94889 81070 என்கிற எண்ணில் வாட்ஸ்அப் தகவல் ஆகியவற்றின் வழியாக தெரிவிக்கலாம்’ எனத் தெரிவித்துள்ளார்.

கடந்த அக்டோபர் 15-ம் தேதி முதல் வடகிழக்கு பருவ மழை தொடங்கியது, அவ்வப்போது மழையும் பெய்தது. இதனிடேயே வங்கக் கடலில் அக்டோபர் 27-ம் தேதி மோந்தா புயல் உருவானது. இந்தப் புயல் புதுவையை தாக்கும் என வானிலை மையம் எச்சரித்தது. ஆனால் புயல் ஆந்திராவை நோக்கி நகர்ந்தது.

இருப்பினும், புதுவை மற்றும் புதுவையை சுற்றி உள்ள தமிழகப் பகுதிகளில் கன மழை பெய்தது. புதுவையிலும் கன மழை கொட்டியது.

நவம்பர் மாத தொடக்கத்தில் மழை இல்லை. பகல் நேரத்தில் கடும் வெயில் அடித்தது. ஆனால், இடையில் சில நாட்கள் லேசான மழை பெய்தது. இந்த நிலையில் சில நாட்களாக மழை அவ்வப்போது பொழிந்தது. தமிழகத்தில் நேற்று அதிகாலை முதல் அவ்வப்போது விட்டு விட்டு லேசான மழை பொழிய தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *