சென்னை, டிச. 8–
சென்னையில் இன்று 71 இண்டிகோ விமானகள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் அவதி அடைந்துள்ளனர்.
உள்ளாட்டு விமான பயணங்களில் விமானிகள் மற்றும் பணியாளர்களுக்கான புதிய பணி நேரக்கட்டுப்பாடு கடந்த 1-ந்தேதி முதல் அமலுக்கு வந்தது. இதன்படி விமானிகள் தொடர்ச்சியாக 18 மணி நேரம் வேலை பார்க்கலாம் என்ற விதியை திருத்தி 8 மணி நேரமாக குறைத்தது. விமானிகளின் விடுப்பு நேரம் முன்பு வாரத்திற்கு 36 மணி நேரமாக இருந்தது. அது தற்போது 48 மணி நேரமாக அதிகரித்தது.
மேற்கண்டவை உள்ளிட்ட பல்வேறு புதிய நடைமுறைகளை அமல்படுத்த மற்ற விமான நிறுவனங்கள் படிப்படியாக தேவையான ஏற்பாடுகளை செய்தது. ஆனால் இண்டிகோ விமான நிறுவனம் இதில் மெத்தனம் காட்டியதாக விமானிகள் கூட்டமைப்பு குற்றம்சாட்டியது. இதன் காரணமாக உள்நாட்டில் அதிகளவில் விமானங்களை இயக்கும் இண்டிகோ நிறுவனம் சிக்கல்களை சந்தித்து வருகிறது.
கடந்த சில நாட்களாக அந்த விமானங்கள் தாமதம் மற்றும் ஏராளமான விமானங்கள் ரத்து காரணமாக பயணிகள் பரிதவித்தனர். இதை பயன்படுத்தி மற்ற விமான நிறுவனங்கள் தங்கள் விமான கட்டணங்களை பன்மடங்கு அதிகரித்தன. இந்நிலையில், இன்று 7வது நாளாக சென்னை விமான நிலையத்தில் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான சேவை பாதிப்படைந்துள்ளது. சென்னையில் நிர்வாக காரணமாக இன்று 38 புறப்பாடு. 33 வருகை என 71 விமான சேவை ரத்தாகியுள்ளதாக இண்டிகோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் அந்த விமானத்தில் டிக்கெட் முன்பதிவு செய்த பயணிகள் கடும் அவதி அடைந்தனர். மேலும் சென்னை விமான நிலையத்திற்கு வந்த பயணிகள் இண்டிகோ நிறுவன தகவல் தொடர்பு மையத்தில் உள்ள பணியாளர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
![]()





