செய்திகள்

சென்னையில் மு.க.ஸ்டாலின் தலைமையில் நவம்பர் 5, 6-ந் தேதிகளில் கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகள் மாநாடு

Makkal Kural Official

சென்னை, அக்.14-–

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் உயர் அதிகாரிகள் மாநாடு சென்னையில் அடுத்த மாதம் 5, 6 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.

தமிழக அரசு பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை கொண்டு வந்து நிறைவேற்றி வருகிறது. இந்த திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து அவ்வப்போது உயர்மட்ட அதிகாரிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைத்து ஆய்வு கூட்டங்களை நடத்தி வருகிறார். அதில் அவர், அனைத்து துறைகளும் செயல்படுத்தி வரும் திட்டங்கள் மற்றும் அதன் செயல்பாட்டு நிலை போன்றவற்றை அறிந்து அதற்கான பணிகளை முடுக்கி விடுவது வழக்கம்.

மேலும் ஆண்டுக்கு ஒருமுறை மாவட்ட கலெக்டர்களையும், போலீஸ் உயர் அதிகாரிகளையும் சென்னைக்கு வரவழைத்து அந்தந்த மாவட்டத்தில் நடைபெற்று வரும் மக்கள் நல பணிகள் பற்றியும், அந்த பணிகள் உண்மையாகவே மக்களை சென்றடைந்து உள்ளதா? என்பது பற்றியும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்து அறிவுரை வழங்குவதை வழக்கமாக வைத்துள்ளார்.

அதே போல் போலீஸ் உயர் அதிகாரிகளிடம் அந்தந்த மாவட்டங்களில் உள்ள சட்டம்- ஒழுங்கு பிரச்சினை, அதில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் ஆகியவற்றையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாக கேட்டு அறிவுரை வழங்குவது வழக்கமாக உள்ளது.

அரசு திட்டங்கள் மக்களை

சென்றடைந்துள்ளதா?

அந்த வகையில் வருகிற நவம்பர் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் 10-வது மாடியில் உள்ள கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர்கள் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகளின் மாநாடு நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த மாநாட்டுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்குவார்.

இந்த மாநாட்டில் அனைத்து மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் சூப்பிரண்டுகள், சரக டி.ஐ.ஜி, மற்றும் ஐ.ஜி.க்கள் கலந்து கொள்வார்கள்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசு திட்டங்கள் மக்களை சென்றடைந்துள்ளதா? என்பதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்து, அதுபற்றி மாவட்ட கலெக்டர்களிடம் நேரடியாக கேட்டறிவார். அதே போல் மாவட்டங்களில் நிகழ்ந்த சட்டம்-ஒழுங்கு பிரச்சினை, அதில் போலீசார் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்தும் அவர் கேட்டறிவார்.

அடுத்த ஆண்டு (2026) சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த கூட்டம் முக்கியத்துவம் பெறுகிறது.

இந்த கூட்டத்தின் நிகழ்ச்சி நிரல் விரைவில் வெளியிடப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *