சென்னை, ஜன. 5:
திருவள்ளூரில் இருந்து சென்னை சென்டிரல் மூர்மார்க்கெட் நோக்கி இன்று காலை மின்சார ரெயில் ஒன்று வந்து கொண்டிருந்தது. வியாசர்பாடி அருகே அந்த ரெயில் வந்தபோது, தண்டவாளம் அருகே நின்ற சில மர்ம நபர்கள் ரெயில் மீது கற்களை தூக்கி வீசினார்கள். இந்த சம்பவத்தில் 3 பயணிகள் காயம் அடைந்தனர்.
காயம் அடைந்தவர்கள் உடனடியாக அடுத்த ரெயில் நிலையத்தில் இறக்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்கள். சம்பவம் குறித்து பெரம்பூர் ரெயில்வே போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த ரெயில்வே போலீசார், சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு, கல்வீசிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
சமீப காலமாக, ரெயில்கள் மீது கற்களை வீசும் சம்பவம் அதிகரித்து வருகிறது. இதனால், பயணிகள் அச்சம் அடைந்துள்ளனர். கல் எறியும் சம்பவங்களை தடுக்கவும், சம்பவத்தில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை வைத்துள்ளனர்.
![]()





