சென்னை, டிச.19–
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை, நுங்கம்பாக்கம், அன்னை தெரசா மகளிர் வளாகத்தில், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் நடைபெறும் மகளிர் சுய உதவிக் குழுக்களின் தயாரிப்பு பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்ட மதி கிறிஸ்துமஸ், ஆங்கிலப் புத்தாண்டு மற்றும் பொங்கல் விற்பனைக் கண்காட்சியினை திறந்து வைத்து பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சியில் மதி அனுபவ அங்காடியில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் தயாரிப்புப் பொருட்களை வாங்கிட வாடிக்கையாளர்களை ஊக்குவிக்கும் வகையில் வாடிக்கையாளர் அட்டைகளை அறிமுகப்படுத்தினார்.
இந்த வாடிக்கையாளர் அட்டையின் மூலம் மதி அனுபவ அங்காடியில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் தயாரிப்புப் பொருட்களை வாங்கும் வாடிக்கையாளர்களின் கணக்கில் அவர்கள் வாங்கும் பொருட்களுக்கு ஏற்ப மதிப்புப் புள்ளிகள் வழங்கப்பட்டு, 500 மதிப்புப் புள்ளிகள் சேர்ந்தவுடன் 500 ரூபாய்க்கு சுய உதவிக் குழுக்களின் தயாரிப்புப் பொருட்களைப் பெற்றுக் கொள்ளலாம் என்பது சிறப்பம்சமாகும்.
தொடர்ந்து, துணை முதலமைச்சர், கடந்த மாதம் மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்ற உணவுத் திருவிழாவினை சிறப்பாக நடத்தியதற்காக சுய உதவிக் குழுவினர், சிறப்பாக செயலாற்றிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி வாழ்த்தினார்.
18 நாட்கள் கண்காட்சி
பின்னர் துணை முதலமைச்சர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:–
18–ந் தேதி முதல் ஜனவரி 4–ம் தேதி வரைக்கும் கிட்டத்தட்ட 18 நாட்கள் இந்த கண்காட்சி நடைபெறும். இதில் 72 சுய உதவிக்குழுக்களைக் கொண்டு 50 கடைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. விற்பனைக்காக 1 கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட பொருட்கள் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த சகோதரிகள் மூலம் இங்கே காட்சி படுத்தப்பட்டிருக்கிறது.
ஒவ்வொரு வருடமும் இந்த கண்காட்சியில் விற்பனையை அதிகப்படுத்துவதற்கு நம்முடைய அரசு பல்வேறு முன்னெடுப்புகளை செய்து வருகின்றது. இதற்கு முந்தைய வருடம் கிட்டத்தட்ட 500 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்திருந்தோம். இந்த ஆண்டு இதுவரைக்கும் கிட்டத்தட்ட 690 கோடி ரூபாய்க்கு விற்பனை ஏற்கனவே நடந்து முடிந்திருக்கிறது. இன்னும் 3 மாதங்கள் இருக்கிறது. எனவே இலக்கைவிட அதிகமாக நம்முடைய சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த சகோதரிகள் அதிகமாக விற்பனை செய்திருக்கிறார்கள்.
50 லட்சம் சுய உதவிக்குழு சகோதரிகளில், கிட்டத்தட்ட 22 லட்சம் பேருக்கு அடையாள அட்டைகள் ஏற்கனவே வழங்கப்பட்டிருக்கிறது. விற்பனையை அதிகரிப்பதற்கு, மதி அனுபவ அங்காடிகள் பல மாவட்டங்களில் உள்ளது. அதில் வருடம்தோறும் விற்பனையை அதிகரிப்பதற்கு அவர்களுக்கு வெகுமதி புள்ளி அட்டைகள் கொடுக்கப்பட்டிருக்கிறது.
எனவே, பொதுமக்கள், தனியார் நிறுவனங்கள், கார்பரேட் நிறுவனங்கள் வந்து, இது போன்ற விடுமுறை நாட்கள், பண்டிகை நாட்களில், விழா நாட்களில் நண்பர்களுக்கு, உறவினர்களுக்கு, மொத்தமாக வாங்கி பரிசளிப்பார்கள், அப்படி கொடுக்கும்போது இங்கே வந்து பார்த்து, இங்கு இருக்கக்கூடிய பொருட்களை அவர்களுடைய பட்ஜெட்டிற்கு ஏற்றவாறு வாங்கி மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ஆதரவு தரவேண்டும்.
இவ்வாறு துணை முதலமைச்சர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், சட்டமன்ற உறுப்பினர் நா.எழிலன், ஊரக வளர்ச்சி துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ஆர்.வி.ஷஜீவனா, திட்ட முதன்மை இயக்க அலுவலர் ஆஷா அஜித், மாநகராட்சி நிலைக்குழுத் தலைவர் நே.சிற்றரசு, மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் அலுவலர்கள் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுவினர் கலந்து கொண்டனர்.
![]()





