சென்னை, டிச. 26–
சம வேலைக்கு, சம ஊதியம் வழங்குவதாக திமுகவின் 311வது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி சென்னையில் பள்ளிக்கல்வித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்களை போலீசார் கைது செய்தனர்.
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 2009 மே 31ந்தேதி நியமிக்கப்பட்ட அரசு பள்ளி இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒரு ஊதியமும், அதே ஆண்டு ஜூன் 1ல் பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு மற்றொரு ஊதியமும் நிர்ணயிக்கப்பட்டது. ஒருநாள் வித்தியாசத்தில் அடிப்படை ஊதியத்தில் ரூ.3,170 குறைந்துள்ளது. இதனால் சுமார் 20 ஆயிரம் ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த முரண்பாட்டை களைந்து சம வேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி இடைநிலை ஆசிரியர்கள் நீண்டகாலமாக வலியுறுத்தி வந்தனர்.இதனிடையே கடந்த தேர்தலில் தி.மு.க. இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு, சம ஊதியம் வழங்குவதாக தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தனர். தற்போது ஆட்சி முடியவுள்ள தருணத்தில் இந்த வாக்குறுதியை தி.மு.க. அரசு இன்னும் நிறைவேற்றவில்லை.

இதனைக் கண்டித்து இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் இயக்கத்தினர் சென்னையில் இன்று போராட்டம் நடத்தப்போவதாகவும் அறிவித்தனர்.
அதன்படி சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தியும், தி.மு.க.வின் 311வது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தியும் நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வித்துறை அலுவலகத்தை (டிபிஐ) முற்றுகையிட்டு இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர்.
சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக்கோரி பதாகைகளை ஏந்தியபடி, முழக்கமிட்டனர். போராட்டம் நடத்தியவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று கைது செய்து அரசு பஸ்சில் ஏற்றி அருகில் உள்ள மண்டபத்தில் தங்க வைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
போராட்டத்தின் போது ஆசிரியை ஒருவர் மயங்கி விழுந்தார். அவரை போலீசார் மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
![]()





