சென்னை மாநகராட்சி தகவல்
சென்னை, அக்.29–
சென்னையில் மழைநீர் வடிகால், கால்வாய்களில் தூர்வாரும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
கடந்த 17–ந் தேதி அன்று காலை 8.30 மணி முதல் இன்று (29–ந் தேதி) காலை 8.30 மணி வரை சராசரியாக சென்னையில் 267.80 மி.மீட்டர் மழை பெய்துள்ளது.
நேற்று (28–ந் தேதி) காலை 8.30 மணி முதல் இன்று காலை 8.30 மணி வரை சராசரியாக 8.99 மி.மீட்டர் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக எண்ணூர் பகுதியில் 18 மி.மீ. மழைப்பொழிவும், குறைந்தபட்சமாக முகலிவாக்கம் பகுதியில் 8.80 மி.மீட்டர் மழையும் பெய்துள்ளது.
22–ந் தேதி முதல் நேற்று (28–ந் தேதி) இரவு வரை மொத்தம் 5,82,050 நபர்களுக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது. இன்று காலை 12,150 நபர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டுள்ளது.
மருத்துவ முகாம்கள்
பொதுமக்களுக்கு நோய்த்தொற்று பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்கும் வகையில், 17.10.2025 அன்று முதல் 28.10.2025 வரை 624 நிலையான மருத்துவ முகாம்கள், 217 நடமாடும் மருத்துவ முகாம்கள் என மொத்தம் 844 மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, 36,353 நபர்கள் பயனடைந்துள்ளனர்.
இன்று 15 மண்டலங்களிலும் 116 இடங்களில் மருத்துவ முகாம்கள் நடைபெறுகிறது. தாழ்வான பகுதிகளில் உள்ள பொதுமக்களை மீட்டு நிவாரண மையங்களில் தங்க வைப்பதற்காக 103 படகுகள் தயார்நிலையில் உள்ளது. இதில் 36 படகுகள் மாநகராட்சிக்கு சொந்தமாக வாங்கி தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
மழைநீர் தேங்கும் இடங்களில் மழைநீர் அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது.
சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் விழும் மரங்களை அகற்றுவதற்காக ஹைட்ராலிக் மர அறுவை இயந்திர வாகனங்கள் 15, ஹைட்ராலிக் ஏணி 2, கையடக்க மர அறுவை அறுப்பான் 224, டெலஸ்கோபிக் மர அறுவை இயந்திரங்கள் 216 என மொத்தம் 457 மர அறுவை இயந்திரங்கள்தயார்நிலையில் உள்ளன. 17.10.2025 முதல் 28.10.2025 வரை மழையின் காரணமாக விழுந்த 62 மரங்களும் அகற்றப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள 22 சுரங்கப்பாதைகளில் மழைநீர்த் தேக்கம் இன்றி போக்குவரத்து சீராக உள்ளது.
தூர்வாரும் பணிகள்
மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள மழைநீர் வடிகால்கள், கால்வாய்கள், வண்டல் மண் சேகரிப்புத்தொட்டிகள்ஆகியவற்றில்தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இப்பணிகள் தொடர்ச்சியாகவும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
24 மணிநேரமும் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் பொதுமக்களிடமிருந்து150 இணைப்புகளுடன் கூடிய 1913 என்ற உதவி எண்ணிற்கு வரும் புகார்கள் மற்றும் சமூக ஊடகங்களில் வரும் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும்,கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று சென்னை மாநகராட்சி கூறியுள்ளது.
![]()





