சென்னை, டிச. 12:
சென்னை நந்தம்பாக்கம் பகுதியில் ‘கிரிடர்’ ஆப் மூலம் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் விற்பனை செய்த 2 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண் உத்தரவின்பேரில், போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் போதைப் பொருட்கள் நடமாட்டத்தை கண்காணித்து முழுவதுமாக கட்டுப்படுத்திட பல்வேறு தொடர் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவு காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், தனிப்படையினர் மற்றும் நந்தம்பாக்கம் காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் ஒருங்கிணைந்து இராமாபுரம், சத்தியா நகர் சந்திப்பு அருகே கண்காணித்து, அங்கு சந்தேகப்படும்படி நின்றிருந்த 2 நபர்களை விசாரணை செய்து, சோதனை செய்தபோது, அவர்கள் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருளை விற்பனைக்காக மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
அதன்பேரில், நந்தம்பாக்கம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து, போதைப்பொருள் வைத்திருந்த பிரபு, டைடஸ் ஜானி ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 3 கிராம் எடை கொண்ட மெத்தம்பெட்டமைன், 2 செல்போன்கள் மற்றும் 1 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் எதிரிகள் ‘கிரிடர்’ ஆப் மூலம் மெத்தம்பெட்டமைன் வாங்கி விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட 2 பேரும் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளனர். மேற்படி வழக்கில் தொடர்புடைய மற்ற குற்றவாளிகளை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.
![]()





