சென்னை, ஆக. 25–
விசாகப்பட்டினத்திலிருந்து சென்னைக்கு ரெயிலில் கடத்திவரப்பட்ட 13.8 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் ஒருவரை கைது செய்தனர்.
சென்னை சென்ட்ரல் ரெயில்நிலையத்தில் குற்றச்சம்பவங்களை தடுக்கும் வகையிலும், போதைப்பொருள் கடத்தப்படுவதை தடுக்கும் வகையிலும் சென்னை சென்ட்ரல் ரெயில்வே பாதுகாப்புப்படை போலீசார் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஆபரேஷன் நர்கோஸின் கீழ் ஆர்.பி.எப். போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது விசாகப்பட்டினத்திலிருந்து சென்னை சென்ட்ரலுக்கு வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயிலில் வந்த பயணிகளை ஆர்பி.எப் போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர். அப்போது அந்த ரெயிலில் வந்த ஒருவரை சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தி அவர் வைத்திருந்த பையை சோதனை நடத்தினர். அப்போது அந்த பையில் ரூ. 6.9 லட்சம் மதிப்புள்ள 13.8 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் கேரளாவின் வயநாட்டைச் சேர்ந்த அக்ஷய் எஸ் (வயது 23) என்பவரை கைது செய்தனர். இதைத் தொடர்ந்து அந்த ஆசாமியை தமிழ்நாடு போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
![]()





