சென்னை, ஜன. 10:
நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ பட விவகாரத்தில் மத்திய அரசின் திரைப்பட தணிக்கை வாரியத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் நடித்துள்ள அவரது கடைசிப் படமான ‘ஜனநாயகன்’ திரைப்படம் பொங்கல் விருந்தாக நேற்று வெளியாகும் என்று பட தயாரிப்பு நிறுவனம் முதலில் அறிவித்திருந்தது. இந்த திரைப்படத்தை வரவேற்க அவரது ரசிகர்களும், த.வெ.க.வினரும் ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால் மத்திய அரசின் திரைப்பட தணிக்கை வாரியம் (சென்சார் போர்டு) இந்த படத்துக்கு சான்றிதழை வழங்காததால் தற்போது இந்த விவகாரம் நீதிமன்றத்துக்கு சென்றுள்ளது.
இதனால், இந்த திரைப்படம் வெளியாகும் தேதியை பட நிறுவனம் தள்ளி வைத்துள்ளது.
நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படத்துக்கு சிக்கல் எழுந்தது போன்று, இந்தி எதிர்ப்பு போராட்ட வரலாற்று பின்னணி கதையை மையமாக வைத்து நடிகர் சிவகார்த்திக்கேயன் நடித்துள்ள ‘பராசக்தி’ திரைப்படத்துக்கும் தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல் எழுந்தது. எனவே திட்டமிட்டப்பட்டி இந்த திரைப்படம் இன்று வெளியாகுமா? என்ற கேள்விகள் எழுந்தன.
இந்த நிலையில் இந்த படத்தில் இடம் பெற்றிருந்த 25 வசனங்களை ‘கட்’ செய்தும், சில வசனங்களை ‘மியூட்’ (சப்தம் இருக்காது) செய்தும், அண்ணாவின் முழக்கம் தொடர்பான வசனங்களை நீக்கியும், இந்த திரைப்படத்துக்கு மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் சான்றிதழ் வழங்கியதாக கூறப்படுகிறது.
மு.க.ஸ்டாலின் கண்டனம்
இந்த நிலையில் மத்திய அரசின் திரைப்பட தணிக்கை வாரியத்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட சமூக வலைதள பதிவில், ‘சி.பி.ஐ., அமலாக்கத்துறை, வருமான வரித்துறை வரிசையில் சென்சார் போர்டும் மத்திய பா.ஜ.க. அரசின் புதிய ஆயுதமாக மாறியுள்ளது. இதற்கு கடுமையான கண்டனங்கள்’ என கூறியுள்ளார்.
‘ஜனநாயகன்’ திரைப்படத்தை வைத்து பா.ஜ.க. அரசியல் செய்கிறது என்று நடிகர் விஜய்க்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், அகில இந்திய தொழில் வல்லுனர்கள் காங்கிரஸ் தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி, காங்கிரஸ் எம்.பி.க்கள் ஜோதிமணி, மாணிக்கம் தாகூர் ஆகியோர் குரல் கொடுத்திருந்தனர்.
இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
![]()





