செய்திகள்

செட் வேகத்தில் உயர்ந்த மல்லிகை பூ விலை: கிலோ ரூ. 10 ஆயிரத்திற்கு விற்பனை

Makkal Kural Official

சென்னை, ஜன. 10:

திண்டுக்கல் பகுதியில் கடும் பனிப்பொழிவு காரணமாக மதுரை மல்லிகை பூ உற்பத்தி வெகுவாகக் குறைந்துள்ளது. இதனால், நிலக்கோட்டை மலர் சந்தையில் பூக்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு, ஏற்றுமதி செய்யப்படும் மல்லிகைப்பூவின் விலை கிலோ ரூ.10,000 தாண்டியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வத்தலக்குண்டு பகுதியில் ஐ.எஸ்.ஓ தர சான்று கொண்ட மதுரை மல்லிகை பூ அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த ஒரு மாத காலமாக நிலவி வரும் அதிகாலை பனிப்பொழிவு காரணமாக மல்லிகைச் செடிகளில் மொட்டுகள் அரும்பு விடாமல் மல்லிகை பூ உற்பத்தி குறைந்தே காணப்பட்டு வருகிறது.

20 கிலோ உற்பத்தி செய்த மல்லிகை தோட்டங்களில் தற்போது 200 கிராம் பூக்கள் மட்டுமே உற்பத்தி ஆகின்றன. இதனால் நிலக்கோட்டை மலர் சந்தைக்கு கொண்டு வரப்படும் மல்லிகை பூக்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. இதனிடையே சிங்கப்பூர், மலேசியா, ஐக்கிய அரபு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மல்லிகைப்பூ ஒரு கிலோ ரூபாய் 10 ஆயிரத்தை தாண்டியது. பூக்கள் கிடைக்காததால் ஏராளமான வெளிநாடு ஏற்றுமதி ஆர்டர்கள் ரத்து செய்யப்பட்டு இருப்பதாக பூ ஏற்றுமதியாளர்கள் கூறுகின்றனர்.

இதேபோல் செடியில் இருந்து பறித்து வரப்படும் அரும்பு மொட்டுக்களுக்கும் நல்ல விலை கிடைத்துள்ளது. ஒரு கிலோ அரும்பு மொட்டுமல்லி ரூ. 5000 முதல் 7500 வரை விற்பனையானது. தொடர்ந்து வரத்து குறைந்து காணப்பட்டால் மல்லிகை பூ விலை இன்னும் பல மடங்கு உயரும் என ஏற்றுமதியாளர்கள் கூறுகின்றனர்.

இதேபோல் முல்லைப் பூ ரூபாய் 1800 வரையிலும், பிச்சிப்பூ 1600 வரையிலும் விற்பனையானது. வரத்து குறைந்த போதும் கொண்டுவரப்படும் பூக்களுக்கு நல்ல விலை கிடைத்திருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *