செய்திகள்

செங்கோட்டையன் தொகுதியில் எடப்பாடிக்கு உற்சாக வரவேற்பு

Makkal Kural Official

ஈரோடு, செப்.23–

செங்கோட்டையன் தொகுதிக்கு வந்த எடப்பாடி பழனிசாமிக்கு இன்று தொண்டர்களும், பொதுமக்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அண்ணா தி.மு.க பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் எழுச்சி பயணம் மேற்கொண்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

அதன்படி நீலகிரி மாவட்டத்தில் இன்று காலை நடைபெறும் பிரச்சாரத்தில் கலந்து கொள்வதற்காக இன்று காலை 6 மணி அளவில் சேலத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து எடப்பாடி பழனிசாமி காரில் புறப்பட்டார்.

ஈரோடு மாவட்டம் பவானி வழியாக இன்று காலை 7 மணி அளவில் கோபிசெட்டிபாளையம் பஸ் நிலையம் அருகே வந்தார். அங்கு எடப்பாடி பழனிசாமிக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கும் வகையில் கவுந்தப்பாடியில் இருந்து கோபி செட்டிபாளையம் பஸ் நிலையம் வரை சாலையின் இருபுறம் அண்ணா தி.மு.க கட்சி கொடிகள் கட்டப்பட்டிருந்தன.

ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் செல்வராஜ் எம்.எல்.ஏ தலைமையில், ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் கே.சி. கருப்பணன் எம்.எல்.ஏ, ஜெயக்குமார் எம்.எல்.ஏ, கோபி நகரச் செயலாளர் பிரிணியோ கணேஷ் முன்னிலையில் ஆயிரக்கணக்கான அண்ணா தி.மு.க.வினர் திரண்டு வந்து மேள தாளங்கள் முழங்க எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

கூட்டத்தை பார்த்து உற்சாகமடைந்த எடப்பாடி பழனிசாமி காரை விட்டு கீழே இறங்கி நிர்வாகிகள், தொண்டர்கள் வரவேற்பை ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து காரில் இருந்தவாறும் தொண்டர்களின் நோக்கி கையை அசைத்தார். அப்போது கூடி இருந்தவர்கள் எடப்பாடி பழனிசாமி வாழ்க என கோஷம் எழுப்பினர்.

செங்கோட்டையன் தொகுதியில்

உற்சாக வரவேற்பு

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தொகுதியில் ஆயிரக்கணக்கான அண்ணா தி.மு.க.வினர் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளித்ததால் எடப்பாடி பழனிசாமி உற்சாகம் அடைந்தார்.

சுமார் 30 நிமிடமாக கோபிசெட்டிபாளையம் பஸ் நிலையத்தில் இருந்த எடப்பாடி பழனிசாமி தொண்டர்களின் வரவேற்பை ஏற்று அதன் பிறகு அங்கிருந்து காரில் சத்தியமங்கலம் புறப்பட்டு சென்றார். அங்கும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. உடன் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இருந்தார். இதனை தொடர்ந்து மேட்பாளையம் வழியாக எடப்பாடி நீலகிரி வந்தடைந்தார். அங்கு கூடியிருந்த மக்கள் மத்தியில் எடப்பாடி பழனிசாமி பேசினார். அவர் பேசியதாவது:–

விலைவாசி உயர்வு

தி.மு.க. ஆட்சியில் விலைவாசி விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துவிட்டது. அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. வேலைவாய்ப்பு குறைந்துவிட்டது, மக்களின் செலவுகள் பன்மடங்கு அதிகரித்துவிட்டன.

குன்னூருக்கு தி.மு.க. ஆட்சியில் எந்தவொரு வளர்ச்சித் திட்டமும் செயல்படுத்தப்படவில்லை. நீலகிரி மாவட்டத்தை அம்மா மிகவும் நேசித்தார். ஆனால், தி.மு.க. ஆட்சியில் இந்த மாவட்டத்தின் வளர்ச்சி முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது

தி.மு.க. ஆட்சியில் உள்ளூர் மக்களின் பொருளாதார நிலை மோசமடைந்தது. 2026ல் அண்ணா தி.மு.க. ஆட்சிக்கு வந்தால், நீலகிரியின் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கு முக்கிய முடிவுகளை எடுப்போம். நீலகிரி வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு விதிக்கப்பட்ட இ–பாஸ் முறையை தளர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். இது, சுற்றுலாவை ஊக்குவித்து, உள்ளூர் பொருளாதாரத்தை மேம்படுத்தும்.

தி.மு.க. அரசு ஏழைகளைப் பற்றியோ, விலைவாசி உயர்வைப் பற்றியோ கவலைப்படவில்லை. இவர்களின் ஆட்சி முடிவடைய இன்னும் 7 மாதங்கள் தான் உள்ளது. 2026 தேர்தலில் அண்ணா தி.மு.க. நிச்சம் வெற்றி பெறும்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அண்ணா தி.மு.க ஒருங்கிணைப்பை வலியுறுத்தி எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கருத்துக்களை வெளியிட்டார். இதையடுத்து உடனடியாக செங்கோட்டையன் கட்சி பொறுப்புகளிலிருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். அப்போது அண்ணா தி.மு.க ஒருங்கிணைக்காமல் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணத்தில் பங்கேற்க மாட்டேன் என செங்கோட்டையன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் கோபி செட்டிபாளையம் வந்த எடப்பாடி பழனிசாமிக்கு வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சியை புறக்கணிக்கும் வகையில் நேற்று நள்ளிரவே செங்கோட்டையன் சென்னை சென்று விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *