சென்னை, ஜூலை 10–
அரக்கோணம் – செங்கல்பட்டு வழித்தடத்தில் உள்ள லெவல் கிராசிங்கில் பணியின் போது தூங்கிய 2 கேட் கீப்பர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
கடலூா் அருகே உள்ள தனியார் சி.பி.எஸ்.இ. பள்ளிக்கு சொந்தமான வேன் ஒன்று நேற்று முன்தினம் காலை கடலூர் முதுநகர் அடுத்த செம்மங்குப்பம் ரெயில்வே கேட்டை கடக்க முயன்றபோது விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறை நோக்கி வந்த பயணிகள் ரெயில், அந்த வேன் மீது மோதியது. இந்த கோர விபத்தில் வேனில் இருந்த 3 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்துக்கு காரணமாக கூறப்படும் கேட் கீப்பர் பங்கஜ் சர்மா பணியிடை நீக்கம் செய்யப்பட்டதுடன், அவரை சிதம்பரம் ரெயில்வே போலீசார் கைது செய்தனர். இந்த விபத்தை தொடர்ந்து செம்மங்குப்பம் ரெயில்வே கேட்டுக்கு தமிழரை தான் கேட் கீப்பராக திருத்தணி பகுதியை சேர்ந்த ஆனந்தராஜ் (வயது33) என்பவர் புதிய கேட் கீப்பராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்தை தொடர்ந்து நாடு முழுவதும் இருக்கும் ரயில்வே கேட்டுகளில் அவ்வப்போது சோதனை நடத்த ரயில்வே அதிகாரிகளுக்கு ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து நேற்று நள்ளிரவு தெற்கு ரயில்வே சென்னை கோட்ட முதுநிலை பொறியாளர் ( மேற்கு ) அரக்கோணம் -– செங்கல்பட்டு ரயில் மார்க்கத்தில் உள்ள அனைத்து ரெயில்வே கேட்டுகளிலும் திடீர் சோதனை நடத்தினார். அப்போது தக்கோலம் ரயில் நிலையம் அருகில் உள்ளரெ யில்வே கேட் எண் 44 இல் பணியில் இருந்த ஊழியர் கார்த்திகேயன் தூங்கிக் கொண்டிருந்தார். இதே போல் சேந்தமங்கலம் ரெயில்வே கேட் எண் 40 பணியில் இருந்த ஊழியர் ஆஷிஷ் குமார் தூங்கிக் கொண்டிருந்தார்.
இதனால் ஊழியர்கள் கார்த்திகேயன் மற்றும் ஆஷிஷ் குமார் இருவரையும் பணியிடை நீக்கம் செய்து தெற்கு ரெயில்வே சென்னை கோட்ட முதுநிலை பொறியாளர் ( மேற்கு ) உத்தரவிட்டார். தொடர்ந்து இது போன்ற சோதனைகள் அனைத்து ரயில் மார்க்கங்களிலும் அடிக்கடி நடைபெறும் என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
![]()





