செய்திகள் நாடும் நடப்பும்

சுப்ரீம் கோர்ட்டின் 53வது தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் பதவி ஏற்றார்

Makkal Kural Official

புதுடெல்லி, நவ.24:

சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக இன்று சூர்யகாந்த் பதவி ஏற்றார். அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் நேற்றுடன் ஓய்வு பெற்ற நிலையில், 53வது தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் இன்று பொறுப்பேற்றார். டெல்லி ஜனாதிபதி மாளிகையில் உள்ள தர்பார அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

பதவியேற்பு விழாவில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், டெல்லி துணைநிலை கவர்னர், டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா ஆகியோர் பங்கேற்றனர். மேலும் மலேசியா, இலங்கை உள்ளிட்ட 6 நாடுகளைச் சேர்ந்த நீதிபதிகள் பங்கேற்றனர்.

நீதிபதி சூர்யகாந்த் அரியானாவில் 1962ம் ஆண்டு பிப்ரவரி 10ம் தேதி பிறந்தார். அவருக்கு வயது 63.

ஹிஸார் சட்டக் கல்லூரியில் சட்டப்படிப்பை முடித்த சூர்யகாந்த், அதன் பின்னர் 1984ம் ஆண்டு வக்கீலாக தனது நீதித்துறை வாழ்க்கையை தொடங்கினார். அரியானா மாநில அரசு சார்பில் வக்கீலாகவும், பஞ்சாப் மற்றும் அரியானா மாநில ஐகோர்ட்டில் நீதிபதியாகவும் பணியாற்றி உள்ளார்.

2018ம் ஆண்டு ஹிமாச்சலப் பிரதேச ஐகோர்ட் தலைமை நீதிபதியாக பதவி வகித்தார்.

கடந்த 2019ம் ஆண்டு மே 24ம் தேதி சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார். தலைமை நீதிபதியாக இன்று தன் பணியை துவங்கிய சூர்ய காந்த், 2027ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 9ம் தேதி வரை 15 மாதங்கள் இப்பதவியில் இருப்பார்.

பிரதமர் மோடி வாழ்த்து

சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக பதவியேற்ற சூர்யகாந்துக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து வெளியிட்டுள்ள பதிவில், “தலைமை நீதிபதியாக பதவியேற்றிருக்கும் சூர்யகாந்தின் எதிர்கால பயணம் சிறக்க வாழ்த்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

1000 வழக்குகளில்

தீர்ப்பு வழங்கியவர்

உயர் நீதி​மன்​றம் முதல் சுப்ரீம் கோர்ட் வரை சுமார் 1,000 வழக்​கு​களில் அவர் தீர்ப்பு வழங்கி உள்​ளார்.

சுப்ரீம் கோர்ட் பதவிக்காலத்தில் பேச்சு சுதந்திரம், ஜனநாயகம், ஊழல், சுற்றுச்சூழல், பாலின சமத்துவம் தொடர்பான பல்வேறு குறிப்பிடத்தக்க தீர்ப்புகளை நீதிபதி சூர்ய காந்த் வழங்கியுள்ளார். மாநில சட்டசபைகளால் நிறைவேற்றப்படும் மசோதாக்கள் குறித்து ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவரின் அதிகாரங்கள் தொடர்பான சமீபத்திய வழக்கை விசாரிக்கும் அரசமைப்பு அமர்வில் நீதிபதி சூர்ய காந்த் இடம்பெற்றிருந்தார்.

மேலும், பழமையான தேச துரோகச் சட்டம் மறு ஆய்வு செய்யப்படும் வரை, அதன்கீழ் புதிய வழக்குகள் பதிவு செய்யப்படக் கூடாது. ஜம்மு – காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது. பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தத்தின்போது நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் விவரங்களை வெளியிட வேண்டும். உச்சநீதிமன்ற வழக்குரைஞர் சங்கம் உள்பட அனைத்து வழக்குரைஞர் சங்கங்களிலும் மூன்றில் ஒரு பங்கு இடங்களைப் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்புகளை அளித்த அமர்வுகளில் நீதிபதி சூர்ய காந்த் இடம்பெற்றிருந்தார்.

பெகாசஸ் உளவு மென்பொருள் வழக்கில் சட்டவிரோதக் கண்காணிப்பு குறித்த குற்றச்சாட்டுகளை விசாரிக்க இணைய நிபுணர்கள் அடங்கிய ஒரு குழுவை நியமித்த அமர்வில் இடம்பெற்றிருந்த நீதிபதி சூர்ய காந்த், ‘தேச பாதுகாப்பின் பெயரில் அரசுக்கு எப்போதும் சலுகை அளிக்க முடியாது’ என்று வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.

மேலும், முப்படையினருக்கான ‘ஒரே பதவி; ஒரே ஓய்வூதியம்’ திட்டத்தை அரசமைப்புச் சட்டப்படி செல்லுபடியாகும் என்று உறுதி செய்ததோடு, ஆயுதப் படைகளில் உள்ள பெண் அதிகாரிகளின் பணி நிரந்தரமாக்குவதில் சமத்துவம் கோரும் மனுக்களையும் இவர்தொடர்ந்து விசாரித்து வருகிறார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *