புதுடெல்லி, ஆக. 25–
இந்தியா கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளரும் முன்னாள் சுப்ரீம் கோர்ட் நீதிபதியுமான சுதர்சன் ரெட்டியை ‘‘நக்சல் ஆதரவாளர்’’ என உள்துறை அமைச்சர் அமித்ஷா குறிப்பிட்டதற்கு 18 பேர் கொண்ட ஓய்வுபெற்ற நீதிபதிகள் குழு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
துணை ஜனாதிபதி தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராக சி.பி. ராதாகிருஷ்ணனும், இந்தியா கூட்டணி வேட்பாளராக சுதர்சன் ரெட்டியும் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில் சுதர்சன் ரெட்டி, நக்சலைட்டுகளை ஆதரிப்பவர் என உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றஞ்சாட்டி பேசினார்.
கேரளாவின் கொச்சியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இதுபற்றி அவர் பேசுகையில், ‘சுதர்சன் ரெட்டி நச்சல் பயங்கரவாதத்துக்கு உதவியவர். சல்வா ஜூடும் தீர்ப்பை வழங்கினார். அந்த தீர்ப்பு வழங்கப்படாவிட்டால், நக்சல் பயங்கரவாதம் 2020ம் ஆண்டே முடிவுக்கு வந்திருக்கும். நக்சல் சித்தாந்தத்தால் உந்தப்பட்டு இந்த தீர்ப்பை வழங்கினார்’ எனக் குற்றஞ்சாட்டினார்.
இந்த விமர்சனத்துக்கு கண்டனம் தெரிவித்து ஓய்வுபெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் ஏ.கே. பட்நாயக், அபய் ஓகா, கோபால கெளடா, விக்ரம்ஜித் சென், குரியன் ஜோசப், மதன் பி. லோகூர், ஜே. செலமேஸ்வர் உள்பட 18 நீதிபதிகள் அறிக்கை வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில் அவர்கள் கூறியிருப்பதாவது:–
”சல்வா ஜூடும் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தவறாக புரிந்துகொண்டது துரதிர்ஷ்டவசமானது. இந்த தீர்ப்பு வெளிப்படையாகவும் அல்லது எவ்விதத்திலும் நக்சல் மற்றும் அதன் சித்தாந்தத்தை ஆதரிக்கவில்லை. துணை ஜனாதிபதி பதவிக்கான பிரச்சாரம் சித்தாந்த ரீதியாக இருக்கலாம், ஆனால் அதை நாகரிகமாகவும் கண்ணியமாகவும் நடத்த வேண்டும்.
இரு வேட்பாளர்களின் சித்தாந்தத்தை விமர்சிப்பதைத் தவிர்க்க வேண்டும். அரசியலில் உயர் பதவியில் இருக்கும் ஒருவர் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை பாரபட்சமாக தவறாகப் புரிந்துகொள்வது, நீதித்துறையின் சுதந்திரத்தையே உலுக்கி எடுக்கும் வகையில் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் மீது ஒருவித அச்சத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. துணை ஜனாதிபதி பதவிக்கு மரியாதை செலுத்தும் வகையில், அவதூறுகளைத் தவிர்ப்பது புத்திசாலித்தனமாக இருக்கும்”.
இவ்வாறு அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அமித்ஷாவின் இந்த பேச்சுக்கு பதிலளித்து சுதர்சன் ரெட்டி பேசும்போது, இந்த தீர்ப்பை வழங்கியது தான் அல்ல. நாட்டின் உச்சபட்ச கோர்ட் இந்த தண்டனையை வழங்கியுள்ளது. முழுமையாக தீர்ப்பை அமித்ஷா படித்திருந்தால், அதன் விவரங்களை அவர் புரிந்திருக்க கூடும் என கூறினார்.
![]()





