- தீபாவளிக்கு பெரிய பரிசு காத்திருக்கிறது * ஜிஎஸ்டி வரி குறைக்கப்படும்
- ரூ.1 லட்சம் கோடியில் புதிய வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு திட்டம்
நமது ஆயுதப் படைகளால் பாகிஸ்தானில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. அணு ஆயுத மிரட்டலுக்கு எல்லாம் இந்தியா அஞ்சாது, எந்த மிரட்டலுக்கும் நாம் அடிபணிய மாட்டோம் என்று சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி கூறினார்.
நாட்டு மக்களுக்கு தீபாவளியன்று மிகப்பெரிய பரிசு காத்திருக்கிறது. சிறு, குறு தொழில்களுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரி குறைக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் 79வது சுதந்திர தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தலைநகர் டெல்லியில் அமைந்துள்ள செங்கோட்டையில் செங்கோட்டையில் 12-வது முறையாக தேசியக் கொடியை ஏற்றிவைத்த பிரதமர் மோடி, நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
அவர் பேசியதாவது:–
என் அன்பான இந்திய குடிமக்களே, இந்த சுதந்திர தின விழா பெருமை மற்றும் மகிழ்ச்சி நிறைந்த தருணம் ஆகும். இது 140 கோடி மக்களின் கொண்டாட்டம்.
பாலைவனங்களாக இருந்தாலும் சரி, இமயமலையின் சிகரங்களாக இருந்தாலும் சரி, கடலின் கரைகளாக இருந்தாலும் சரி, பரபரப்பான நகரங்களாக இருந்தாலும் சரி, நாடு முழுவதும் ஒரே குரல் ஒலிக்கிறது: நாம் அனைவரும் இந்தியாவை நம் உயிருக்கும் மேலாக நேசிக்கிறோம். 1947-ம் ஆண்டு, எல்லையற்ற சாத்தியக்கூறுகளுடனும், எண்ணற்ற ஆயுதங்களின் வலிமையுடனும், நமது நாடு சுதந்திரம் பெற்றது. ஆனால் சவால்கள் இன்னும் அதிகமாக இருந்தன.
மதிப்புக்குரிய மகாத்மாவின் கொள்கைகளைப் பின்பற்றி, அரசியலமைப்புச் சபை உறுப்பினர்கள் ஒரு மிக முக்கியமான பொறுப்பை நிறைவேற்றினர். கடந்த 75 ஆண்டுகளாக, இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டம் ஒரு வழிகாட்டும் கலங்கரை விளக்கமாக நின்று, நமது பாதையை ஒளிரச் செய்து வருகிறது,
நாட்டுக்கு வழிகாட்டும் அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றியவர்களுக்கு எனது செங்கோட்டையில் இருந்து மரியாதைக்குரிய அஞ்சலியைச் செலுத்துகிறேன். இந்த சுதந்திர தினத்துக்காக செங்கோட்டையில் கூடியிருக்கும் ‘மினி இந்தியா’வை நான் காண்கிறேன்.
ஏப்ரல் 22ம் தேதி, எல்லை தாண்டி வந்த பயங்கரவாதிகள், அப்பாவி பொதுமக்களை அவர்களின் மதத்தை கேட்ட பிறகு கொன்றனர். இதனால் முழு தேசமும் கோபமடைந்தது. ஆபரேஷன் சிந்தூர் மூலம் நமது வீரர்கள் எதிரிகளை கற்பனைக்கு அப்பாற்பட்ட பலத்துடன் பதிலளித்தனர். நமது துணிச்சலான வீரர்களின் வீரத்துக்கு நான் தலை வணங்குகிறேன். ஆயுதப் படைகளுக்கு நாங்கள் சுதந்திரம் கொடுத்தோம். பல தசாப்தங்களாக செய்யப்படாததை நமது படைகள் செய்தன. பாகிஸ்தானுக்குள் நூற்றுக்கணக்கான கிலோ மீட்டர்கள் நுழைந்து அவர்களின் பயங்கரவாத தலைமையகத்தை தரைமட்டமாக்கினோம்.
ரத்தமும் தண்ணீரும் ஒன்றாக பாய முடியாது என்று இந்தியா தீர்மானித்தது. சிந்து நதி ஒப்பந்தம் எவ்வளவு அநீதியானது மற்றும் ஒருதலைப்பட்சமானது என்பதை நம் நாட்டு மக்கள் தெளிவாகப் புரிந்து கொண்டுள்ளனர். இந்தியாவில் உருவாகும் ஆறுகளின் நீர் நமது எதிரிகளின் வயல்களுக்கு நீர்ப்பாசனம் செய்து வருகிறது. ஆனால், நமது சொந்த விவசாயிகள் தண்ணீரின்றி தாகத்தில் உள்ளனர். கடந்த ஏழு தசாப்தங்களாக எனது நாட்டின் விவசாயிகளுக்கு நினைத்துப் பார்க்க முடியாத சேதத்தை ஏற்படுத்திய ஒரு ஒப்பந்தம் இது. இப்போது, தண்ணீரின் மீதான உரிமை இந்திய விவசாயிகளுக்கு மட்டுமே சொந்தமானது.
அணு ஆயுத மிரட்டல் நீண்ட காலமாகத் தொடர்கிறது. ஆனால் அது இனி பொறுத்துக் கொள்ளப்படாது. நமது எதிரிகள் இதுபோன்ற முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டால், நமது ஆயுதப் படைகள் தங்கள் விருப்பப்படி அவர்கள் விரும்பும் நேரத்தில் அவர்கள் நிர்ணயித்த இலக்குகளை அடைவதன் மூலம் பதிலடி கொடுக்கும். பொருத்தமான பதிலடி கொடுக்க நாங்கள் தயாராக உள்ளோம்.
நமது ஆயுதப் படைகளால் பாகிஸ்தானில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. ஒவ்வொரு நாளும் புதிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. அணு ஆயுத அச்சுறுத்தல்களை இனி பொறுத்துக்கொள்ள மாட்டோம் என்று இந்தியா முடிவு செய்துள்ளது. எந்த மிரட்டலுக்கும் நாம் அடிபணிய மாட்டோம்.
கடந்த சில நாட்களாக, இயற்கை பேரழிவுகள், நிலச்சரிவுகள், மேகவெடிப்புகள் மற்றும் பல பேரிடர்களை நாம் சந்தித்து வருகிறோம். பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுதாபங்கள். மீட்பு நடவடிக்கைகள், நிவாரண முயற்சிகள் மற்றும் மறுவாழ்வுப் பணிகளில் மாநில அரசுகளும் மத்திய அரசும் முழு பலத்துடன் இணைந்து செயல்படுகின்றன
இந்தாண்டு இறுதிக்குள் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட குறைமின் கடத்தி சந்தைக்கு வரவுள்ளது. நமது போர் விமானங்களுக்கு இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட என்ஜின்களை உருவாக்க வேண்டும் என்று பொறியியல் வல்லுநர்களையும் இளம் விஞ்ஞானிகளையும் கேட்டுக் கொள்கிறேன். சுயசார்பு இந்தியாவே வளர்ந்த இந்தியாவின் அடிப்படையாகும். ஒருவர் மற்றவரை அதிகம் எதிர்பார்த்திருந்தால் சுதந்திரம் என்பது மங்கத் தொடங்கிவிடும். கடந்த தலைமுறை சுதந்திரத்துக்கு போராடியது, இந்த தலைமுறை சுயசார்ப்புக்கு போராட வேண்டும்.நாட்டு மக்களுக்கு தீபாவளியன்று மிகப்பெரிய பரிசு காத்திருக்கிறது. சிறு, குறு தொழில்களுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரி குறைக்கப்படும். ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் சிறு, குறு நிறுவனங்களுக்கு பலன் அளிக்கும். அதற்கான குழு அமைக்கப்பட்டு உள்ளது. ஜிஎஸ்டி குறைப்பால் ஏழைகள், பெண்கள், விவசாயிகளின் நிதி நிலைமை மேம்படும்.
லட்சாதிபதி பெண்களின் எண்ணிக்கை 2 கோடியில் இருந்து மூன்று கோடியாக உயரும். இளைஞர்களுக்காக ரூ.1 லட்சம் கோடியில் புதிய வேலைவாய்ப்பு ஊக்குவிப்புத் திட்டம் தொடங்கப்படும். புதிய வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு திட்டம் இன்று முதல் அமலுக்கு வருகிறது. வேலைவாய்ப்பு ஊக்குவிப்புத் திட்டம் மூலம் 3.5 கோடி இளைஞர்களுக்கு பலன் கிடைக்கும். புதிதாக தனியார் துறையில் பணியில் இணையும் இளைஞர்களுக்கு ரூ.15 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும்.
நாட்டில் 3ல் ஒருவர் உடல் பருமனால் பாதிக்கப்படும் என நிபுணர்கள் கூறுகின்றனர். இந்தியாவில் மிகப்பெரிய சவாலாக மாறியுள்ள உடல் பருமன் கவலை அளிக்கிறது. மொழிகள் குறித்து பெருமை கொள்ள வேண்டும். மொழி வளர்ச்சியே அறிவு வளர்ச்சி. தேச சேவையில் 100 ஆண்டுகளை ஆர்எஸ்எஸ் நிறைவு செய்துள்ளது. தேசத்திற்கான உயிர் தியாகங்களை ஆர்எஸ்எஸ் செய்துள்ளது.
ககன்யான் திட்டத்தில் இந்தியா தீவிரமாக செயல்பட்டு வருகிறது. நமது நாட்டின் தலைவிதியை மாற்ற நாம் ஒன்றிணைய வேண்டும். இளைஞர்களிடம் நான் வேண்டுக்கோள் விடுக்கிறேன். தேசிய மாற்றத்திற்கான இந்த நோக்கத்திற்கு முன்னோக்கி செல்ல நாம் அனைவரும் பங்களிக்க வேண்டும். பழங்குடியினரின் நிலத்தை ஊடுருவல்காரர்கள் அபகரிக்க இந்தியா அனுமதிக்காது.
உற்பத்தியில் உலக அளவில் விவசாயிகள் சாதனை புரிந்து வருகின்றனர். மீனவர்கள், விவசாயிகள் நலனில் ஒருபோதும் சமரசம் இல்லை. மக்களுக்காக செயல்படுவதே அரசு, அதை நோக்கியே பயணிக்கிறோம். பருப்பு உற்பத்தியில் முதல் இடம். அரிசி, கோதுமை உற்பத்தியில் இந்தியா 2ம் இடத்தில் உள்ளது. இப்பொழுது அரசும், திட்டங்களும் மக்களின் வீடு தேடி வருகிறது. பணவீக்கம் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்திய பொருளாதாரம் வலுவாக உள்ளது. இந்தியாவில் 25 கோடி மக்களின் வறுமை ஒழிக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு பி்ரதமர் மோடி பேசினார்.
![]()





