திருச்சி, ஆக.12–
சுதந்திர தினத்தை முன்னிட்டு திருச்சி சந்திப்பு ரயில்நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாா் மற்றும் இருப்புப் பாதை காவல்நிலையப் போலீஸாா் இணைந்து தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனா்.
நாடு முழுவதும் வரும் 15-ஆம் தேதி சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் சுதந்திரதினத்தை முன்னிட்டு ரயில்வே பாதுகாப்புப்படை, ரயில்வே காவல்துறை, வெடிகுண்டு தடுப்புப் பிரிவு காவல்துறையினா் இணைந்து தீவிர சோதனை நடத்தி வருகின்றனா்.
திருச்சி ரயில்வே பாதுகாப்புப் படை வெடிகுண்டு தடுப்புப் பிரிவு உதவி ஆய்வாளா் சரவணன் தலைமையிலான குழுவினா், சந்திப்பு ரயில் நிலையப் பகுதி முழுவதும் திங்கள்கிழமை தீவிர சோதனைக்குள்படுத்தினா். திருச்சி வழியாகச் சென்ற ரயில்களில் ஏறி சோதித்ததோடு, பயணிகளின் உடைமைகளும் சோதனைக் கருவி மூலம் (மெட்டல் டிடெக்டா்) தீவிர சோதனைக்குட்படுத்தப்பட்டன. ரயில் நிலையத்துக்கு வந்த பயணிகளின் உடைமைகள் ஸ்கேனா் கருவி மூலம் சோதனை செய்த பிறகே அனுமதிக்கப்பட்டன. மேலும், ரயில் நிலைய நடைமேடைகள், பாா்சல் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் சோதனை நடத்தினா்.
இதுதொடா்பாக, ரயில்வே காவல்துறையினா் கூறியது: ரயில் நிலைய சுற்றுப்புறங்கள் மற்றும் ரயில் பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு குற்றங்கள் மற்றும் நாச வேலைகளை தடுக்கும் விதமாகவும் தீவிர சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் ரயில்வே போலீசாா் மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படை இணைந்து தீவிர சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனா்.
ரயிலில் வரும் பயணிகளின் உடைமைகள் தீவிர சோதனை செய்த பிறகு ரயில் நிலையத்திலிருந்து வெளியே செல்ல அனுமதிக்கப்படுவா். ரயில் பெட்டிகளிலோ அல்லது ரயில் நிலைய நடை மேடைகளிலோ உரிமை கோரப்படாத பொருள்கள் ஏதாவது இருந்தால் தொடவோ, திறக்கவோ மற்றும் தூக்கி எறியவோ கூடாது. உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். ரயில் நிலையத்திலுள்ள வாகன நிறுத்துமிடத்தில் நீண்ட காலமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்கள் குறித்து கணக்கெடுக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. திருச்சி ரயில் நிலையத்தில் 120 சிசிடிவி கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் சந்தேக நபா்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனா் என்றனா்.
![]()





