புதுடில்லி: டிச. 18–
நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளில் காத்திருக்கும் நேரத்தை முற்றிலுமாக நீக்கும் வகையில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) அடிப்படையிலான புதிய டிஜிட்டல் கட்டண வசூல் தொழில்நுட்பத்தை 2026ஆம் ஆண்டு இறுதிக்குள் அறிமுகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் பலவழிப் பாதை தடையற்ற சுங்கச்சாவடி அமைப்பு (Multi-Lane Free Flow – MLFF) மற்றும் முழுமையான ஏஐ தொழில்நுட்பம் இணைந்த புதிய முறை நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் என கூறினார். இந்த தொழில்நுட்பத்தின் மூலம் வாகனங்கள் சுங்கச்சாவடிகளில் நிற்காமல் எந்தவித தாமதமும் இன்றி நேரடியாகச் செல்ல முடியும் என்றும் அவர் விளக்கினார்.
புதிய அமைப்பு செயல்பாட்டுக்கு வந்தால் சுங்கச்சாவடிகளில் ஏற்படும் நீண்ட வரிசைகள் முற்றிலும் நீங்கும். இதன் மூலம் பயணிகளின் நேரம் மட்டுமல்லாமல் ஆண்டுதோறும் சுமார் ரூ.1,500 கோடி மதிப்புள்ள எரிபொருளும் சேமிக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார். அதே நேரத்தில் அரசின் சுங்க வருவாய் ஆண்டுக்கு சுமார் ரூ.6,000 கோடி வரை அதிகரிக்கும் எனவும் அவர் கூறினார்.
முன்னதாக, சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்த 3 முதல் 10 நிமிடங்கள் வரை நேரம் எடுத்துக் கொண்டதாகவும் ஃபாஸ்டேக் அறிமுகத்துக்குப் பிறகு அந்த நேரம் 60 வினாடிகளாக குறைந்துள்ளதாகவும் கட்கரி நினைவூட்டினார். ஃபாஸ்டேக் முறையால் அரசின் வருவாய் ஏற்கனவே ரூ.5,000 கோடி அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஃபாஸ்டேக்கிற்கு அடுத்த கட்டமாக அறிமுகமாகும் MLFF தொழில்நுட்பத்தில் கார்கள் மணிக்கு அதிகபட்சம் 80 கிலோமீட்டர் வேகத்தில் சுங்கச்சாவடிகளை கடக்க முடியும். சுங்கச்சாவடிகளில் காத்திருக்கும் நேரத்தை பூஜ்ஜியமாக மாற்றுவதே அரசின் முக்கிய இலக்கு என்றும் 2026ஆம் ஆண்டுக்குள் இந்தத் திட்டம் முழுமையாக நிறைவேற்றப்படும் என்றும் அமைச்சர் நிதின் கட்கரி உறுதிப்படுத்தினார்.
![]()





