வாஷிங்டன், ஆக. 12–
சீனாவுடனான வர்த்தக போர் நிறுத்தத்தை மேலும் 90 நாட்கள் நீட்டிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்காவின் அதிபராக பதவியேற்றது முதல் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வரும் டிரம்ப், கிட்டத்தட்ட 90க்கும் மேற்பட்ட நாடுகளுக்கான இறக்குமதி வரியை உயர்த்தினார். ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய்யை இந்தியா கொள்முதல் செய்வதாக கூறி 50 சதவீதம் வரை வரி உயர்த்துவதாக அறிவித்தார்.
சீனாவுக்கு 30 சதவிகிதம் வரி விதிக்கப்பட்ட நிலையில், அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சீனாவும் வரியை உயர்த்தியது. இதனைத் தொடர்ந்து, சீனாவுக்கு 145 சதவிகிதம் வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில், உடன்பாடு எட்டப்பட்ட நிலையில், வரி விதிப்பை 90 நாள்களுக்கு நிறுத்திவைப்பதாக அதிபர் டிரம்ப் அறிவித்திருந்தார்.இந்த கெடு இன்றுடன் நிறைவடைந்த நிலையில், சீனா மீதான வரி விதிப்பை மேலும் 90 நாள்களுக்கு, நவம்பர் மாதம் வரை நிறுத்தி வைப்பதாக அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
இந்த விவரத்தை அவர் தமது ட்ரூத் சோஷியல் மீடியா பதிவில் வெளியிட்டு உள்ளார். அதில் டிரம்ப் கூறியிருப்பதாவது:–
சீனா மீதான வரி இடை நீக்கத்தை மேலும் 90 நாட்களுக்கு நீட்டிப்பது என்ற உத்தரவில் நான் கையெழுத்திட்டு உள்ளேன். ஒப்பந்தத்தில் ஏற்கனவே குறிப்பிட்டுள்ள அனைத்து கூறுகளும் அப்படியே இருக்கும். இந்த விவகாரத்தில் உங்கள் அனைவருக்கும் எனது நன்றி என தெரிவித்துள்ளார்.
ரஷியாவிடம் இருந்து இந்தியாவைவிட சீனாதான் அதிகம் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்து வருகிறது. அந்நாட்டைவிட்டு விட்டு இந்தியா மீது மட்டும் டிரம்ப் வரி விதித்ததால் பல்வேறு கேள்விகள் எழுந்தன. சீனா மீது டிரம்ப் வரியை அதிகரிக்காதது குறித்து அமெரிக்காவிலும் பல்வேறு தரப்பினர் சந்தேகங்களை எழுப்பியுள்ளனர்.இந்த நிலையில் சீனாவுக்கு வரிவிதிப்பில் சலுகை அறிவிக்கப்பட்டிருப்பது இந்தியா, அமெரிக்கா உறவில் மேலும் விரிசலை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
![]()





