வாஷிங்டன், அக்.11–
நவம்பர் 1 முதல் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு மேலும் கூடுதலாக 100 சதவீதம் வரி விதிக்கப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். ஏற்கனவே சீனப் பொருள்கள் மீது 30 சதவீதம் வரி அமலில் உள்ள நிலையில், தற்போது மொத்தமாக சீனா மீது 130 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபராக டிரம்ப் கடந்த ஜனவரி மாதம் பதவியேற்றார். பதவியேற்றதுமுதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக, தங்கள் நாட்டின் பொருட்கள் மீது அதிக வரி விதிக்கும் நாடுகள் மீது பரஸ்பரம் வரி விதிக்கப்படும் என்று அறிவித்தார். அதன்படி, சீனாவில் இருந்து இறக்குமதி பொருட்கள் மீது 145 சதவீத வரியை உயர்த்தினார். இதற்கு பதிலடி கொடுத்த சீனா, அமெரிக்க பொருட்கள் மீது 125 சதவீத வரியை உயர்த்தியது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகப்போர் மூண்டது. அதேவேளை, வர்த்தகப்போரை முடிவுக்குக் கொணடுவர இரு நாடுகளும் சுவிட்சர்லாந்தில் பேச்சுவார்த்தை நடத்தின. பேச்சுவார்த்தை முடிவில் சீன பொருட்கள் மீது விதிக்கப்பட்ட கூடுதல் வரியை 90 நாட்களுக்கு நிறுத்துவதாக கடந்த மே மாதம் 10ம் தேதி அமெரிக்கா அறிவித்தது. இதனை தொடர்ந்து அமெரிக்க பொருட்கள் மீதான வரியை சீனா குறைத்தது. அதன்படி, சீன பொருட்கள் மீதான வரியை 145 சதவீதத்தில் இருந்து 30 சதவீதமாக அமெரிக்கா குறைத்தது. அதேபோல், அமெரிக்க பொருட்கள் மீதான வரியை 125 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக சீனா குறைத்தது. அதேவேளை, கூடுதல் வரிவிதிப்பு நிறுத்தத்திற்கான 90 நாட்கள் அவகாசம் கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி நிறைவடைந்ததையடுத்து கால அவகாசம் கூடுதலாக 90 நாட்கள் (நவம்பர் 10) வரை நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதலாக 100 சதவீதம் வரி விதிக்கப்படுவதாக டிரம்ப் நேற்று அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவரது சமூக வலைதள பக்கமான ட்ரூத் சோஷியல் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது:–
சீனா வர்த்தகத்தில் ஒரு முன்னோடியில்லாத நிலைப்பாட்டை எடுத்துள்ளது என்றும், அமெரிக்கா அதற்குத் தக்க பதிலடி கொடுக்கும்.
“நவம்பர் 1 முதல் (அல்லது சீனா எடுக்கும் எந்தவொரு நடவடிக்கைகளையும் அல்லது மாற்றங்களையும் பொறுத்து முன்னதாகவும்), அமெரிக்கா, சீனா தற்போது செலுத்தும் 30 சதவீத வரியுடன் கூடுதலாக 100 சதவீத வரியை விதிக்கும், மேலும் நவம்பர் 1ம் தேதி முதல் அனைத்து முக்கியமான மென்பொருட்களுக்கும் ஏற்றுமதி கட்டுப்பாடுகளை விதிப்போம்.
வர்த்தகத்தில் சீனா ஒரு அசாதாரணமான ஆக்ரோஷமான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. சீனா தனது அனைத்துப் பொருள்களுக்கும் ஏற்றுமதி கட்டுப்பாடுகளை விதிக்கத் திட்டமிட்டு உள்ளதாகவும், உலக நாடுகளுக்கு இது தொடர்பாக விரோதமான கடிதத்தை அனுப்பியுள்ளதாக கிடைத்த தகவல்களே இந்த வரி விதிப்புக்கு காரணம் என டிரம்ப் கூறியுள்ளார்.
மேலும், உலகிற்கு மிகவும் விரோதமான கடிதத்தை அனுப்புவதன் மூலம் சீனா வர்த்தகத்தில் அசாதாரணமான ஆக்ரோஷமான நிலைப்பாட்டை எடுத்துள்ளது என்பது இப்போதுதான் தெரிய வந்துள்ளது. சீனாவின் இந்த நடவடிக்கையை சர்வதேச வர்த்தகத்தில் முற்றிலும் கேள்விப்படாதது, பிற நாடுகளுடன் நடந்துகொள்வதில் இதுவொரு தார்மீக அவமானம் என கடுமையாக சாடியுள்ள டிரம்ப், இது விதிவிலக்கு இல்லாமல் அனைத்து நாடுகளையும் பாதிக்கிறது, சீனப் பொருள்களுக்கு “பெரிய அளவிலான வரி அதிகரிப்பு உட்பட வலுவான எதிர் நடவடிக்கைகளுடன் பதிலளிக்க அமெரிக்கா தயாராகி வருவதாக அவர் எச்சரித்துள்ளார்.
டிரம்ப் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் வரும் 30ம் தேதி சந்திக்க இருந்தனர். தென்கொரியாவில் நடைபெறும் எபிஇசி கூட்டத்தில் பங்கேற்க உள்ள இரு தலைவர்களும் நேருக்கு நேர் சந்தித்து பேச இருந்தனர். ஆனால், சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி அறிவித்துள்ள டிரம்ப் இம்மாத இறுதியில் சீனா அதிபரை சந்திக்கப்போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார். அதேவேளை, சீன பொருட்கள் மீது கூடுதல் வரி விதிக்கப்பட்ட நிலையில் அமெரிக்க பங்குச்சந்தை கடும் வீழ்ச்சியடைந்துள்ளது.
![]()





