சிவகாசி வெடி விபத்து
செய்திகள்

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து: 7 பேர் பலி

Makkal Kural Official

விருதுநகர், ஜூலை 1–

சிவகாசி அருகே சின்னகாமன்பட்டியில் பட்டாசு ஆலையில் இன்று ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி – சாத்தூர் இடையே உள்ள சின்னகாமன்பட்டியில் கமல் குமார் என்பவர் நாக்பூரில் உள்ள மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை (பெசோ) உரிமம் பெற்று கோகுலேஸ் ஃபயர் ஒர்க்ஸ் என்ற பெயரில் பட்டாசு ஆலை நடத்தி வருகிறார்.

இந்த பட்டாசு ஆலையில் 50- க்கும் மேற்பட்ட அறைகளின் என்பதுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர். செவ்வாய்க்கிழமை காலை வழக்கம்போல் தொழிலாளர்கள் பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்டிருந்த போது மருந்து கலவை செய்யும் அறையில் காலை 8.30 மணி அளவில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அருகே இருந்த 3 அறைகள் இடிந்து தரைமட்டமானது. தகவல் அறிந்து வந்த சிவகாசி மற்றும் சாத்தூர் தீயணைப்பு துறையினர் தீயை அணைத்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் பட்டாசு ஆலை பணியாற்றிய 5 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். அதில் மீனாம்பட்டியைச் சேர்ந்த ராமசாமி மகன் மகாலிங்கம் (55) என்பவரது உடல் மட்டும் அடையாளம் காணப்பட்டுள்ளது. விபத்தில் காயமடைந்த ஓ.கோவில்பட்டியை சேர்ந்த ராமராஜ் மகன் ராமமூர்த்தி (45), செவல்பட்டியை சேர்ந்த கூடலிங்கம் மகன் லிங்குசாமி (45) உட்பட 4 பேர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

போர்மேன் கைது

இந்நிலையில், சிவகாசி அரசு மருத்துவமனையில் படுகாயங்களுடன் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட ராமமூர்த்தி என்ற தொழிலாளி உள்பட 2 பேர் உயிரிழந்தனர். இதனால் சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது. வெடி விபத்து குறித்து சாத்தூர் நகர் போலீஸார் வழக்கு பதிவு செய்து பட்டாசு ஆலை போர்மேன் ரவி (36) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மருத்துவமனை முன்பு குவிந்தனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *