செய்திகள்

சிறுமிக்கு பாலியல் தொல்லை; வாலிபருக்கு 9 ஆண்டு சிறை

Makkal Kural Official

திருவள்ளூர் நீதிமன்றம் தீர்ப்பு

ஆவடி, ஆக. 21–

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் வாலிபருக்கு 9 ஆண்டுகள் சிறை தண்டனையுடன் ரூ.15000 அபராதம் விதித்து திருவள்ளூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

எண்ணூர் பகுதியைச் சேர்ந்த சிறுமிக்கு 6.01.2019 அன்று பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் டில்லி பாபு (22) என்பவர் மீது சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் எண்ணூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து அவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இவ்வழக்கின் மீது காவல் ஆய்வாளர் புலன்விசாரணை மேற்கொண்டு இறுதி அறிக்கையை திருவள்ளூர் சிறார் பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டம் (போக்சோ) சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். திருவள்ளூர் மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் இவ்வழக்கின் மீது நடைபெற்று வந்த நீதிமன்ற விசாரணையில் எதிரியின் மீது குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு எதிரிக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை அறிவிக்கப்பட்டது. அதன்படி மொத்தம் 9 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையுடன் ரூ.15000 அபராதமும் அபராத தொகையைக் கட்டத் தவறினால் 3 ஆண்டுகள் மெய் காவல் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நிவாரணத் தொகையாக ரூபாய் 2 லட்சம் ரூபாய் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

போக்சோ வழக்கில் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிக்கு தண்டனைபெற்றுக் கொடுத்த காவல் ஆய்வாளர்கள், அரசு வழக்கறிஞர் மற்றும் போலீசாரை ஆவடி மாநகர காவல் ஆணையாளர் சங்கர் வெகுவாக பாராட்டினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *