சிறுகதை

சிறுகதை ……. வெளியே முட்கள் உள்ளே ….. மு. வெ . சம்பத்

Makkal Kural Official

பார்வதி, அபிராமி – இரண்டு மகள்கள் சுப்பிரமணி, சுஜாதா தம்பதிகளுக்கு. இரண்டு பெண்களையும் நன்கு படிக்க வைத்து அவர்கள் வேலைக்கு செல்ல வேண்டாம் என்று சொல்லி, இருவருக்கும் திருமணம் செய்து வைத்தார். இரண்டு மாப்பிளைகளும் கம்பெனியில் வேலை பணிபுரிபவர்கள். மூத்த மாப்பிள்ளை பக்கத்துக்கு ஊரில் வேலை செய்கிறார். அடுத்த மாப்பிள்ளை உள்ளூரிலேயே வேலை செய்கிறார். இரண்டு மாப்பிள்ளை குடும்பங்களும் சாதாரண வருவாய் குடும்பம் தான். சுப்பிரமணி தனக்கு வரும் ஓய்வூதியத் தொகையில் தான் வாழ்க்கை நடத்துகிறார்.

அபிராமி கணவர் அனந்தன் சிறு தொழில் ஒன்று ஆரம்பித்தார். அலுவலக நேரம் போக மீதி நேரத்தில் தொழிலை கவனித்தார். சுப்பிரமணி அடிக்கடி அபிராமி வீட்டிற்கு சென்று பார்த்துச் செய்யுங்கள்’ என்று கூறுவார். அனந்தன் கம்பெனி வேலையை விட்டுவிடவா என்று கேட்க அபிராமி வேண்டாம் என்று கூறி தடுத்துவிட்டார். சில நாட்களில் தொழில் சூடு பிடிக்க அனந்தன் மிகவும் சுறுசுறுப்பாக காணப்பட்டார். அபிராமி கணவனிடம் கேட்டு பணம் வாங்கி சேமித்து வைக்க மாட்டார். ஏனெனில் அனந்தன் பணப் பேச்சை எடுத்தாலே எரிந்து விழுவார்.

அனந்தன், ‘‘பெரிய ஆர்டர் ஒன்று வருது எடுக்கவா’’ என்று, அபிராமி வசம் கேட்க அபிராமி போதுமே வரும் வருமானம்’’ என்று கூற, அனந்தன் கேட்காமல் அதையும் எடுத்தார். அபிராமி தனது மகளை வேறு பள்ளியில் சேர்க்கச் சொன்னார். அனந்தன் இங்கேயே படிக்கட்டும் என்றார். ஆர்டர் சப்ளை செய்ய பணம் தேவைப்படுகிறதென்று நகைகளை வங்கியில் வைத்து பணம் பெற்றார்.

பார்வதி கணவர் பாலு வெளி நாட்டில் வேலைக்கு ஆர்டர் வந்ததும், அவர் மட்டும் தனியாக வெளிநாடு சென்றார். வேலையில் சேர்ந்து பிறகு மாதா மாதம் பணம் அனுப்பினார் . இரண்டு வருடம் கழித்து வந்தவர் புது விசாலமான ஒரு வீட்டை வாங்கினார். பார்வதி அடைந்த மகிழ்வுக்கு எல்லையே இல்லை எனலாம். பாலு வெளிநாடு சென்றதும் பார்வதி எப்போதும் காரில் தான் பயணம் செய்வார். தனது அந்தஸ்தை வெளியே காட்டிக்கொள்ளுவதில் பார்வதிக்கு ஒரே ஆனந்தம் தான்.

அனந்தன் எடுத்து சப்ளை செய்த ஆர்டர் தரமில்லையென்று திரும்பி வர , அனந்தன் பெரிய இழப்பை சந்தித்தார். எல்லா பணமும் முடங்கிப் போச்சு. கம்பெனி வேலையில் தான் ஜீவனம். அபிராமி அப்பாவிடம் சென்று நடந்ததைக் கூற, அவர் நமக்கெல்லாம் இது வருமா என்றார். அப்பா எல்லா பணமும் போச்சு என்றார் அபிராமி . இனிமேல் எங்கு செல்வது என்று திணறினர் அபிராமி . வெளியே வாங்கிய தொகைகளுக்கு வட்டி ஏறிக் கொண்டே போனது.

அபிராமி இனிமேல் பார்வதியிடம் கூறாமல் இருப்பது தவறு என்று எண்ணி, பார்வதி இல்லம் நோக்கி சென்றார். பார்வதி வீடு வந்ததும் , அந்த வீடு பூட்டி இருந்தது கண்டு, பக்கத்தில் உள்ள வீட்டில் கேட்க, அவர்கள் காலையில் தான் அவர் வெளியே சென்றார் என்றார்கள்.அபிராமி என்ன இவர்கள் உள்ளே வா என்று கூறாமல் பதில் சொல்லுகிறார்கள் என்ற வேளையில் பார்வதி வீட்டு வாசலில் வந்த கார் சப்தம் கேட்டு அபிராமி அங்கு சென்றார்.

பார்வதி வா அபிராமி என்று கூறி உள்ளே அழைத்துச் சென்றார். உள்ளே வந்த பார்வதி அபிராமியை அமரச் சொன்னார். அபிராமி பார்வதியிடம் தனக்கு ஏற்பட்டுள்ள எல்லா பிரச்னைகளையும் ஒன்று விடாமல் கூறி விட்டு, ஊட்டியில் படிக்கும் பார்வதி மகன் பற்றி கேட்டார். பார்வதி நாளை சென்றுபார்க்கப் போகிறேன் என்றார். நிறைய கடன் சேர்ந்துள்ளதா என்று கேட்க, அபிராமி ஆமாம் என்று கூறினார். பார்வதி உன்னால் லிஸ்ட் தரமுடியுமா என்றதும்,மனதிற்குள் அபிராமி இவர் அடைத்து விட போகிறாரா என்று நினைத்து, தான் கொண்டு வந்த லிஸ்டை தந்தார். நீங்கள் சப்ளை செய்த கம்பெனி விலாசம் மற்றும் அந்த நிறுவனர் பெயர் கேட்டதும், அபிராமி தந்தார். சரி வா காபி சாப்பிடலாம் என்ற பார்வதி, மகள் சங்கரி பற்றி விசாரித்தார். சங்கரியிடம் எதுவும் சொல்லிவிடாதே என்றார்.

பார்வதி அபிராமியிடம் வியாபாரத்தில் எதுவும் நடக்கும் என தெரியாதா, அவர் பெரிய ஆர்டர் எடுக்கும் போது என்னிடம் ஏன் சொல்லவில்லை என்று கடிந்து கொண்டார். அபிராமி, கணவர் யோசிக்கவே விடவில்லை என்றார். இது பதிலா என்று பார்வதி கேட்க அபிராமி தலை குனிந்தார். வயதான காலத்தில் பெற்றோருக்கு இது ஒரு கவலையா என்றார்.

சம்பாதித்த பணத்தில் ஒரு வீடாவது வாங்கினாயா என்றார் பார்வதி. பணமெல்லாம் போன பின் தான் எனது ஞாபகம் வருகிறதா என்றார் பார்வதி. அபிராமி மனதிற்குள் வெந்த புண்ணில் வேல் போன்று பேசுகிறாரே அக்கா என்று நினைத்தார். எல்லாம் நேரம் என்று கூறிக் கொண்டார். எதோ ஒன்று நினைக்க எதோ ஒன்றே நடந்தது கண்டு அபிராமி வருந்தினார். கேள்வி மேல் கேள்வி கேட்டு பார்வதி அபிராமியை துளைத்து விட்டார். அபிராமி இனிமேல் இருந்தால் நல்லதல்ல என்று நினைத்து கிளம்பினார். பார்வதி பணம் எதுவும் வேண்டுமா என கேட்காதது அபிராமிக்கு வருத்தமானது. அபிராமி வருகிறேன் என்று சொல்லி விடை பெற்றார்.

வீட்டுக்கு வந்த அபிராமி கணவர் அனந்தனிடம் மேற்கொண்டு என்ன செய்வோம் என்றதும், அனந்தன் ஒன்றுமே புரியவில்லையே என்றார். இதற்குள் மகள் பள்ளி கட்டணம் கட்ட விண்ணப்பத்தை வைத்தார். அபிராமி தலையில் கையை வைத்துக்கொண்டு அனந்தனைப் பார்த்தார்.

அனந்தனின் தம்பி அம்பிகா நகைகள் வங்கியில் பணம் கட்டாமல் மூழ்கும் நிலையை அறிந்து, தனது மனைவி இடம் நாம் வங்கியில் பணம் கட்டி எடுத்து சிறிதளவு பணம் தந்து விட்டு நகைகளை நாம் வைத்துக்கொள்ளலாம்

அல்லவா. நல்ல டிசைன் உள்ள நகைகள் என்றதும், அவர் மனைவி சரி செய்யுங்கள் என்றார்.

மறுநாள் வங்கிக்கு சென்று அனந்தன் தம்பி விவரம் கேட்க, அவர்கள் நேற்று வந்து கணக்கை முடித்து நகைகள் வாங்கிக்கொண்டு சென்று விட்டார்கள் என்றார்கள். யார் செய்திருப்பார்கள் என்று யோசித்துக்கொண்டே அனந்தன் தம்பி குழம்பினார். அனந்தன் வீடு நிலம் அடமானம் வைத்தவரிடம் சென்று எவ்வளவு பணம் தர வேண்டும் என கேட்க, அவர் மூன்று நாட்களுக்கு முன் பணம் கொடுத்து விட்டு பத்திரங்கள் மற்றும் எல்லா பேப்பர்களையும் வாங்கிச் சென்று விட்டார்கள் என்று கூற, அனந்தன் தம்பி அண்ணனை தொடர்பு கொண்டு எல்லா கடனையும் அடைத்து முடித்து விட்டாய் போலும் என்றதும் அனந்தன் என்ன விளையாடுகிறாயா, நானே என்ன செய்வது என்று அறியாமல் திணறிக்கொண்டுள்ளேன் என்றார். சரி என்று சொல்லி அனந்தன் தம்பி தொடர்பை துண்டித்தார்.

இது பற்றி அபிராமியிடம் அனந்தன் கூற, அபிராமி யார் செய்ய முடியும் நமது அனுமதி இல்லாமல் என்றார். அப்போது ஆனந்தனுக்கு ஒரு அழைப்பு வர, அனந்தன் யார் எனக் கேட்க, நீங்கள் பார்வதி மேடத்திற்கு சொந்தமாமே ,சொல்லவே இல்லையே என்று கூறி, திருப்பி அனுப்பிய சரக்குகளை உடனே அனுப்புங்கள் என்று கூறி தொடர்பை துண்டித்தார் எதிர் முனையில் வந்தவர்.

அனந்தன் அன்றே சரக்குகளை அனுப்பவும், வாங்கியவர் உடனே பணத்தை கொடுத்தார். அனந்தன் தனது மாமனாரிடம் நடந்ததை கூற, அவர் சிரித்துக் கொண்டே இதெல்லாம், பார்வதி செயல்தான். நாளை சென்று பார்ப்போம் என்றார். அடுத்த நாள் எல்லோரும் பார்வதி வீட்டில் ஒன்று சேர்ந்தார்கள். அபிராமி பலாப்பழம் முட்கள் நிறைந்தது தான், ஆனால் அதனுள்ளே தான் சுவையான பழம் உள்ளது. அது போன்று தான் அக்காவும் என்றார்.

பார்வதி இனிமேல் உங்கள் தொழிலை நான் தான் கவனிப்பேன், எல்லா நகைகளும், பத்திரங்களும் என்னிடம் தான் இருக்கும். உங்கள் மகள் படிப்பு இனிமேல் என் பொறுப்பு. அனந்தன் இனிமேல் கம்பெனி வேலை செய்தால் போதும் என்றதும், அபிராமி அனந்தனைப் பார்க்க, அனந்தன் இது தான் முட்கள் என்று மனதில் நினைத்துக் கொண்டு சரி என்ற ஒரு வார்த்தையுடன் வெளியேறினார் .

வீட்டிற்கு வந்த அனந்தன் அபிராமியிடம் பணத்தைக் கட்டி எல்லாவற்றையும் பிடுங்கி விட்டாரே பார்வதி என்றார். தம்பியும் இப்படித்தான் எண்ணி இருப்பானோ என்று நினைத்தார் அனந்தன் . இது ஒரு பாடம் என்றார் அபிராமி.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *