கதைகள் சிறுகதை

சிறுகதை – வடக்கு வாசலா? தெற்கு வாசலா? – ஆர். வசந்தா

Makkal Kural Official

ராம்குமார், அவன் மனைவி உமாவும் மனமொத்த தம்பதியினராகத்தான் வாழ்ந்து வந்தார்கள். திருமணமாகி 6 மாதத்திலேயே ராம்குமாருக்கு ஆபீஸ் விஷயமாக வெளிநாடு செல்ல நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அவனும் கிளம்பிவிட்டான்.

உமா தனியாகத்தான் இருந்தாள். அவள் சிநேகிதகள் சிலர், நாங்கள் கர்நாடகாவை சுற்றிப் பார்க்கப் போகிறோம். நீயும் வருகிறாயா? என்று உமாவைக் கேட்டார்கள். உமாவும் சரி என்று சொல்லி விட்டாள்.

தனியார் பஸ் ஒன்றில் சென்றார்கள். திடீரென பெரும் மழை பெய்தது. ஒரு பெரிய பாலம் ஒன்று குறுக்கிட்டது. அடியில் ஆற்றில் தண்ணீர் பெரும்வெள்ளமாக ஓடியது. திடீரென பஸ் ஆற்றில் கவிழ்ந்து ஆற்றில் அடித்துச் சென்றது. பயணிகள் அங்கும் இங்குமாக அடித்துச் செல்லப்பட்டனர்.

பெட்டி படுக்கைகளும் அடித்துச் செல்லப்பட்டன. உமா அங்கிருந்த ஒரு குக்கிராமத்தில் ஒதுங்கி நினைவில்லாமல் இருந்தாள். அங்கிருந்த மக்கள் அவளைக் கூட்டி வந்து அங்கிருந்த ஒரு சிறிய மருத்துவமனையில் சேர்த்தனர். அவள் நிலை மிகவும் மோசமாக இருந்தது.

உயிருக்கு ஒன்றும் ஆபத்தில்லை. ஆனால் நினைவுத்திறன் இழந்த நிலையில் அவள் யார் என்று கேட்டாலும் சொல்லத் தெரியவில்லை. பெயரும் சொல்லத் தெரியவில்லை. அவளை அந்த கிராம மக்கள் அருகே இருந்த ஒரு நகரத்துப் பெரிய மருத்துவமனையில் சேர்த்தனர்.

இந்நிலையில் ராம்குமாருக்கு இந்தத் துயர செய்தி சென்றது. அவளைத் தேடும் முயற்சியில் தீவிரமாக முடிவெடுத்தான். எனினும் அவளைப் பற்றிய தகவல் எதுவும் கண்டுபிடிக்க முடியவில்லை. உமா சேர்க்கப்பட்ட மருத்துவமனைக்கு இளம் டாக்டர் அரவிந்த் வந்தார். அவனும் நியூரோ படித்தவன். உமாவை குணப்படுத்தவே தன் முதல் லட்சியம் என்று தீர்மானித்தான். தன்னால் முடிந்த அத்தனை முயற்சிகளையும் செய்தான். பழைய நினைவுகள் எதுவும் திரும்பவில்லை. அரவிந்த் அவளை உஷா என்றே அழைத்தான். அதற்கு மட்டும் ஏதாவது சொல்லுவாள்.

உஷாவை ஒரு சிறிய அப்பார்ட்மெண்ட்டில் குடி வைத்தான். தினமும் மருத்துவமனைக்கு அவளும் வந்து அரவிந்திற்கு துணை புரிவாள். ஒரு நாள் மருத்துவமனையில் வைத்திருந்த அரவிந்த்தின் மெடிக்கல் புத்தகத்தை வாசித்துக் கொண்டிருந்தாள். கொஞ்சம் கடினமான புத்தகம் அது. அதை மிகவும் சர்வசாதரணமாகப் படித்தாள். அவள் நன்கு படித்தவள் என்று புரிந்தது அரவிந்திற்கு.

ஒரு தடவை படுக்கையிலிருந்த ஒரு நோயாளியுடன் இந்தியில் சரளமாக பேசினாள். அரவிந்த் மிகவும் ஆச்சர்யப்பட்டான். எனினும் உஷாவின் நினைவுகள் யாவும் இப்போதைய சூழ்நிலையில் மட்டுமே இருந்தது. பழைய நினைவுகள் எதுவும் திரும்பவில்லை.

திடீரென ஒரு நாள் தன் அம்மாவிடம் உஷாவைத் திருமணம் செய்து கொள்ளப் போவதாகச் சொன்னான். அம்மா பார்வதி திகைத்தாள். உனக்கு என்னடா ‘‘புத்தி கெட்டு விட்டதா?’’ என்றாள். ஒரு அனாதை பெண், ஊர் பெயர் தெரியாதவள். குலம் அறியாதவள் அவளைத் திருமணம் செய்து கொள்வேன் என்கிறாயே என்று ஆதங்கத்துடன் கூறினாள். சரி என்று சொல்லவும் இல்லை. ஆனால் அரவிந்த் மிகவும் பிடிவாதமாக இருந்தான்.

ராம்குமாரும் எத்தனையோ வழிகளில் அவளைத் தேட முயற்சித்தான். எந்த விவரமும் தெரியவில்லை. அவனும் கை விட்டான்.

ராம்குமாரை, அவன் அம்மா மறுமணம் செய்ய வற்புறுத்தினாள். திடீரென ஒரு நாள் ராம்குமாரின் நண்பன் ஒருவன் அவளை கரையில் ஒதுங்கிய பெண் என்ற தலைப்பில் தன் நினைவுத் திறன் இழந்த நிலையில் ஒரு தனியார் மருத்துவமனையில் இருப்பதாக உள்ளூர் பத்திரிகையில் செய்தி இருப்பதாக சொன்னான். அது பற்றி ஒரு தபால் எழுதி அந்த மருத்துவமனை விலாசத்திற்கே அனுப்பி எழுதினான். எனினும் உமா என்ற பெயருக்கே எழுதினான். அந்த தபாலில் அவளின் புகைப்படம் ஒன்றையும் இணைந்திருந்தான்.

தற்செயலாக அந்தத் தபால் வந்தபோது ஒரு அவசரக் கேஸ் வந்ததால் படிக்காமலேயே நோயாளியை கவனிக்கப் போய் விட்டான். திரும்பி வந்தபோது தபாலைக் காணவில்லை. அது பழைய பேப்பருடன் இருந்தது. அரவிந்தும் அந்த தபாலை பெரிதுபடுத்தவில்லை. ராம்குமாரும் பதில் ஏதும் வராததால் அந்த விஷயத்தை அப்படியே விட்டுவிட்டான்.

அரவிந்திற்கு உஷாவின் அறிவு, அழகு, அன்பு எல்லாமே பிடித்துவிட்டது. திருமண ஏற்பாட்டை தீவிரமாகச் செய்தான்.

கோவிலில் வைத்து திருமணம் என்ற முடிவுக்கு வந்தனர் அரவிந்த் வீட்டினர். பெண் பெயர் உஷா என்று போட்டிருந்தது.

ராம்குமாரும் உஷாவிற்குத் திருமணம் என்றதும் வேகமாக அந்த கோவிலுக்குள் வந்தவன் வாசற்படியிலேயே நின்று விட்டான். காரணம் உமா என்ற உஷாவிற்கும் அரவிந்திற்கும் திருமணம் முடிந்திருந்தது. ராம்குமார் வாசலிலேயே நின்று விட்டான். ஜோடியாக அரவிந்தும், உஷாவும் வெளியே வந்தபோது ராம்குமார் உமா என்று அழைத்ததும் உமா அவன் நிற்கும் திசையைப் பார்த்து பழைய முகமாகத் தெரியவும் அவன் நின்றிருந்த வடக்கு வாசலைப் பார்த்தாள். மனம் ஏனோ சலனப்பட்டது. திரும்பிப் பார்த்தாள். அப்போது அரவிந்த் ஏன் அந்தப்பக்கம் பார்க்கிறாய். நாம் போக வேண்டியது தெற்கு வாசல் வழியாகத்தானே என்றான். உஷாவிற்கு ‘நாம்’ என்ற சொல்லில் உரிமையும், அன்பும் அதிகமாகத் தெரிந்தது. அரவிந்தின் தெற்கு வாசலே அவளுக்கு சரியாகத் தோன்றியது வடக்கு வாசலை மறந்தாள்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *