தேனாம்பேட்டை சிக்னலைத் தாண்டி எஸ் ஐ டி கல்லூரியை நோக்கிச் செல்லும் பாரதிதாசன் சாலையில் நின்று புலம்பிக் கொண்டிருந்தார் ஒரு பெரியவர்.
‘ எழுத்தாளர்கள், கவிஞர்கள் இவங்களுக்கெல்லாம் வாழும் போதே யாரும் மரியாதை கொடுக்கிறது இல்லை. செத்த பிறகு மரியாதை கொடுக்குறாங்க .அதுவும் பழைய கவிஞர்கள இங்க யாரும் நினைவு வைக்க மாட்டாங்க ‘ என்று வருத்தப்பட்டுக் கொண்டே ஆழ்வார்பேட்டை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் பாரதிதாசன் சாலையில் நின்று புலம்பிக் கொண்டு இருந்தார் ஒரு பெரியவர். அவரைப் பார்ப்பதற்கு பைத்தியம் போல இருந்தாலும் விவரமாகத்தான் பேசுகிறார் என்று நினைத்த போக்குவரத்துக் காவலர்
” ஐயா கொஞ்சம் தள்ளிப் போய் நின்னு பேசுங்க. இது பஸ் வந்து திரும்புற இடம். நீங்க நின்னுகிட்டு இருக்கறதுனால , பஸ் உங்கள அடிச்சு போடலாம் இல்ல நீங்க நிக்கிறீங்கன்னு நினைச்சு பஸ் நிக்கலாம் அந்தப் பஸ்ஸுக்கு பின்னாடி வண்டிகள் இருந்துச்சுன்னா போக்குவரத்துக்கு ரொம்ப சிரமமாக இருக்கும் .கொஞ்சம் ஓரமா நின்னு பேசுறீங்களா? ” என்று அந்தப் போக்குவரத்துக் காவலர் எவ்வளவோ சொல்லியும் அந்தப் பெரியவர் கேட்பதாக இல்லை
“ஐயா உங்களுக்கு என்ன பிரச்சனை? எதுக்காக நடுரோட்டுல நின்னு இப்பிடிச் சத்தம் போட்டுட்டு இருக்கிங்க. உங்களப் பார்த்தா நல்லா படிச்சவர் மாதிரி தெரியுது. பொதுமக்கள் பயன்படுத்துற அரசாங்க ரோட்ல இப்படிப் பேசிக்கிட்டு இருக்கிறது உங்களுக்கு நல்லா இருக்கா? “
என்று அந்தப் போக்குவரத்துக் காவலர் சொல்ல அவரைத் திரும்பிப் பார்த்த அந்தப் பெரியவர் பதில் எதுவும் சொல்லாமல் புலம்பிக் கொண்டே இருந்தார்.
” புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் யாருன்னு உங்களுக்குத் தெரியுமா? ” என்று அவரிடமே எதிர் கேள்வி கேட்க
” ஐயா அதெல்லாம் இருக்கட்டும். நீங்க கொஞ்சம் ஒதுங்கி வாரீங்களா?” என்று அவர் முறையிட,
” நான் கேக்குறதுக்குப் பதில் சொல்லுங்க. பாரதிதாசன்னா யாருன்னு தெரியுமா?” என்று மறுபடியும் அந்தப் பெரியவர் தன் குரலை கொஞ்சம் உயர்த்திக் கேட்க , அந்தப் போக்குவரத்துக் காவலர் பதில் ஏதும் சொல்லாமல், தார்ச் சாலையைப் பார்த்துக் கொண்டிருந்தார். ஒன்றன்பின் ஒன்றாக வந்த வாகனங்கள் எல்லாம் எஸ் ஐ டி கல்லூரியை விட்டு நகர முடியாமல் இருந்தன. ஒற்றை மனிதராக நின்று கொண்டிருந்த அந்தப் பெரியவர்,
“நான் கேக்குறதுக்கு பதில் சொன்னா மட்டும்தான் இந்த இடத்தை விட்டு நகருவேன். இல்லன்னா பஸ்ஸ என் மேல ஏத்திட்டு போங்க”
என்று பிடிவாதமாகத் தார்ச்சாலையில் அமர்ந்து கொண்டார்.
” இந்தப் பெரியவரத் தூக்கி அந்தப் பக்கம் போட்டுட்டு வண்டியை ஓட்டுங்க”
என்று வாகனத்தில் வந்தவர்கள் சொல்ல ,அவர்களை ஏறிட்டுப் பார்த்த
பெரியவர்,
” தமிழனோட உணர்வு இவ்வளவு மங்கிப் போனத நெனச்சு நான் ரொம்பவே வருத்தப்படுறேன். பாரதிதாசன்னா யாருன்னு தெரியல. இதுல தமிழ் தமிழ்ன்னு பேசிக்கிறாங்க “
என்று வருத்தப்பட்ட பெரியவர், வாகனங்களில் இருந்த மக்களைப் பார்த்து மறுபடியும் அதே கேள்வியைக் கேட்டார்
” புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்னா யாருன்னு தெரியுமா ? “
” ஐயா பாரதியார், பாரதிதாசன், கண்ணதாசன், வாலி, வைரமுத்து இவங்க எல்லாம் கவிஞர்கள் ஐயா. அதுக்கு என்ன இப்போ ? உங்களுக்கு என்ன பிரச்சனை? முதல்ல ரோட்டை விட்டு வெளியில போங்க .மக்களுக்கு இடைஞ்சலா ரோட்டில உட்கார்ந்து பேசிகிட்டு இருக்கிறது நல்லா இருக்கா என்ன? “
என்று ஒரு வாகன ஓட்டி எகிற, யாருடைய பேச்சுக்கும் செவி சாய்க்காத அந்தப் பெரியவர்
” பாரதிதாசன்னா யாருன்னு தெரியுமா ? “
என்று மறுபடியும் அதே கேள்வியை எழுப்பி கொண்டிருந்தார்.
” ஐயா சொல்லிட்டாங்களே? புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பற்றி, அவர் பாரதியாரின் சீடர். மறுமலர்ச்சிப் பாடல்கள் பாடியவர். திராவிட எழுச்சிக் கவிதை எழுதியவர். அதுக்கு என்ன இப்போ ? முதல்ல ரோட்டுல இருந்து எந்திரிச்சு போங்கய்யா. எல்லோருக்கும் நிறைய வேலை இருக்கு “
என்று மக்கள் சொல்ல, அந்த இடத்தை விட்டு எழாமல், அதே இடத்தில் அமர்ந்திருந்தார், அந்தப் பெரியவர்.
” இந்தப் பெருசு எது சொன்னாலும் கேட்காது போல. இவரக் குண்டுக் கட்டாத் தூக்கி அந்தப் பக்கம் போடுங்க. இந்த ஒத்த ஆளுக்காக மொத்த ஆளுகளும் காத்துக் கிடக்கணுமா? ” இந்தப் பக்கம் திரும்பி பாருங்க அண்ணா மேம்பாலம் வரைக்கும் வண்டிகள் நின்னுக்கிட்டு இருக்கு. அந்தப் பக்கம் சைதாப்பேட்டை வரைக்கும் வண்டிகள் நிக்குது என்று ஆட்கள் சொல்ல,
மறுபடியும் “பாரதிதாசன்னா யாருன்னு தெரியுமா?” என்ற கேள்வியைக் கேட்டார், அந்தப் பெரியவர்
” ஐயா புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அப்படிங்கிறவர் ஒரு கவிஞர். புதுச்சேரியில பிறந்தவர். பாரதியாருக்கு விசுவாசமா இருந்ததுனாலே பாரதியார் பாடல்களை நேசித்ததால, அவர் மேல இருந்த அபிப்பிராயத்தில தன்னுடைய இயற்பெயரான சுப்புரத்தினம் அப்பிடிங்கிற பேர பாரதிதாசன்னு மாத்திக்கிட்டாரு இதுக்கு மேல உங்களுக்கு என்ன வேணும்? ” என்று தமிழ் படித்த ஒரு வாகன ஓட்டி பதில் சொல்ல
” ரொம்ப சந்தோஷம் . நான் இப்போ ஒரு கேள்வி கேட்பேன். அதுக்கு உங்களால பதில் சொல்ல முடியுமா? என்றார் அந்தப் பெரியவர்.
” மறுபடியும் கேள்வியா?” என்று வாகன ஓட்டிகள் பதற ,
” ஐயா ,சீக்கிரம் சொல்லுங்க. “
என்று வாகன ஓட்டிகள் அவசரப்படுத்த
அந்தப் பெரியவரின் நிலை, அவருடைய பேச்சு .இவையெல்லாம் பார்த்த போக்குவரத்துக் காவலர்
” என்னதான் சொல்கிறார், ? பார்க்கலாம் என்று அமைதியாக இருந்தார். மேல் இடத்திற்கு இந்தத் தகவல் பரவ, ‘சீக்கிரம் அந்தப் பெரியவர அப்புறப்படுத்திட்டு வண்டிகளை விடுங்க” என்று உத்தரவு பிறந்தது.
” நான் இந்த ரோட்ல உட்கார்ந்து தர்ணா பண்றது தப்பு தான். உங்களுக்கெல்லாம் இடையூறு பண்ணிக்கிட்டு இருக்கேன். என்னைய மன்னிச்சிருங்க. நாம எல்லாம் தமிழர்கள் . தமிழனுக்குத் தமிழன் அவனுடைய பெருமையும் புகழையும்ர மக்கள்கிட்டக் கொண்டு போய் சேர்க்கணும் .அதுவும் விடுதலைப் போராட்டத்திற்கு பாடுபட்ட திராவிடத்திற்கு பாடுபட்ட இந்த மக்கள் கவிஞர நாம ஈசியா கடந்து போயிர்றோம். அதுதான் எனக்கு வருத்தமா இருந்தது. இப்ப நான் கேள்விக்கு வாரேன். நாம இருக்கிற இந்தச் சாலை என்ன சாலையில் தெரியுமா? என்று கேட்க
” பி.கே.பி சாலை என்றார், ஒருவர்.
” பி. கே.பி சாலைன்னா என்ன? “
என்று பெரியவர் கேட்க
” தெரியல. பி. கே.பின்னா , யாராவது இங்கிலீஷ்காரரா இருப்பாராே?”
என்று சிலர் முணுமுணுத்தார்கள்.
“இந்த வார்த்தைக்கு நீங்க பதில் சொல்லிட்டா , நானே இந்த இடத்தை விட்டுப் போறேன் “
என்றார் அந்தப் பெரியவர்.
” இந்த ஆளு என்ன பெரிய லூசா இருப்பர் போல .மெட்ராஸ்ல இருக்கக் கூடிய பாதிச் சாலையோட பேர்கள் பிரிட்டிஷ்காரன் பேராத்தான் இருக்குது. அதெல்லாம் நமக்கு வாயில நுழையாதுங்க. அதுக்கும் இதுக்கும் என்னய்யா சம்பந்தம் இருக்கு “
என்று ஒருவர் கேட்க
” பி.கே.பி சாலைங்கிறது புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் சாலை “
என்று சைக்கிளில் இருந்த ஒருவர் சொன்ன போது, இதைக்கேட்ட பெரியவருக்குக் கண்களில் கண்ணீர் வழிந்தது.
” இவ்வளவு அழகான தமிழ்ப் பெயர பி.கே.பி. சாலைன்னு ஏன் இங்கிலீஷ்ல சுருக்கி வைக்கணும். தமிழே உயிர் மூச்சு. தமிழே எங்கள் பேச்சு. தமிழ் போனால் உயிர் போச்சுன்னு எழுதிய கவிஞனின் பெயரை பி.கே.பி சாலைன்னு எழுதி வச்சிருக்காங்க இது தப்பு இல்லையா? இத்தனை பேர்ல ஒருத்தருக்கு மட்டும் தான் இது புரிஞ்சிருக்கு. கே.கே நகர் அப்படிங்கிறத கலைஞர் கருணாநிதி நகர்ன்னு சொல்லுங்க. ஜெ ஜெ நகர் ன்னு சொல்றத விட்டு ஜெயலலிதா நகர்ன்னு மாத்துங்க. இப்படி எத்தனையோ தலைவர்களுடைய பேரச் சுருக்கி வச்சு நாளைக்கு வர்ற தலைமுறைகள் எல்லாம், பீட்சா, பர்கர் மாதிரி இந்தப் பேரையும் கடந்து போயிருவாங்க ” என்று அந்தப் பெரியவர் உணர்ச்சி வசப்பட்டு அழுது கொண்டே சொல்ல,
” அவர் சொல்றதும் நியாயம் தான் என்றார்கள். எந்தப் பயமுறுத்தலுக்கும் அஞ்சாத அந்தப் பெரியவர் தானாக அந்தத் தார்சாலையை விட்டு எழுந்து போனார்.
” ஐயா, இப்ப பாருங்க” என்று அந்தப் போக்குவரத்து காவலர் சொல்ல ,திரும்பிப் பார்த்தார், அந்தப் பெரியவர்.
முன்னால் இருந்த பி.கே.பி என்ற பெயர்ப் பலகையில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் சாலை என்று மாற்றியிருந்தார், அந்தப் போக்குவரத்துக் காவலர்.
” தம்பி உண்மையிலேயே உங்களுக்கு தமிழ் வணக்கம். நான் வாரேன்” என்று கம்பீரமாக நடை போட்டார், பெரியவர். அதுவரை அடைபட்டிருந்த வாகனங்கள் சீறிப் பாய்ந்தன.
இவ்வளவு தூரம் ஒரு கவிஞனுக்காக வக்காலத்து வாங்கிய அந்தப் பெரியவரின் பெயரை கேட்காம விட்டு விட்டோமே? என்று நினைத்த அந்தப் போக்குவரத்துக் காவலர்
” ஐயா ,தமிழுக்காக, தமிழ்க் கவிஞனுக்காக இவ்வளவு போராடி ஒரு தர்ணாவே நடத்தி எல்லாருக்கும் பி. கே.பி அப்படிங்கிற சாலையை புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் சாலையா மாத்திட்டிங்க உண்மையிலேயே உங்களுக்கு ரொம்ப நன்றி .உங்க பேர் என்னன்னு தெரிஞ்சுக்கலாமா? “
என்று அந்தப் போக்குவரத்துக் காவலர் கேட்க ,கம்பீரமாக நடந்து சென்று கொண்டிருந்த அந்தப் பெரியவர் திரும்பி,
” தம்பி என்னோட பேரு பாரதி” என்றார்.
‘ பாரதியாருக்குத் தாசனா இருந்தார், பாரதிதாசன். இங்கே பாரதிதாசன் பேரக் காப்பாத்தியிருக்கார், பாரதி
என்ன ஒரு ஒற்றுமை’
என்று நினைத்த போக்குவரத்துக் காவலர் , பாரதி என்ற பெயருடைய அந்தப் பெரியவரைப் பார்த்து, தன் இரு கைகளையும் எடுத்துக் கும்பிட்டார். வீர நடை போட்டுச் சென்று கொண்டிருந்தார், பாரதி, புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் சாலையில் .
![]()




