சிறுகதை விழாக்கள்

சிறுகதை … பிறந்த நாள் விழா ….! விழா 17 …. ராஜா செல்லமுத்து

Makkal Kural Official

அங்கிருந்த மரங்களில் எல்லாம் கலர் கலராய் பலூன்கள் கட்டப்பட்டிருந்தன. வண்ண வண்ணக் காகிதங்கள் தோரணங்களாய் தொங்கிக் கொண்டிருந்தன.

“ஹேப்பி பர்த்டே டூ யூ”

என்ற சத்தம் அந்த வளாகம் முழுவதும் ஒலித்துக் கொண்டிருந்தது.

அன்று தாரணிக்குப் பிறந்த நாள் மிகவும் சந்தோஷத்தில் இருந்தாள். அத்தனை அழகாய் புத்தாடை உடுத்தியிருந்தாள். கழுத்தை நிறைக்கும் தங்கச் செயின்கள். விரல்களில் மோதிரம்

என்று ஆடம்பரத்தின் உச்சியில் இருந்த தாரணிக்கு பிள்ளைகள் எல்லாம் ஹேப்பி பர்த்டே பாடிக்கொண்டிருந்தார்கள். அருகில் தாரணியின் அப்பா நிலவழகன். அம்மா சாந்தினி மற்றும் உறவினர்கள் எல்லாம் புடைசூழ நின்று கொண்டிருந்தார்கள் .

“தாரணிக்கு இன்னைக்கு எத்தனையாவது பிறந்தநாள் ? “

” ஒன்பது முடிஞ்சு, பத்தாவது பிறந்த நாள் “

” அப்படியா சிறப்பு .தாரணி , சீரும் சிறப்புமா பேரும் புகழுமா , இந்த உலகம் மெச்ச வாழணும் “

என்று அங்கிருந்த எல்லோரும் ஒருமித்த கருத்தில் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

” இவங்க தான் தாரணியோட அம்மாவா ? “

என்று சாந்தினியைப் பார்த்து ஒரு குழந்தை கேட்க

“ஆமா இவங்க பேரு சாந்தினி. தாரணியாேட அம்மா .இவங்க தாரணியோட அப்பா நிலவழகன் “

என்று அங்கிருந்த ஒருவர் இருவரையும் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தினார் .

“காலையில கோயிலுக்குப் போயிட்டு வந்தீங்களா? ” என்று ஒரு சிறுவன் கேட்க,

” ஆமா, கோயிலுக்கு போயிட்டு வந்துட்டோம். “

“எந்தக் கோயிலுக்கு போனீங்க? “

என்று இன்னொரு சிறுவன் கேட்க

” சிவன் கோயிலுக்குப் போனோம். சிவன்னா தாரணிக்கு ரொம்ப பிடிக்கும். “

” எனக்கும் சிவன்னா ரொம்ப பிடிக்கும் “

“அப்படியா? “

என்று சாந்தினி வியப்பாய் கேட்க

” ஆமா “

என்றான் ஒரு சிறுவன்.

“தாரணி போட்டுருக்கிற டிரஸ் எவ்வளவு ரூபாய் ? “

என்று சாந்தினியிடம் ஒரு சிறுமி கேட்க

” என்ன ஒரு முப்பதாயிரம் ரூவா இருக்கும் . பட்டுல தான் வேணும்னு கேட்டுட்டா அதனாலதான் பட்டுல வாங்கிட்டோம். “

என்று சாந்தினி சொல்ல, குழந்தைகள் எல்லாம் தாரணியின் உடையைத் தொட்டுப் பார்த்து அதிசயித்தார்கள்.

“கழுத்து, கையில போட்டிருக்கிற நகைகள் எவ்வளவு இருக்கும்? “

” எப்படியும் பத்துப் பவுனுக்கு மேல இருக்கும் “

” யப்பா… அவ்வளவு இருக்குமா ?

” ஆமா”

” இந்த வயசுலயே அவங்க அப்பா அம்மா எவ்வளவு சேத்து வச்சுருக்காங்க . தாரணி ரொம்பக் குடுத்து வச்சவங்க “

என்று ஆச்சரியமாகப் பேசிக் கொண்டிருந்தார்கள் குழந்தைகள்.

“சரி கேக் வெட்டிரலாமா? என்று அங்கிருந்த ஒரு பெரியவர் கேட்க

“வெட்டிரலாம்”

என்று எல்லோரும் ஒரே குரலில் சொல்ல,

“ஹேப்பி பர்த்டே டூ யூ தாரணி “

என்று குழந்தைகள் போட்ட சத்தம் அந்தக் கட்டிடம் முழுவதும் ஒலிக்கத் துவங்கியது. தாரணி கேக்கை வெட்டினாள். வெட்டிய கேக்கை முதலில் தன் அம்மாவிற்கும், அடுத்து அப்பாவிற்கும் ஊட்டினாள்.

” சரி ,நான் மிச்சக் கேக்க வெட்டி எல்லாருக்கும் குடுக்கிறேன்”

என்று அங்கிருந்த பெரியவர் சொல்லி, மிச்சக் கேக்கை அவரே வெட்டி எல்லோருக்கும் கொடுத்தார். அத்தனை குழந்தைகளும் ஆவலாய் வாங்கிச் சாப்பிட்டனர்.

“சரி டிபன் சாப்பிடலாமா? ” என்று பெரியவர் சொல்ல, வரிசையாக அமர்ந்த குழந்தைகள் முன்னால், இலை விரிக்கப்பட்டு, இட்லி, தோசை , பொங்கல் என்று பரிமாறப்பட்டது. குழந்தைகள் எல்லாம் சாப்பிட அமர்ந்தார்கள்.

” சாப்பிடுறக்கு முன்னாடி எல்லாரும் தாரணிக்காகவும் அவங்க குடும்பத்துக்காகவும் ஒரு பிரேயர் பண்ணலாமா ? “

என்று பெரியவர் சொல்ல

“பண்ணலாம் சார்” என்று குழந்தைகள் கோரசாகச் சொன்னார்கள்

” இன்று, இந்தக் காலை உணவை நமக்கு அளித்த தாரணி அவர்களும் அவர்கள் குடும்பத்தார்களும் நோய் நொடி இல்லாமல் பல்லாண்டு காலம் வாழ வேண்டும். அவர்கள் ஒவ்வொரு வருடமும் இதே போல் இந்த ஆசிரமத்திற்கு வந்து இந்த ஆதரவற்ற அனாதைக் குழந்தைகளுக்கு உணவும் ஆதரவும் தரும்படி கேட்டுக் கொள்கிறேன் “

என்று , அங்கிருந்த பெரியவர் சொல்ல, அந்த அனாதை ஆசிரமத்தில் இருந்த குழந்தைகள் எல்லாம் தங்கள் இரு கண்களையும் மூடி, இரு கைகளையும் எடுத்துக் கும்பிட்டு, தாரணிக்கும் அவள் குடும்பத்தார்க்கும் வாழ்த்துச் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

தங்களைப் பெற்ற பெற்றோர்கள் யார்? எந்த ஊரில் அவர்கள் பிறந்தார்கள் ? எப்போது பிறந்தார்கள் ?

என்று தங்கள் பிறந்த நாளைக் கூட அறியாத, ஒரு முறை கூட தங்கள் பிறந்த நாளைக் கொண்டாடாத ஆதரவற்ற அநாதைக் குழந்தைகள்.

” ஹேப்பி பர்த் டே டூ யூ தாரணி ” என்று பாடிக் கொண்டிருந்தார்கள், அந்தச் சத்தம் ஆதரவற்ற அனாதை ஆசிரமம் முழுவதும் எதிரொலித்தது. மீண்டும் பிறந்த நாளை எதிர்கார்த்துக் காத்திருந்தனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *