அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பிரிவு உபச்சார விழா வெகுவாகக் கொண்டாட ஏற்பாடானது. ஆட்சியர் அலுவலகம் முழுவதும் பலூன், வண்ணக் காகிதங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.
” இன்னைக்கு யாருக்குப் பிரிவு உபச்சார விழா ? ” என்று ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த ஒருவர் கேட்க
” தெரியலையே? யாராவது உயர் அதிகாரி ரிடையர் ஆவாங்க போல, அதான் அலுவலகமே, அலங்காரம் செய்யப்பட்டிருக்கு ” என்று அவரும் பதில் சொல்ல, அலுவலகம் மொத்தமும் அன்று களை கட்டியிருந்தது.
அலுவலகத்தின் பிரதான மண்டபம் விமரிசையாக ஜோடிக்கப்பட்டுச் சன்னமான சத்தத்தில் பாடல் பாடிக் கொண்டிருந்தது.
” கலெக்டர் எப்ப வாராரு?”
” இன்னும் அரை மணி நேரத்தில வந்திருவார். வந்ததும் பங்ஷன் ஆரம்பிச்சிரும். “
” ம்”
“டவாலி தொப்பிய சரி பண்ணிட்டார்ன்னா, கலெக்டர் இன்னும் கொஞ்ச நேரத்தில வரப் போறார்ன்னு அர்த்தம். “
” அப்படியா ? ” என்று சிலர் பேசிக் கொண்டிருந்த போதே,
“வொய்ங்… வொய்ங்… வொய்ங்… “
என்ற சைரன் சத்தம் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தை நிறைத்தது. கம்பீரமான நடையில் காரிலிருந்து கீழே இறங்கினார் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரவீன்.
அதுவரையில் அமைதியாக இருந்த ஆட்சித் தலைவர் அலுவலகம், ஆட்சித் தலைவர் வந்ததும் பற்றிக் கொண்டது. அதுவரை சத்தமாகப் பேசிக் கொண்டிருந்தவர்கள் எல்லாம் மெல்லப் பேச ஆரம்பித்தார்கள்
” கலெக்டர்ன்னா சும்மாவா? எவ்வளவு பெரிய அதிகாரப் பணி. என் பையனையும் தான் கலெக்டருக்குப் படிக்கச் சொல்றேன். அவன் படிக்க மாட்டேன்கிறான். இருந்தா இப்படியொரு பதவியில இருக்கணும். இல்ல வெத்துப் படிப்பு படிச்சு வயித்த கழுவக் கூடாது ” என்று சிலர் பேசிக் கொண்டார்கள்.
அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருந்தார்கள் ,அலுவலக ஊழியர்கள்.
” இன்னைக்கு கலெக்டர் ரொம்ப பிஸி… “
” நாளைக்கு தான் கையெழுத்து போட முடியும். “
” எம் எல் ஏ வை நாளைக்கு மீட் பண்றாருன்னு சொல்லுங்க”
இப்படி ஏகப்பட்ட மனிதர்களுக்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தார்கள், மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திலிருந்த ஊழியர்கள்.
பிரதான மண்டபத்தில் பிரிவு உபச்சார விழா சிறப்பாக நடந்தது. விழா நடந்து முடிந்த சிறிது நேரத்திற்கெல்லாம்
வொய்ங்… வொய்ங்… என்ற சத்தத்தோடு கிளம்பியது ஆட்சித் தலைவர் வாகனம்.
” இது என்னங்க…. தப்பா இருக்கு. டிரைவர் இல்லையா ? கலெக்டரே கார் ஓட்டிட்டுப் போறாரு. மேலிடத்தில யாராவது பாத்தா பிரச்சினை ஆயிரும்”
” ஆமாங்க. கலெக்டர் தான் கார் ஓட்டிட்டுப் போறாரு”
என்று பார்த்தவர்கள் சொல்ல, கலெக்டரே கார் ஓட்டிப் போய்க் கொண்டிருந்தார். திருப்பங்களில் எல்லாம் கார் போகும் போது, அதன் சத்தத்தைக் கேட்டு, போக்குவரத்துக் காவலர்கள் கூட
” ஏன் கலெக்டர் கார் ஓட்டிப் போறார்? ” என்று வியந்து பார்த்தார்கள்.
” சார் , எனக்கே ஒரு மாதிரி இருக்கு; வேண்டாம் சார்” என்று முனியாண்டி சொல்ல.
” நீங்க உட்காருங்க இன்னைக்கு நான் தான் உங்களுக்கு ஓட்டுநர் “
என்று முனியாண்டியைக் காரில் அமர வைத்து ஆட்சித் தலைவர் பிரவீன் காரை ஓட்டிப் போய்க் கொண்டிருந்தார்.
” சார் யாராவது பாத்தா தப்பா நினைப்பாங்க. நீங்க கார் ஓட்ட வேண்டாம் ;நான் ஓட்டுறேன் சார்”
என்று முனியாண்டி எவ்வளவோ சொல்லிப் பார்த்தார். பிரவீன் கேட்கவே இல்லை.
“அதெல்லாம் ஒன்னும் இல்ல. நீங்க அமைதியா உட்காருங்க. நான் தான் இன்னைக்கு உங்க வீடு வரைக்கும் கார் ஓட்டிட்டு வருவேன்”
என்று கலெக்டர் சொல்ல, முனியாண்டியின் கண்களில் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.
டவாலியும் முனியாண்டியுடன் அமர்ந்திருந்தார்கள். முனியாண்டியால் இயல்பாய் உட்கார முடியவில்லை. கூனிக்குறுகி உட்கார்ந்திருந்த முனியாண்டியை ஆசுவாசப்படுத்திய கலெக்டர் பிரவீன்
“முனியாண்டி ஐயா… எதுவும் இல்ல.. நீங்க அமைதியா உட்காருங்க”
“கலெக்டர் சார், உங்கள மாதிரி ஒரு எளிமையான மனுசன நான் பாத்ததே இல்ல. உங்களுடைய இந்தச் செயல் என்னைய புல்லரிக்க வைக்குது. வேண்டாம் சார்” என்று முனியாண்டி அழுதபடியே சொல்லிப் பார்த்தார்.
” இல்ல முனியாண்டி ஐயா எவ்வளவோ வருசம் நீங்க கலெக்டர் ஆபீஸ்ல கார் ஓட்டி இருக்கிறீங்க. உங்கள விட எனக்கு குறைஞ்ச வயசு, ஆனா, நான் கார்ல ஏறாம , நீங்க ஏறுனது இல்ல. அவ்வளவு ஒரு மரியாதை அவ்வளவு ஒரு பவ்வியம். இன்னைக்கு உங்களோட ரிடையர்மெண்ட். வருசம் முழுசும் என்னைய வச்சு கார் ஓட்டுனீங்க. இன்னைக்கு நான் உங்களுக்கு கார் ஓட்டுறது தப்பு இல்லையே? என்று சொல்லிய மாவட்ட ஆட்சித் தலைவர் பிரவீன் ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து முனியாண்டியின் வீடு வரை, கார் ஓட்டி வந்தார்.
சிறிது நேரத்திற்கெல்லாம் முனியாண்டி வீட்டின் முன்னால் போய் நின்றது, கார்.ஓட்டுநர் இருக்கையை விட்டுக் கீழே இறங்கிய பிரவீன், முனியாண்டி கார் ஓட்டி வரும் போது, ஆட்சித் தலைவர் பிரவீனுக்கு என்ன மரியாதை செய்வாரோ அதே மரியாதையை முனியாண்டிக்குச் செய்தார், பிரவீன். கார் கதவை அவரே திறந்து விட்டார்.
” கலெக்டர் ஐயா, என்ன பண்றிங்க. நீங்க பெரிய படிப்புப் படிச்சவரு. ஒசந்த பதவியில இருக்கிறவரு. ஒரு சாதாரண டிரைவருக்கு இப்படியொரு மரியாதை நீங்க செய்யலாமா? வேண்டாம் ஐயா “
என்று தாங்க முடியாமல் கண்ணீர் சிந்தினார், முனியாண்டி, அதற்குள் வீட்டிற்குள்ளிருந்து வெளியே வந்து பார்த்த, முனியாண்டியின் குடும்பமே பிரவீனின் செயலைப் பார்த்து மெய்சிலிர்த்தனர்.
” என்ன சார், நீங்க போயி இப்படிச் செய்யலாமா? ” என்று முனியாண்டியின் குடும்பத்தினரும் கேட்க
” அதனால என்னங்க இருக்கு. இங்க மனுசன விட பெருசு எதுவும் இல்ல. முனியாண்டி ஐயாவுக்கு இன்னைக்கு ரிடையர்மெண்ட். நாம அதக் கொண்டாடணும் அவ்வளவு தான் “
என்றார் பிரவீன். அவர் பேசியதைக் கேட்ட, முனியாண்டியின் குடும்பத்தினர், மன நெகிழ்ச்சியில் உறைந்தார்கள்.
“இப்படியொரு மாவட்ட ஆட்சித் தலைவர நாங்க இதுவரை கண்டதில்ல” என்று சொன்னார்கள், முனியாண்டியின் குடும்பத்தார்கள்.
அதிகாரம், பதவி, பணம் ,புகழ் என்ற அதிகார போதையில் உழலும் மனிதர்களுக்கு மத்தியில். பிரவீன் ஒரு மாவட்ட ஆட்சித் தலைவராக இல்லாமல் இவ்வளவு எளிமையாக இருப்பார் என்று யாருக்கும் தெரியாது”
என்று உணர்ந்து கொண்டனர்.
ஆட்சித் தலைவர் அலுவலகத்திலும் அந்த மாவட்டத்திலும்
மறுநாள் காலை, துப்புரவுப் பணியாளரான கணபதிக்கு அடுத்த வாரம் ரிடையர்மெண்ட் என்ற சுற்றறிக்கை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் வலம் வந்தது.
![]()





