இரவு வானம் விடிவதற்குள் ஒவ்வொரு அறையாகத் தட்டிக் கொண்டிருந்தார், முனிரத்தினம். திரைப்படத் தயாரிப்பு மேலாளர். நேரமாச்சு. எல்லாரும் எந்திரிங்க. சூட்டிங் போகணும். எல்லாரும் எந்திரிங்க. டீ, காபி வரும் குடிச்சுருங்க. அஞ்சு மணிக்கு எல்லாம் கார் வந்துரும். சீக்கிரமா போனாத்தான், படப்பிடிப்புத் தளத்துக்குப் போக முடியும். எல்லாரும் எந்திரிங்க” என்று அறைகளில் தங்கியிருந்த அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களையும் எழுப்பிக் கொண்டிருந்தார், முனிரத்தினம்.
“ஐயா இன்னைக்கு எங்க சூட்டிங்? இவ்வளவு சீக்கிரமா கிளப்பி விடுறீங்களே?” என்று நடிகையின் உதவியாளர் கேட்க, “பின்னி மில் தம்பி.. ரொம்ப தூரம் போகணும். நார்த் மெட்ராஸ். அதனால சீக்கிரமா கிளம்புங்க” என்று அத்தனை கதவுகளையும் தட்டிக் கொண்டே சென்றார், முனிரத்தினம். அரக்கப் பரக்க எழுந்த சினிமா தொழிலாளர்கள் பின்னி மில்லுக்குக் கிளம்பத் தயாரானார்கள்.
“இன்னைக்கு ஏழு மணிக்கெல்லாம் முதல் ஷாட் வைக்கணும்னு டைரக்டர் சொல்லியிருக்கார். அதையே உச்ச நடிகரும் சொல்றார். அவர் உச்ச நடிகர்ங்கிறதால யாரும் எதுவும் மறுத்துப் பேச முடியல. சீக்கிரமா கிளம்புங்க” என்று அத்தனை பேரும் பின்னி மில்லில் ஆறு மணிக்கெல்லாம் ஆஜரானார்கள்.
“இந்தக் கட்டிடத்தைப் பார்த்தா பிரமாதமா இருக்கே? இதுக்கு என்ன பேரு, குஷால்தாஸ் கார்டன். ஏவிஎம் ஸ்டுடியோ. சுஜாதா கார்டன் மாதிரி இந்த பில்டிங்குக்கு என்ன பேரு?” என்று ஒரு உதவி இயக்குநர் கேட்க,
“இதுக்குப் பேரு பின்னி மில். இங்க நிறைய ஷூட்டிங் நடக்கும். பின்னி மில்லப் பத்தின உண்மை கதைங்கிறதுனாலே, பின்னி மில்லிலயே எடுத்தா எப்படி இருக்கும் அப்படின்னு டைரக்டர் ஆசைப்பட்டார். அதனாலதான் படப்பிடிப்பைச் செட்டு போடாம, ஒரிஜினல் கட்டிடத்திலே எடுக்கிறோம்” என்று இணை இயக்குநர் சொல்ல, அத்தனை நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் எல்லாம் படப்பிடிப்பிற்குத் தயாரானார்கள். கோடாவில் கட்டப்பட்டன லைட்டுகள். தெர்மாகோல், ஸ்கிம்மர், ட்ரக் அன் ட்ராலிகள், டென் பேங், பைவ் பேங் எல்லாம் வந்து இறங்கின.
உச்ச நடிகரிடம் சென்ற இயக்குநர் சார், இந்தப் பின்னி மில்லு மெட்ராஸ் உடைய மிக முக்கியமான அடையாளம். இந்தப் பின்னி மில்லுக்கு 250 வருஷ வரலாறு இருக்கு. பிரிட்டிஷ்காரங்க இந்தியாவை பிடிச்சு தொழில் தொடங்க ஆரம்பிக்கப்பட்ட இடம் தான் இது. அப்படி இங்க வந்தவர் பெயர் சார்லஸ் பின்னி
1769–ல் இங்கிலாந்தில இருந்து எந்த அதிகாரமும், உரிமமும் இல்லாம வந்த சார்லஸ் பின்னி, ஆற்காடு நவாப்போட தொடர்பு வச்சுக்கிட்டு, மெட்ராஸ்ல தொழில் ஆரம்பிச்சார்.
மவுண்ட் ரோட்ல இருக்கிற இந்தியன் ஓவர்சீஸ் வங்கியோட தலைமையகத்தில தான் இந்தப் பின்னி தன்னுடைய தலைமை அலுவலகத்தை ஆரம்பிச்சார். மெட்ராசுக்கு வரும் கப்பல்கள்ல ஏற்றுமதி இறக்குமதி செஞ்சார். 1800–ல் ஜான் பின்னி அப்படிங்கறவர் கூட தொடர்பு ஏற்படுத்திவிட்டு, 1814ல பின்னி அண்ட் கோன்னு பேர மாத்துனாங்க.
கப்பல்ல இருந்து வர்ற சரக்குகளைக் கொண்டு வர்றதுக்காகவே முப்பதுக்கும் மேல சின்னப்படகுகளையும் பேருந்தையும் உபயோகப்படுத்தினாங்க, தன்னுடைய வியாபாரத்தைப் பெருக்கணும்ன்னு நெனச்ச பின்னி, காப்பீட்டு துறையிலயும் வங்கித் துறையிலும் நுழைஞ்சார். ஆனா, அவருக்கு பெரும்புகழ ஈட்டித் தந்தது துணி வியாபாரம் தான் என்று இயக்குநர் கதையை விவரிக்க ஆழமாகக் கேட்டுக் கொண்டிருந்தார், உச்ச நடிகர்.
” ம்.. வெரி இன்ட்ரஸ்டிங். மேல சொல்லுங்க” என்று நடிகர் கேட்க,
” 1877 சென்னை பெரம்பூர்ல இருக்கிற இன்றைய பின்னி மில், அன்றைய பக்கிங்காம் மில்லை ஆரம்பிச்சு, அத கர்நாடிக் மில்லோடு இணைச்சு, 14,000 தொழிலாளர்களாேடு ஆரம்பமாச்சு தான்.
துணி வியாபாரத்தில பின்னி மில்லு பின்னி எடுத்துச்சு. பெங்களூர்லயும் 1884–ல் மில்ல ஆரம்பிச்சாங்க. மக்கள் மத்தியிலயும் பிரிட்டிஷ்காரங்க மத்தியிலும் பின்னி மில்லோட துணி அமோக வரவேற்பு பெற்றது.
” ஓ… குட்… நைஸ்…” என்று உச்சுக் கொட்டினார், உச்ச நடிகர்.
“இதுக்கிடையில 1906–ம் ஆண்டு அரபுத் நாட்டு வங்கி திவால் ஆனதுனால பின்னி மில்லுக்கு இது பெரிய பேரிழப்பாயிருச்சு. அதுக்கப்புறம் 1947–ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைஞ்சதுக்கு அப்புறம் பிரிட்டிஷ்காரர்கள் எல்லாம் இங்கிலாந்துக்கு கப்பல் ஏறிட்டாங்க, அதனால பின்னி மில்லு தொய்வடைஞ்சது. அதுக்கு அப்புறம் 1970 மெட்ராஸ்ல ஏற்பட்ட வெள்ளத்தில் பின்னி மில் ரொம்ப சேதம் அடைஞ்சு போச்சு. அதுக்குப் பிறகு ஒரேடியா துணி உற்பத்தியை நிப்பாட்டிட்டாங்க. இதனால, 2001ல ஆயிரக்கணக்கான பேருக்கு வேலை இழப்பு ஏற்பட்டுச்சு.
இதைவிட இன்னொரு முக்கியமான விஷயம் சார். நீங்க கதாபாத்திரம் ஏத்து இருக்கக் கூடிய செல்வபதி அப்படிங்கற ஒருத்தரால தான் 1915ல் ஏற்படுத்தப்பட்ட தொழிற்சங்கம் தான் தென்னிந்தியாவின் முதல் தொழிற்சங்கம். அவருடைய தூண்டுதலால் தான் முதன்முதலாக மே தினம் கொண்டாடப்பட்டது.
1921–ல் திரு.வி.க. தலைமையில ஏற்பட்ட தொழிற்சங்க போராட்டம் தான் இந்தியத் தொழிற்சங்க வரலாற்றில மிக முக்கியமானது
” ம்.. சிறப்பு.. அப்புறம் ? ” என்றார் உச்ச நடிகர்.
“திரு.வி.க. பி.பி.வாடியா போன்றவர்கள் போராடுனதுனால தான் 12 மணி நேரமாக இருந்த வேலை 8 மணி நேரமா குறைக்கப்பட்டது. இப்படிப் பல போராட்டங்களைச் சந்திச்சு இருக்கு இந்தப் பின்னி மில்லு. ஆனா இன்னைக்குப் படப்பிடிப்பு தளமா இருக்கு சார். இதைப் பத்தின வரலாறத் தான் படமா நாம எடுக்கப் போறோம். இன்னைக்கு மாதவரத்தில் இருக்கிற பின்னிக் காலனி, புளியந் தோப்புல இருக்கிற பின்னி கார்டன். போயஸ் கார்டன்ல இருக்குற பின்னி ரோடு இதெல்லாம் சார்லஸ் பின்னியை நினைவுபடுத்திக்கிட்டு இருக்கு சார்.
” ம் ” அதோட பி அண்ட் சி பள்ளிக்கூடத்தில பாதி நேரம் படிப்பு. பாதி நேரம் தொழில் அப்படின்னு சொல்லிக் கொடுத்த பள்ளிக்கூடத்தையும் நாம படத்துல சேர்க்க போறோம் சார்”
என்று பின்னி மில்லின் மொத்த வரலாற்றையும் இயக்குநர் சொல்ல, பெருமூச்சு விட்டபடியே அந்த உச்ச நடிகர் மௌனமாக எழுந்து ஒரு ஓரமாகச் சென்றார்.
” என்ன மொத்தக் கதையும் கேட்டுட்டு, இப்படி ஓரமா போறாரே?” என்று நினைத்த இயக்குநர், சிறிது நேரம் கழித்து உச்ச நடிகரின் அருகே சென்றார்.
” சார் எதாவது சாப்பிடுறீங்களா?”
“இல்ல வேண்டாம்” என்று சொன்ன நடிகரின் கண்ணில் கண்ணீர் வழிந்தது.
” என்ன சார், என்ன ஆச்சு?
” டைரக்டர் சார். நீங்க சொன்னது பின்னி மில்லோட உண்மைக் கதை. இந்த உண்மைக் கதைக்குள்ள ஒரு உண்மை ஒளிஞ்சிருக்கு” என்றார் அந்த உச்ச நடிகர்.
“என்ன சார் சொல்லுங்க” என்று இயக்குநர் கேட்க,
“எத்தனையோ படங்களைக் கற்பனையா எடுக்கிறோம். இல்ல உண்மையும் கற்பனையும் கலந்து எடுக்கிறோம். ஆனா, இந்தப் பின்னி மில்லோட கதை உண்மையிலேயே என்னையக் கண் கலங்க வச்சிருச்சு. பழைய நினைவுகள் எல்லாம் எனக்குள்ள வந்து வந்து போகுது” என்று சொல்லிய அந்த உச்ச நடிகர் தன் கண்களைத் துடைத்துக் கொண்டார்.
“சார் என்னன்னு சொல்லுங்க”
“இந்தப் பின்னி மில்லுல என்னுடைய மூதாதையர்களும் வேலை பார்த்து இருக்காங்க. வேலை இல்லாமல் போன அந்த 14,000 பேர்ல எங்க மூதாதையரும் இருக்காங்க. கடைசியில் எங்க அப்பாவும் இந்தப் பின்னி மில்லில வேலைப் பார்த்துட்டு இருந்தார். 2001ல பின்னி மில்ல மொத்தமா மூடும்போது எங்க அப்பாவுக்கும் வேலை இல்லாமப் போச்சு. இந்தப் பின்னி மில்லுல வர்ற வருமானத்தை வச்சுத்தான் எங்க குடும்பமே வாழ்ந்துட்டு இருந்தோம். நீங்க சொன்ன பி என் சி பள்ளிக்கூடத்தில பாதி நேரம் படிப்பு, பாதி நேரம் தொழில் அப்படின்னு படிச்சதுல நானும் ஒருத்தன். உண்மையிலேயே இந்தக் கதை என்னுடைய வாழ்க்கைக்கு நெருக்கமான கதை. இதப் பண்றதில நான் ரொம்பவே பெருமைப்படுறேன்” என்றார் அந்த உச்ச நடிகர்.
” சார், உங்களுடைய கதைன்னு எனக்குத் தெரியாது. மெட்ராஸ்ல இருக்கிற சாலைகள நான் படிக்கும் போது, இந்தப் பின்னி சாலை ரொம்பவே எனக்குப் பிடித்திருந்தது. இந்த உண்மைய ஏன் திரைப்படமாக்கக் கூடாதுன்னு நெனச்சேன். அதோட விளைவு தான் இந்தப் பின்னி சாலைத் திரைப்படம்” என்று இயக்குநர் சொல்ல,
“வெரி குட். இந்தப் படம் நிச்சயமா உலக அளவில பேசப்படும். வாங்க நேரமாச்சு ஷாட்டுக்குப் போகலாம்”
என்றார் உச்ச நடிகர்.
” சைலன்ஸ்…லைட்ஸ் ஆன்… ஸ்டார்ட் கேமரா …ஆக்ஷன்” என்று சொன்னார் இயக்குநர்.
பின்னி மில்லைப் பற்றிய உண்மைக் கதை, படமாக்கப்பட்டுக் கொண்டிருந்தது, பின்னி மில்லில் இருந்த பின்னி சாலையில்.
![]()





