சிறுகதை விழாக்கள்

சிறுகதை … தேர்த் திருவிழா ….!விழா 32 …. ராஜா செல்லமுத்து

Makkal Kural Official

அந்த மருத்துவமனை முழுவதும் அழுகைச் சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தது.யாருக்கும் யாரும் ஆறுதல் சொல்ல முடியாத அவல நிலையில் இருந்தனர், மக்கள்.

” இப்படி நடந்திருக்கக் கூடாது. “

“நடந்திருச்சு”

“என்ன செய்ய?”

” இது சாமி குத்தமா ? இல்ல மனுச குத்தமான்னு எதுவும் தெரியலையே? “

“ஏதோ தவறு நடந்து இருக்கிறதுனால தான் இந்த மாதிரி எல்லாம் நடந்திருக்கு. இல்லன்னா இப்படி நடந்திருக்காது”

என்று மருத்துவமனையில் முழுவதும் பேசிக் கொண்டிருந்தார்கள்.

” ஊர் மக்கள் எல்லாம் பாத்துப் பாத்து தான் வடம் பிடிச்சாங்க. ஆனா, மேல போன கரண்ட் கம்பிக் கலசத்தில படும்னு யாரும் நினைச்சுக் கூடப் பாக்கலங்க. ரொம்ப வருசத்துக்கு அப்புறம் தேர் திருவிழா வச்சாேம். இந்த மாதிரி நடந்து போச்சே ? ” என்று பேசாத வாய்கள் இல்லை.

“இத்தனை உயிர்களைப் பலி கொண்டுருச்சே இந்தத் தேர்த் திருவிழா? சாமி உன்ன மனசார நினைச்சு வேண்டித் தான வடம் புடிச்சாங்க. வடம் புடிச்சவங்கள இப்பிடி மரணமடைய வச்சது சரியா ? இது உனக்கு அடுக்குமா சாமி. இனி ஒரு முறை இந்தத் தேர் திருவிழா நடத்த இந்த ஊர் சம்மதிப்பாங்களா? இல்ல இத நடத்தணும்னு மக்கள் தான் முன் வருவாங்களா? இத்தனை உசுரு போயிருச்சே சாமி … “

என்று கதறினாள், ஒரு கிழவி.

உயிர்களைப் பறிகொடுத்த குடும்பங்கள் உருகிப் போய் உட்கார்ந்திருந்தார்கள்.

” நான் வேண்டாம், வேண்டாம்னு தான் சொன்னேன். இந்தப் பய தான் கேக்கல. சாமி சாமின்னு போய் வடம் புடிச்சான். இப்ப என்ன ஆயிருச்சு. இருந்த ஒத்தப் புள்ளையும் பலி கொடுத்துட்டு இப்போ இப்படி உட்கார்ந்து இருக்கோமே சாமி. உன் தேர வடம் புடிச்சு இழுத்த குத்தத்துக்கா எங்களுக்கு இந்த நிலைமை. உண்மையிலேயே உனக்குச் சக்தி இருக்குன்னா போன உசுர தடுத்து இருக்கணும். அதை நீ செய்யாம விட்டுட்டயே சாமி “

என்று ஒப்பாரி வைத்து அழுது கொண்டிருந்தாள், மகனைப் பலி கொடுத்த ஒரு தாய்.

“எதையும் பார்த்துச் செய்யணும்ங்க. அவசரப்பட்டுப் பண்ணி, இப்ப என்ன ஆச்சு பாத்தீங்களா?

“பாத்து தானே வடம் பிடிச்சிட்டு வந்தாங்க. தேரோட கலசத்துல மின்சார வயர் பட்டுக் கரண்ட் பாஞ்சது எப்படிங்க தெரியும் ? .எல்லா அலங்காரப் பல்புகள் போட்ட மின்சார வயர ஒரு கம்பு வச்சுத் தூக்கி விட்டுட்டுத் தானே வந்தாங்க. அதையும் மீறி மின்சாரம் பாஞ்சுருக்குன்னா ஏதோ இது தெய்வம் குத்தமா இருக்குங்க .இல்லன்னா இப்படி நடந்திருக்காது.

என்று புலம்பினார், ஒரு பெரியவர்.

உயிர்களைப் பலி கொடுத்தவர்கள் எல்லாம் என்ன பேசுவதென்று தெரியாமல் மூச்சடைத்துக் கிடந்தார்கள்.

” பழுதடைஞ்ச தேரச் சரி பண்றதுக்கு அரசாங்கத்துல நிதியுதவி தராங்க. மின்சாரம் தாக்கி உயிரிழந்த மனுஷங்களுக்கும் இழப்பீடு தர்றாங்க. எவ்வளவு பணம் குடுத்தாலும், பணத்த வச்சு என்னங்க பண்ண முடியும் ? போன உசுரு திரும்ப வந்திருமா? என்று வாதம் செய்தார், ஒருவர்.

மின்சாரம் தாக்கி உருக்குலைந்து நடுத்தெருவில் நின்று கொண்டிருந்தது, தேரின் மிச்சம். அச்சுப் பிசகாமல் அப்படியே இருந்தன, தேர்ச் சக்கரங்கள். இத்தனை பேரைப் பலி கொடுத்துத் தீயில் கருகியிருந்தன, தேரின் காேபுரங்கள் . ” எல்லாம் முடிஞ்சிருச்சு. உடல்கள வாங்கிட்டுப் போகலாம்”

என்று மருத்துவமனையில் சொல்ல, ” ஓ ” வென அழுதபடியே , பிணவறையை நோக்கி ஓடினார்கள், உயிர்களைப் பறி கொடுத்த உறவினர்கள் .

” கடவுளே…! உன்ன மனசாரக் கும்பிட்டு , ரொம்ப வருசத்து அப்புறம் தேர்த் திருவிழா வச்சதுக்கா எங்களுக்கு இந்த நிலைமை ? ” என்று ஊர் மக்கள் எல்லாம் , பலியான உடல்களைப் பார்த்துக் கதறி அழுதார்கள்.

” தேர்த் திருவிழா நடக்கறதுக்கு முன்னாடி, எல்லாம் சரியா தானே செக் பண்ணுனாேம். பெறகு எப்படி இவ்வளவு பெரிய விபத்து ஏற்பட்டுச்சு ? “

என்று விபத்து நடந்த இடத்தைச் சிலர் சோதனை செய்தார்கள். தேர் புறப்பட்ட இடத்திலிருந்து விபத்து நடந்த இடம் வரை ஆய்வு செய்ய ஆரம்பித்த போது, சில இடங்களில் எதுவும் தெரியாமல் இருந்தது. ஒரு குறிப்பிட்ட இடத்தைப் பார்த்தவர்களுக்குப் பகீர் என்றது.

” ஐயோ…. கடவுள் இல்ல… உனக்கு சக்தி இல்லையான்னு கேட்டுட்டு இருந்தோம்.. அதுக்கு சக்தி இருந்ததுனால தான், பெரிய விபத்து இப்ப சின்ன விபத்தில முடிஞ்சு போச்சு. இங்க பாருங்க.

தேர்ல இருந்த மின்சார வயர், பக்கத்தில இருந்த டிரான்ஸ்பார்மர்ல பட்டுருக்கு. உடனே மின்சாரம் பாஞ்சதுனால சில உயிர்கள் போயிருக்கு. இதே டிரான்ஸ்பார்மர் வெடிச்சிருந்தா மொத்த ஊரே காலியாகி இருக்கும். தடங்கல்லயும் ஒரு நல்ல விசயம் நடந்திருக்கு. “

என்று ஒரு பெரியவர் சொல்ல,

” நிஜமாவா? ” என்று விபத்து நடத்த இடத்தில் நின்றிருந்த தேரைப் பார்த்தார்கள், மக்கள்.

” ஆமா, நிஜந்தான். கொஞ்ச நேரம் கரண்ட் இருந்துச்சுன்னா இந்த நேரம் ஊரே எரிஞ்சு போயிருக்கும் “

என்று ஒட்டு மொத்த ஊர் மக்கள் எல்லாம் சொல்ல, அதுவரை தேர் திருவிழாவைத் திட்டிக் கொண்டிருந்தவர்கள் எல்லாம்

” கடவுளே… உன்னால எங்க ஊரு தப்பிச்சிருச்சு. இல்ல , பச்சப் புள்ளைகள்ல இருந்து வயசானவங்க வரைக்கும் கரிக்கட்டையா ஆகியிருப்பாங்க. ” உனக்கு சக்தி இருக்கு. “

என்று ஊர் மக்கள் எல்லாம் கடவுளைப் புகழ, ஆரம்பித்தார்கள்.

” எரிஞ்சு போன தேரைச் சீக்கிரம் சரி பண்ணி, மறுபடியும் தேர்த் திருவிழாவ நடத்தணும் “

அத உடனே செஞ்சிடுவோம் என்று பேசினார்கள், மக்கள்.

எரிந்து போன தேரில், எரியாமல் இருந்தது, கடவுளின் சிலை.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *