சிறுகதை விழாக்கள்

சிறுகதை … தீ மிதித் திருவிழா ….! விழா 36 …. ராஜா செல்லமுத்து

Makkal Kural Official

சொய்ங்… சொய்ங்…. சொய்ங்.. என்ற சத்தத்தோடு பிரதான சாலையில் வந்து கொண்டிருந்தது ஒரு ஆம்புலன்ஸ்.

“கொஞ்சம் ஆம்புலன்ஸ்க்கு வழி விடுங்க .கொஞ்சம் ஆம்புலன்ஸ் வழி விடுங்க “

என்று தார்ச்சாலையில் வந்து கொண்டிருந்த வாகனங்களை எல்லாம் ஓரம் ஒதுக்கினார்கள், போக்குவரத்துக் காவலர்கள்.

வேகமாகச் சென்று கொண்டிருந்த வாகனங்கள் எல்லாம் அந்த ஆம்புலன்ஸ்க்கு வழி விட்டன.

” இந்த ஆம்புலன்ஸ்ல யாரு போறதோ? பாவம்.அவங்களுக்கு எதுவும் நடந்திரக்கூடாது “

என்று கையெடுத்துக் கும்பிட்டாள், சாலையில் நின்றிருந்த ஒரு பெண்.

விரைவாகச் சென்ற அந்த ஆம்புலன்ஸ் அரசு மருத்துவமனைக்குள் நுழைந்தது.

அங்கு தயாராக இருந்த ஸ்ட்ரக்சரில் ஆம்புலன்ஸில் கொண்டு வரப்பட்ட வரலட்சுமியை இறக்கினார்கள்.

” சீக்கிரம் கொண்டு போங்க”

என்று உறவினர்கள் கத்த ஸ்ட்ரக்சரில் வைக்கப்பட்ட வரலட்சுமி அவசரச் சிகிச்சைப் பிரிவுக்குக் கொண்டு செல்லப்பட்டாள். மயங்கிக் கிடந்த வரலட்சுமியின் தாய் காமுகம்மாளை ஒரு வழியாகத் தேற்றி மருத்துவமனைக்குக் கொண்டு வந்திருந்தார்கள். வரலட்சுமியின் தங்கை கவிதாவும் உடன் வந்தாள்.

“என் பிள்ளைய எப்படியாவது காப்பாத்துங்க சாமி .நல்லா படிச்சவ. புருசன் குடிகாரன் .இவ படிச்சுத் தான் அவ குடும்பத்தைக் காப்பாத்திட்டு இருந்தா. இந்த மாதிரி ஆகிப்போச்சே? “

என்று சொல்லிச் சொல்லி அழுது கொண்டிருந்தாள், காமுகம்மாள்

” அழாதிங்க. ஒன்னும் ஆகாது. நீங்க ஒன்னும் வருத்தப்படாதீங்க. “

என்று காமுகம்மாளைத் தேற்றினார்கள், மருத்துவர்கள் .

” எங்க இருக்கான் கவிதா புருஷன்”

என்று கோபத்தோடு கேட்டு நின்று கொண்டிருந்தார் வரலட்சுமியின் அப்பா தணிகை மலை

“கோபப்படாதீங்க .நடந்தது நடந்து போச்சு. யாரைக் கோபிச்சு எந்தப் பிரயோஜனமும் இல்ல.. “

என்று தணிகை மலையைச் சமாதானப்படுத்தினார்கள் உறவினர்கள் .

காமுகம்மாளும் கவிதாவும் “ஓ” வென்று அழுது கொண்டிருந்தார்கள் .

“அவன் மட்டும் என் கைல கிடைக்கட்டும். கொலை செஞ்சிட்டுக் கூட நான் ஜெயிலுக்கு போயிடுவேன்”

என்று தணிகைமலை நெக்குருகி அழுது கொண்டிருந்தார்

“அக்காவுக்கு எதுவும் ஆகாதில்லம்மா “

என்று காமுகம்மாவின் தோளில் சாய்ந்தபடியே கேட்டாள், கவிதா. அதற்குப் பதில் சொல்ல முடியாமல் கவிதாவின் கன்னத்தைத் தொட்டு தேற்றினாள், காமுகம்மாள்.

” எதுவும் ஆகாதும்மா பயப்படாம இரு “

என்று உறவினப் பெண் ஒருவள் கவிதாவின் தோளைத் தொட்டு ஆறுதல் சொன்னாள்.

” குடும்பச் சண்டைக்காக இப்படியா செய்றது ? இது தப்பு. வாழ வேண்டிய வயசுல இந்த புள்ளைக்கு இது தேவைதானா?”

என்று இன்னொரு பெண் குரல் கொடுக்க, அவளை எதுவும் பேச வேண்டாம் என்று சைகையில் சொன்னாள், ஒரு கிழவி .

“புருஷன் சரியில்லன்னா, அவனைப் பொளந்துட்டு ஜெயிலுக்குக் கூட போயிரணும். அத விட்டுட்டு, இந்த மாதிரி செய்றது, எந்த வகையில நியாயம் “

என்று ஆளாளுக்குப் பேசிக் கொண்டிருந்தார்கள் .

அவசரச் சிகிச்சைப் பிரிவிலிருந்து வெளியே வந்த ஒரு மருத்துவரைப் பார்த்து ஓடி வந்தார்கள், வரலட்சுமியின் உறவினர்கள் .

” சாமி என்னாச்சு . என் பிள்ளைக்கு ?என்று அழுது கொண்டே கேட்டார், தணிக மலை.

” உசுருக்கு ஒன்னும் ஆபத்து இல்லைங்க. ஆனா, எண்பது சதவீதம் உடல் எறிஞ்சு போச்சு. மீதி தான் மிச்சமிருக்கு. உசுரு வாழலாம். நீங்க பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணா மட்டும்தான் பழைய நிலைமைக்கு உங்க வரலட்சுமியைக் கொண்டு வர முடியும் “

என்று மருத்துவர் கை விரிக்க

” பிளாஸ்டிக் சர்ஜரியா அதுக்கு எவ்வளவு செலவாகும் ? “

என்று ஓடி வந்து கேட்டாள், கவிதா.

” பிளாஸ்டிக் சர்ஜரின்னா என்ன?

என்று கவிதாவிடம் கேட்டாள், காமுகம்மாள்.

” அக்கா உசுருக்கு எந்த ஆபத்தும் இல்லம்மா. எண்பது சதவீத உடம்பு தான் தீயில எரிஞ்சு போச்சாம். எரிஞ்சு போன உடம்பு சுருங்கிப் போய் கிடக்குது ,பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணா தான் நம்ம வரலட்சுமியைப் பழைய வரலட்சுமியா நாம பாக்க முடியும். “

என்று கவிதா சொல்ல

“அதுக்கு எவ்வளவு செலவாகும்? “

என்று தணிகைமலை கேட்க

“அதுக்கு …. அதுக்கு … பல லட்ச ரூபாய் செலவாகும்பா “

என்று கவிதா சொல்ல

“என்னம்மா சொல்ற? பல லட்ச ரூபா செலவாகுமா? பாவி மகன் எப்ப பாத்தாலும் குடிச்சிட்டு வந்து என் மகளைச் சித்திரவதை பண்ணி இந்த நிலைமைக்கு ஆளாகிட்டானே? அவன் தப்பு பண்ணுனா, அவனை வேண்டாம்னு சொல்லிட்டு நம்ம வீட்டுக்கு வந்து இருக்கணும். இல்ல அவனைக் கொன்னு போட்டுட்டாவது இவ ஜெயிலுக்கு போயிருந்திருக்கலாம் .அதை விட்டுட்டு , உடம்புல மண்ணெண்ணெய்ய ஊத்திட்டு ,தீ வச்சது எந்த வகையில நியாயம் ? “

என்று அழுது புலம்பினாள். காமுகம்மாள்

“சரி ஆனது ஆகிப்போச்சு. பேசி எந்தப் பிரயோஜனமும் இல்ல. புள்ள உசுருக்கு ஏதும் ஆபத்து இல்லையே? அதுவே நம்ம மாரியாத்தா காளியாத்தா செஞ்ச புண்ணியம். வாங்க புள்ளைய ஒரு எட்டுப் பாத்துட்டு வரலாம் “

என்று அவசரச் சிகிச்சைப் பிரிவை நாேக்கி நடந்தார்கள், உறவினர்கள்.

” இவ்வளவு பேரு எங்க போறீங்க ? “

என்று இடைமறித்தாள், ஒரு செவிலித்தாய்.

” எம் பொண்ணு வரலட்சுமியைப் பாக்க “

என்று நா தழு தழுக்கச் சொன்னார், தணிகை மலை

” இவ்வளவு பேர் எல்லாம் உள்ள போகக் கூடாது. “

அந்தச் செவிலித் தாய் திட்டிக் கொண்டிருந்த போது,

” சரி விடும்மா, இது ரொம்ப சென்சிட்டிவான விசயம். பாத்துட்டு வந்திரட்டும் “

என்று ஒரு மருத்துவர் அனுமதியளிக்க, இது தான் சமயமென்று அவசரச் சிகிச்சைப் பிரிவை நோக்கி ஓடினார்கள், வரலட்சுமியின் உறவினர்கள்.

செக்கச் செவேரென்றிருந்த வரலட்சுமியின் சிவந்த பொன்மேனி தீயில் கருகி சுருங்கிப் போய் கிடந்தது. கை கால்கள் விரைக்க நெடுஞ்சாண்டையாகக் கிடந்தவளின் உடம்பெல்லாம் மருந்து பூசப்பட்டு, வாழை இலை சுற்றப்பட்டுக் கிடந்தாள்.

மூச்சுவிட்டுக் கொண்டிருப்பதால் அவள் இன்னும் உயிரோடு தான் இருக்கிறாள் என்பதை அறிந்த உறவினர்கள் எல்லாம் அவசர சிகிச்சைப் பிரிவுக்குள் நுழைந்து அலறித் துடித்தார்கள்.

” என் கண்ணு….. என் சாமி… பொண்ணுப் போல, பூப் போல பாெத்திப் பொத்தி வளத்த மகள ஒரு குடிகாரப் பயலுக்குக் கட்டி கொடுத்து தினந் தோறும் அக்கப்போரு, சண்ட பிரச்சனை. இப்படி வாழத் தகுதி இல்லாம உடம்புல மண்ணெண்ணெய ஊத்தித் தீய வச்சுக்கிட்டயே தாயி. இது உனக்கே நல்லா இருக்கா? “

என்று அழுது துடித்தார்கள், வரலட்சுமியின் சொந்த பந்தங்கள் .

அவளின் காலடியில் அமர்ந்த காமுகம்மாள் ,அவளின் இரண்டு பாதங்களையும் பற்றிக் கொண்டு தலையில் அடித்து அடித்து அழுது கொண்டே இருந்தாள்.

” சின்ன வயசிலயிருந்து மாரியாத்தா கோயிலுக்கு வருசா வருசம், தியில எரிஞ்ச மரக்கட்ட கங்குகள் கனகனன்னு கனக்கிற தீ மிதிக்கிற திருவிழாவில கலந்துக்கிருவியே, அப்பயெல்லாம் இந்தக் கால்ல தீ பட்டு ஒரு சின்னக் காயம் கூட உனக்கு ஆகலயே வரலட்சுமி. சின்ன வயசுல இருந்தே கோயிலுக்கு விரதம் இருந்து தீ மிதிப்ப. உன்னோட தியாகம் கூட அந்தச் சாமிக்குத் தெரியலயா ? மாரியாத்தா வருஷமெல்லாம் உன் கோயில்ல தீமிதிச்சு நேத்திக்கடன் தீர்த்த மகளுக்கு தீயிலேயே அபிஷேகம் பண்ணி இருக்கியா ? இதுதான் உன் கருணையா ? இதுதான் உன் சக்தியா ? “

என்று வரலட்சுமியின் கால்களைத் தன் தலையில் வைத்து அடித்துக் கொண்டு கதறிக் கதறி அழுதாள், காமுகம்மாள்.

எந்த அசைவமுன்றி படுத்து கிடந்தாள், வரலட்சுமி.அவள் படுத்துக் கிடக்கும் கட்டிலைச் சுற்றி உறவினர்களும் நண்பர்களும் பேசிக் கொண்டிருந்ததையெல்லாம் தன் காதில் வாங்கிக் கொண்டு, எதற்கும் பதில் சொல்ல முடியாத நிலையில் இருந்த வரலட்சுமியின் இரண்டு கண்களின் ஓரம் கண்ணீர் வழிந்து கொண்டே இருந்தது.

” வரலட்சுமி நீ ஒன்னும் கவலைப்படாதம்மா. கடவுள் நமக்குத் துணையா இருப்பாரு. நிச்சயமாக உன்னைக் காப்பாத்துவாரு. நீ சின்ன வயசில இருந்து தீ மிதிச்சு இருக்க. அந்தச் சக்தி உன்னையக் கண்டிப்பா காப்பாத்தும் “

என்று தணிகை மலை அழுது கொண்டே சொன்னார்.

” உனக்கு எதுவும் ஆகாது அக்கா. நாங்க இருக்கோம்”. கடவுள் இருக்கு.

என்று கவிதாவும் சொல்ல , அவளின் அருகே காமுகம்மாளும் அழுதுகொண்டே நின்று கொண்டிருந்தாள். அப்போதும், எதுவும் பேச முடியாமல் அழுது கொண்டே இருந்தாள், வரலட்சுமி.

” சரி, வாங்க, இவ பிழைக்கிறதும் இல்லாமப் போறதும் கடவுள் கையில தான் இருக்கு “

என்று பேசிக் கொண்டே அந்த மருத்துவமனையை விட்டு வெளியே வந்தார்கள் உறவினர்கள்.

” ஸ்ரீ மாரியம்மாள் உயர்தர மருத்துவமனை “

என்று அந்த மருத்துவமனைச் சுவற்றில் எழுதியிருந்தது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *