சிறுகதை விழாக்கள்

சிறுகதை … தள்ளுபடி விழா..! விழா 18 …. ராஜா செல்லமுத்து

Makkal Kural Official

ஆடி மாதம் ஆனாலே தெருத் தெருவுக்கு தள்ளுபடி விற்பனையை ஆரம்பித்து விடுவார்கள் வியாபாரிகள். தக்காளி முதல் தங்கம் வரை அத்தனையும் இந்தத் தள்ளுபடியில் அடங்கும்.

” என்ன புவனா ,இந்த வருசம் ஆடித்தள்ளுபடியில துணிமணிகள் நிறைய வாங்கலாமா ?

“ஆமா கெளசல்யா, எந்த வருசமும் இல்லாத அளவுக்கு இந்த வருசம் ஆடித்தள்ளுபடியில அதிகமான ஜவுளிகள் வர்றதா சொல்றாங்க. “

“ம்…ஆடித் தள்ளுபடி விற்பனைன்னு விளம்பரம் போட்ட முதல் தேதியிலேயே நாம போனம்னா, நல்ல நல்ல ஜவுளிகள அள்ளிட்டு வந்திரலாம். அத விட, நல்ல துணிமணிகளும் கிடைக்கும் “

என்று ஆடித் தள்ளுபடியில் ஜவுளிகளை வாங்க ஆயத்தமானார்கள், புவனாவும் கெளசல்யாவும்.

தீபாவளித் திருநாளை போல் ஜவுளிக்கடையில் திரண்டு இருந்தது மக்கள் கூட்டம் .போன காெரோனா திரும்ப வந்து விடுமோ ? என்று அஞ்சும் அளவிற்கு அப்படி ஒரு கூட்டம். எள்ளுப் போட்டால் எள்ளுக் கீழே விழாத படிக்குக் கூட்டம் .ஒரு கடையில் முப்பது சதவீதம் தள்ளுபடி என்றால் இன்னொரு கடையில் நாற்பது சதவீதம் அதற்கு அடுத்த கடையில் ஐம்பது சதவீதம் என்று எக்கச்சக்கமான தள்ளுபடிகள் போட்டிருந்தனர்

“நான் கூட, எப்பவுமே ஆடி தள்ளுபடியில தான் ஜவுளிகள் எடுப்பேன். தாராளமா தள்ளுபடி செஞ்சு, ஏராளமா விப்பாங்க. இப்பவே இந்தத் தள்ளுபடியில தீபாவளிக்கும் எடுத்து வச்சுட்டோம்னா அதுக்கும் பயன்படும் “

என்று இருவரும் பேசிக் கொண்டார்கள்.

சிறிது நேரத்திற்கெல்லாம் ஜவுளிக் கடைகளுக்கு வந்தனர், ஜவுளிக் கடைகளில் அலைமோதிய கூட்டம் , ஜவுளிகளை அள்ளிக் கொண்டு சென்றார்கள். பில் போடும் ஆட்களுக்கு நல்லி எலும்பு உடைந்து விடும் அளவிற்கு இடைவிடாத வேலை இருந்து கொண்டே இருந்தது.

” பத்தாயிரம் ரூபாய்க்கு இவ்வளவு எடுத்திருக்கிறோம். இதே சாதாரண நாளா இருந்தா ? நாம இவ்வளவு எடுத்திருக்க முடியாது. ஆடித்தள்ளுபடி அப்படிங்கிறதால தான் நாம இவ்வளவு எடுக்க முடியுது. மகாராஜன் ஜவுளி கடைக்காரங்க நல்லா இருக்கணும் ” என்று வாழ்த்தினார்கள், புவனாவும், கெளசல்யாவும்.

இதையெல்லாம் பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்த பெஞ்சமின், ஆடித் தள்ளுபடிக்கு ஜவுளி எடுக்க வந்த ஒருவரைக் கூப்பிட்டான்

” ஐயா உங்க பேர் என்ன ? ” சிங்காரம் ங்க “

” என்ன சிங்காரம் சார் இங்க ஏன் வந்திங்க?

” என்னங்க. இப்படிக் கேட்டுப்புட்டிங்க. ஆடித்தள்ளுபடியில ஜவுளி எடுக்க வந்தேன். கூட்டம் இப்பிடி அலை மோதிக்கிட்டு இருக்கு. இப்ப போய் எங்க வந்தீங்கன்னு கேட்டுக்கிட்டு இருக்கீங்க ? ஆளுக ஜவுளிகள அள்ளிட்டுப் போறதுக்கு முன்னாடி நாமளும் போய் முண்டியடிச்சு முதல்ல ஜவுளிகள அள்ளிட்டு வந்திடணும் இல்ல எதுவும் இல்லாம போகும் “

என்று சிங்காரம் சொல்ல, கடகடவெனச் சிரித்தார், பெஞ்சமின்.

” என்ன இப்படி சிரிக்கிறீங்க? ” என்று அவர் கேட்க

” அடப்படுபாவிப் பயலுகளா? ஆடித்தள்ளுபடி அப்படிங்கறத நீங்க உண்மைன்னு நினைச்சுகிட்டு இருக்கீங்களா?

என்று பெஞ்சமின் பூடகம் போட

” நீங்க என்ன புதுசா சொல்றீங்க? ஆடித் தள்ளுபடிங்கிறது உண்மையான தள்ளுபடி தானே ? அதுல தான வியாபாரம் பண்றாங்க” என்று சிங்காரம் கேட்க

” அதுல ஒரு சூட்சுமம் இருக்குதுங்க. உங்களுக்கெல்லாம் தெரியாது. ஆடித் தள்ளுபடி, தீபாவளி தள்ளுபடி ,ரம்ஜான் தள்ளுபடி, கிறிஸ்துமஸ் தள்ளுபடின்னு போட்டு விக்கிறது ஒரு கண் துடைப்பு. ஏமாற்று வேலை . அது உங்களுக்கு எல்லாம் தெரியாது. “

என்று பெஞ்சமின் சொல்ல

” அது எப்படி ? நீங்க ஐவுளி வாங்குவதற்கு வக்கில்லாம, வாங்குறவங்ள இப்படி வக்கனையா குத்தம் சொல்லிக்கிட்டு இருக்கீங்க. இது தப்பு “

என்று சிங்காரம் சொல்ல

“நான் சொன்னா உங்களுக்குத் தெரியாது. தள்ளுபடிங்கிற பேர்ல இங்க என்ன நடக்குதுன்னு தெரியுமா ?

என்று பெஞ்சமின் உண்மையை உடைத்தார்.

” வாங்கி வச்சு விக்காமத் தேங்கிக் கெடக்கிற துணிகளை எல்லாம் எப்படி விற்பனை செய்றதுன்னு ஜவுளிக் கடைக்காரங்க எல்லாம் கூட்டா ஒரு திட்டம் போடுவாங்க.. இருக்கிற ஜவுளிகளை எல்லாம் மொத்தமா சேத்து , அதோட அசல் விலையில இருந்து, இன்னும் கொஞ்சம் கூடுதலா வச்சு பில் போடுவாங்க. அத ஆடித்தள்ளுபடி ன்னு விற்பனை செய்வாங்க. இப்படித் தான் இங்க ஆடித்தள்ளுபடி தீபாவளித் தள்ளுபடின்னு விளம்பரம் போட்டு வியாபாரம் பண்ணிட்டு இருக்காங்க”

என்று பெஞ்சமின் சொல்ல

” அப்படியெல்லாம் இல்லீங்க. நீங்க தப்பா சொல்றீங்க “

என்று சிங்காரம் முறுக்க,

” நான் சொல்றது பொய்யா இருக்கும்னு நினைக்கிறீங்கள்ல . இப்ப நீங்க ஆடித் தள்ளுபடியில எடுத்திருக்கிற ஒரு சில டிரஸ்களப் போட்டோ எடுத்துக்கங்க. இந்த ஆடித் தள்ளுபடி முடிஞ்சதுக்கு அப்புறம், அதே டிரஸ்கள அந்தக் கடையில போய் பாருங்க. அந்த டிரஸ்களுக்கு என்ன விலை போட்டு இருக்காங்கன்னுஅப்பத் தான் உங்களுக்கு என்னன்னு புரியும்”

என்று பெஞ்சமின் சொல்ல ” நீங்க சொல்ற மாதிரி எல்லாம் இருக்காது”

” இல்லங்க. நான் சொல்றத கேளுங்க. ஒரு போட்டோ எடுத்து அதனுடைய விலை என்னன்னு தெரிஞ்சுக்க. ஆடித்தள்ளுபடி முடிஞ்சப்புறம் அதே டிரஸ்களுக்கு என்ன விலைன்னு பாருங்க . அப்ப தெரிஞ்சுடும் இந்த தள்ளுபடிச் சூட்சுமம் “

என்றார், பெஞ்சமின்

“என்ன நீங்க தள்ளுபடிகள சந்தேகப்படுற மாதிரியே சொல்றீங்களே ? சரி நீங்க சொல்றத என்னன்னு தான் பார்க்கலாம்”

என்று சொல்லிய சிங்காரம் தான் ஆடித் தள்ளுபடியில் வாங்கிய சட்டையும் ஃபேண்டையும் போட்டோ எடுத்து வைத்துக் கொண்டார்.

” நீங்க சொன்ன மாதிரி நான் எடுத்த டிரஸ்கள போட்டோ எடுத்திட்டேன். தள்ளுபடி முடிஞ்ச பெறகு பாக்குறேன் “

என்று பெஞ்சமினிடம் சொன்னார், சிங்காரம்.

சில நாட்களில் ஆடித் தள்ளுபடி முடிந்தது. அன்று பெஞ்சமினும் சிங்காரமும் அதே கடைக்குள் நுழைந்தார்கள் .

சிங்காரம் எடுத்த போட்டோவையும், அங்கு தொங்கிக் கொண்டிருக்கும் துணிகளையும் இருவரும் மாறி மாறித் தேடினார்கள்

” இங்க இருக்கு பாருங்க. நீங்க வாங்குன சட்டை , ஃபேண்ட் “

என்று பெஞ்சமின் சொல்ல.

” ஆமா, அதே டிரஸ்கள் தான் “

என்று, தான் வாங்கிய அதே சட்டைச் காலரைத் திருப்பி விலையைப் பார்த்த சிங்காரத்துக்கு ‘சுரீர்’ என்று வலித்தது .

அந்தச் சட்டையின் விலை வெறும் முன்னூறு ரூபாய் மட்டுமே போட்டிருந்தது. ஆடித்தள்ளுபடியில் ஆயிரம் ரூபாய் பெறுமானமுள்ள இந்தச் சட்டை வெறும் நானூறு ரூபாய்க்கு கிடைக்கும் என்று, முன்னூறு ரூபாய் சட்டையை நூறு ரூபாய் லாபம் வைத்து நானூறு ரூபாய்க்கு, அதே சட்டையை விற்பனை செய்திருக்கிறார்கள்என்று வருத்தப்பட்டார்,சிங்காரம். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்து வாய் பேச முடியாமல் பெஞ்சமினிடம் ஆடித் தள்ளுபடியில் வாங்கிய பில்லையும், இப்போது ,ஜவுளிக் கடையில் தொங்கும் சட்டைக் காலரில் இருக்கும் பில்லையும் காட்டினார்.

” பாத்தீங்களா ? ஆடித் தள்ளுபடிங்கிற பேர்ல நீங்க தான் நஷ்டப்பட்டு இருக்கீங்க. ஆடித்தள்ளுபடின்னு ஓடிப்போய் சட்டை வாங்குனீங்க துணிமணிகளை வாங்குனீங்க. ஆனா ஒரிஜினலான விலை முன்னூறு ரூபா தான். அவன் ஆயிரம் ரூபாய் உள்ள சட்டைன்னு நானூறு ரூபாய்க்கு வித்திருக்கான் அப்பவும் நூறு ரூபாய் லாபம் பாத்திருக்கான். அப்போ நீங்க தான் தள்ளுபடிங்கிற பேர்ல நூறு ரூபா அதிகமா கொடுத்து தான் பொருள வாங்கி இருக்கீங்க. இப்பத் தெரியுதா இந்த ஆடி தள்ளுபடியோட லட்சணம் “

என்று பெஞ்சமின் சொல்ல

சிங்காரம் புத்தியில் சுரீர் என்று உரைத்தது.

” எனக்கு புரியுது. இந்த மக்களுக்கு எப்பப் புரியப் போகுதோ? இதை யாரு சொன்னாலும் இவங்க கேக்க மாட்டாங்க. நம்மளத்தான் கிறுக்கன்னு நினைப்பாங்க “

என்று மயங்கிய நிலையில் இருந்த சிங்காரம் ஒரு தெளிவுக்கு வந்தார்.

” ஏய் புவனா, இங்க பாத்தியா? இந்தச் சேலையோட விலை அறுநூறு மட்டும் தான்னு போட்டு இருக்கு’ என்று கெளசல்யாவிடம் சொன்னாள்.

” இங்க பாருடி என்னோட சுடிதாரும் எழுநூறு ரூபாய் தான் போட்டு இருக்கு ” என்று தள்ளுபடிகளின் சூட்சுமம் தெரியாமல் பேசினர், இருவரும்..

அடுத்தடுத்து தீபாவளி, கிறிஸ்துமஸ் பண்டிகைத் தள்ளுபடி விழாவிற்குத் தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தார்கள், .

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *