வாடிக்கையாளர் கொடுத்த பத்து ரூபாய் நாணயத்தை உற்று உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார், பலசரக்குக் கடைக்காரர்.
” சார், எல்லாம் நல்ல காசு தான். என்னமோ இந்தப் பத்து ரூபா நாணயத்த நாங்களே அச்சு வார்த்துக் கொடுத்த மாதிரியே இப்பிடி உத்து உத்துப் பார்த்துகிட்டு இருக்கீங்க? எல்லாம் உங்களை மாதிரிக் கடைக்காரங்க எங்களுக்கு கொடுக்கிற காசு தான் சார் . நம்பி வாங்கிப் போடுங்க. எதுவும் வராது”
என்று கடைக்காரரிடம் தன் நாணயத்தைப் பற்றி நாணயமாகப் பேசினான், நாராயணன்
” இல்லங்க, இந்தக் காசுல ஏதோ குறையிற மாதிரி இருக்கு “
என்று மறுபடியும் அதை முன்னும் பின்னும் திருப்பித் திருப்பிப் பார்த்தார்.
” என்னமோ குறையுற மாதிரி இருக்குங்க” என்று தன் கையில், மேலும் கீழும் தூக்கிப்போட்டு எடை பார்ப்பது போல் பார்த்துக் கொண்டிருந்தார்.
“சரி பத்து ரூபா தானே?” என்று சலிப்படைந்த அந்தக் கடைக்காரர், போனால் போகட்டும் என்று நாராயணன் கொடுத்த பத்து ரூபாயை வாங்கிக் கொண்டு, அதற்கான பொருளைக் கொடுத்தார். அந்தப் பத்து ரூபாயைத் தன் கல்லாவில் போட்டாலும் அந்த நாணயத்தின் மீது, அவருக்குப் பெருத்த வருத்தம் இருந்தது. மறுபடியும் அந்த நாணயத்தை எடுத்துப் பார்த்தார். பழைய நாணயத்தோடு ஒப்பிட்டுப் பார்த்தார். இரண்டும் ஒன்றாகவே இருந்தன.
‘சரி போனது போகட்டும். இவனப் பாத்தா நாணயத்த அச்சு வார்க்கிற ஆள் மாதிரியா இருக்கு “
என்று அதைக் கல்லாவில் போட்டு விட்டு, வேறு வியாபாரத்தைத் தொடர்ந்தார், கடைக்காரர்.
” நாம கொடுத்த காசு கொஞ்சம் சந்தேகம் வந்தாலும் கடைக்காரன் பெருசா யோசிக்கல .நம்முடைய இந்த நாணயத்தைப் புழக்கத்தில விட்டுற வேண்டியது தான் “
என்று யோசித்தான், நாராயணன் .
” என்ன நாராயணா … எல்லாம் சரியா வருமா?” என்று நாராயணனின் நண்பர்கள் கேட்க
” சரியா வந்திருச்சு “
நாணயம் தயாரிக்கும் இயந்திரத்தில் இருந்து பத்து ரூபாய், அஞ்சு ரூபாய் நாணயங்கள் என்று கொட்டோ கொட்டு என்று கொட்டிக் கொண்டிருந்தன. மாவு அரைக்கும் மிஷினில் மாவை அள்ளுவது போல ,நாணயங்களை அள்ளிக் கொண்டிருந்தார்கள் நாராயணனின் நண்பர்கள் .
” இதைக் கொஞ்சங் கொஞ்சமா செலவழிக்கிறத விட மொத்தமா கொடுக்கறதுதான் புத்திசாலித்தனம். புது நாணயமா இருந்தா எல்லாருக்கும் சந்தேகம் வரும். இதப் பழைய நாணயமா மாத்துனா மட்டும்தான் நாம இந்த நாணயங்களை மக்களிடம் புழக்கத்தில விட முடியும். அதுக்கு ஒரு வழி இருக்கு “
என்று சொன்னான், நாராயணனின் நண்பன் தேவ நேசன்
“என்ன பண்ணப் போற ? “
என்று சுதர்சனம் கேட்க
” அதுக்கெல்லாம் வேற வழி இருக்கு. நைட்டுப் பாரு. அப்பதான் என்னன்னு உங்களுக்குத் தெரியும். “
என்ற தேவநேசன் அந்த இரவு எல்லாக் கோயில் பொது இடங்களிலும் படுத்திருந்த பிச்சைக்காரர்களை எல்லாம் கூட்டி வந்து சாப்பாடு போட்டான்.
” டேய் உனக்கு என்ன லூசா புடிச்சிருக்கு ? இவனுகளை எல்லாம் கூட்டிட்டு வந்து ஏன் சாப்பாடு போட்டுக்கிட்டு இருக்க ? ” என்று நாராயணன் உட்பட எல்லோரும் திட்ட
” வெள்ளைச் சட்டை போட்டு இருக்கிறவன் தான் படிச்சவன். பணக்காரன். உண்மையாவன்னு நினைக்காத. இன்னைக்கு தேதியில இந்த மாதிரி அழுக்கா இருக்கவங்க கிட்ட தான் நிறைய நல்ல குணங்கள் இருக்கு. பல பிச்சைக்காரங்க பள்ளிக்கூடம் கட்டிக் கொடுத்திருக்காங்க .பல லட்ச ரூபாய் நன்கொடையாக கொடுத்திருக்காங்க. இவங்க ஆளு வேணா அழுக்கா இருக்கலாம் .அவங்க வச்சிருக்கிற காசு சுத்தமானது. மதிப்பு மிக்கது. “
என்று சொன்ன தேவநேசனை ஒரு மாதிரியாகப் பார்த்தான் நாராயணன்.
” சரி இப்ப என்ன பண்ண போற? “
புதிதாக அடிக்கப்பட்ட நாணயங்களை எல்லாம் மணலில் போட்டு அழுக்கு ஆக்கினான் தேவநேசன்.
” இந்த நாணயங்கள் எல்லாம் இப்ப எப்படி இருக்கு?” ” ஓரளவுக்கு அழுக்கா இருக்கு “
” ம்” ” பஸ் கண்டக்டர் ,ஹோட்டல்காரன் அப்படி இப்படின்னு சில்லறைக் காசுகள் தேவைப்படுறவன் எல்லாம் பணத்தை கொடுத்துட்டு உங்க கிட்ட தான் சில்லறைய வாங்கிட்டுப் போறாங்க.இந்த நாணயங்களை எல்லாம் நீங்க மாத்தி கொடுத்துட்டீங்கன்னா உங்களுக்கு கமிஷன் இருக்கு. நீங்க எங்கேயும் பிச்சை எடுக்க வேணாம். தினந் தோறும் இங்க வந்தா போதும். மூணு வேளை சாப்பாடு . மாதச் சம்பளம் குடுக்கிறோம். ஆனா ஒன்னு, நீங்க குளிக்க கூடாது. இதே பிச்சைக்கார வேஷத்துல இருந்தா மட்டும் தான் இருக்கணும். அப்பத் தான் உங்கள நம்புவாங்க”
என்று தேவநேசன் அவர்களுக்குப் பயிற்சி கொடுத்தான்,
” ஐயா மகராசா, நீங்க என்ன சொன்னாலும் செய்றோம். காசக் கொடுங்க” என்று கேட்க , நாணயங்களை மூட்டை மூட்டையாக வாங்கினார்கள், அந்தப் பிச்சைக்காரர்கள். வழக்கம் போல பிச்சைக்காரர்களிடம் சில்லறை வாங்கும் கண்டக்டர்கள், சில்லறை தேவைப்படும் ஹோட்டல்காரர்கள் என்று அத்தனை பேரும் பணத்தைக் கொடுத்து, சில்லறையை வாங்கிப் போனார்கள். நாணயங்கள் புதிதாக இருந்தபோது பெரிதாக சந்தேகம் வந்தது. அழுக்கான பிறகு அவ்வளவு சந்தேகத்திற்கு இடமாகவில்லை. அந்த இரவே அச்சடிக்கப்பட்ட நாணயங்கள் எல்லாம் நோட்டுகளாக மாற்றினார்கள்
பிச்சைக்காரர்கள்
” பாத்தியா, ஏமாத்துனா மட்டும்தான் இங்க பணக்காரனா வாழ முடியும். உண்மைய சொன்னா உண்மையா தான் வாழலாம். உயர முடியாது”
என்று தத்துவம் சொன்னான், தேவநேசன்.
பிச்சைக்காரர்களுக்குக் கொடுக்க வேண்டிய கமிஷனையும் கொடுத்தான்.
“ஐயா நாளைக்கு வரலாமா? “
” தினம்தோறும் வாங்க .உங்களுக்குக் கமிஷன் வரும் சுவையான உணவு வரும். தவறியும் நீங்க குளிக்கக் கூடாது “
என்று கட்டளையிட்டு அனுப்பினான். தேவ நேசன் .
மக்கள் புழக்கத்தில் இருந்த நாணயத்தின் மீது ஒரு சிலருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அரசாங்கம் அச்சிடும் நாணயத்திற்கும் புதிதாக இருந்த நாணயத்திற்கும் உள்ள வித்தியாசத்தை அறிந்த சிலர் காவல்த்துறையிடம் புகார் செய்தார்கள்.
இரண்டு நாணயங்களையும் ஒப்பிட்டுப் பார்த்து நாராயணன் குரூப் அடிக்கும் நாணயம் போலியான நாணயம் என்று உறுதி சொன்னார்கள், காவல்த்துறையினர்.
” இந்த நாணயங்களை யார் அடிக்கிறார்கள்? எங்கே இருந்து இந்த நாணயங்கள் வருகின்றன “
என்று காவல்துறையினர் யோசிக்க,
பொறி வைத்து, நாராயணன் குரூப்பைப் பிடித்தார்கள், காவல்த்துறையினர்.
” உண்மையைச் சொல்லுங்க .இந்த வேலையை யார் செய்றது? இதுக்கு பின்னாடி யார் யார் இருக்கிங்க “
என்று காவல் துறையினர் கேட்க
” ஐயா, நாங்க தான்யா இந்த வேலையச் செய்றோம் .காகிதத்துல கள்ள நோட்டு அடிச்சா, நீங்க கரெக்டா கண்டுபிடிச்சுடுறீங்க..ஆனா, இந்த நாணயத்தை உங்களால கண்டுபிடிக்க முடியாது. இத அடிக்கிறதுக்கு செலவு அதிகம் அப்படின்னு நீங்க நினைப்பீங்க. தங்கத்துக்கு நிகரா கவரிங் நகைகள் இருக்கிற மாதிரி. அரசாங்கம் அடிக்கிற நாணயத்திற்கு நிகரா போலியான மெட்டல் எங்ககிட்ட இருக்கு “
என்று உண்மையைக் கக்கினான், நாராயணன்.
” இதெல்லாம் எங்க வச்சுடா அடிக்கிறீங்க ? “
என்று காவலத்துறை அரட்டிக் கேட்க
” தமிழ்நாட்டில தமிழே பேசாத ஒரு இடம் இருக்கு. அது உங்களுக்குத் தெரியுமா ? “
என்று பூடகம் போட்டான், நாராயணன்.
” என்னது தமிழ்நாட்டுல தமிழே பேசாத இடமா ? அது எங்கடா இருக்கு. “
” இன்னும் கொஞ்ச நாள்ல தமிழ்நாடு ஹிந்தி பேசுற நாடாகும் சார். இப்ப முக்கால்வாசி பேரு இங்கிலீஷ் ஹிந்தியில் தான் பேசிட்டு இருக்காங்க. இந்தியத் தானே தமிழ்நாட்டுல நுழைக்கக் கூடாதுன்னு சொன்னீங்க. இந்திக்காரன நுழைச்சா என்ன பண்ணுவீங்கன்னு , இந்திக் காரன தமிழ்நாட்டுல நுழைச்சிட்டாங்க இப்ப முக்கால்வாசிப் பேர் ஹிந்தி பேசுறவனாக தான் இருக்கான். ஆனா நான் சொல்ற இடத்துல எல்லா மொழி பேசுறவனும் இருக்கான் “
” என்னடா, எங்களுக்குத் தெரியாம அப்படி ஒரு இடம் இருக்கா?”
என்று வியப்பாய் கேட்டார்கள் காவல்த்துறையினர்.
” வாங்க சார் காட்டுறேன்”
என்று கூட்டிப் போனார்கள் , நாராயணனும் நண்பர்களும். கள்ள நாணயம் தயாரிப்பதைக் கண்டுபிடிப்பதற்காக அவர்களின் பின்னால் செல்வது தவறில்லை
என்று எண்ணினார்கள், காவல்த்துறையினர்.
சிறிது நேரத்திற்கெல்லாம் அந்த இடத்திற்குச் சென்றார்கள்.
” சார் , இந்த இடத்தில பதினேழாம் நூற்றாண்டுல இருந்து ஒரு சுடுகாடு இருந்துச்சு . அது இப்ப இல்ல. போர்த்துக்கீசிய வணிகர்கள் அந்த ஏரியாவுல பெரிய கட்டடம் கட்டினாங்க. பதினெட்டாம் நூற்றாண்டுல வாழ்ந்த இங்கிலீஷ் காரங்க தங்களுடைய துணிகளைத் துவைக்கிறதுக்காக தெலுங்கு தேசத்திலிருந்து மக்களக் கொண்டு வந்தாங்க . இவங்க எல்லாருமே தெலுங்கு பேசுறவங்க தான். அது மட்டுல்லாம துவாஷி மொழிங்கிற இரட்டை மொழி பேசுற ஆளுகளும் இங்கே வந்து சேர்ந்தாங்க. குஜராத்தில இருந்து சௌராஷ்டிரா இனத்தை சேர்ந்தவர்களையும் பிரிட்டிஷ்காரன் தான் கொண்டு வந்து விட்டான். ஆந்திரம், குஜராத், டெல்லி, ராஜஸ்தான், மார்வாடிகள், துவாஷின்னு இப்படி ஆளுக தான் இந்தச் சாலையில நிறைய இருக்காங்க.இப்படிப் பல மொழி பேசுற மக்கள் எல்லாம் இங்க இருக்கிறதால தான் தமிழ் பேசுறவங்க இங்க யாருமே இல்ல. இந்தச் சாலையில இருக்கிற உணவு முறை தமிழர்களோட ஒத்துப் போகாது “
என்று நாராயணன் சொல்ல,
” டேய், இது எல்லாம் உனக்கு எப்படிடா தெரியும் ? “
“எல்லாம் படிச்சது சார்” ” இவ்வளவு சொல்லிட்டியே ?
இந்த நாணயங்கள அச்சிடுறதுக்கு ஏதாவது வரலாறு இருக்கா? “
என்று ஒரு காவலர் கேட்க
” சார் , அதையும் என் வாயாலயே கேக்குறீங்களா? “
” ஆமாடா , நீயே சொல்லு, அது நல்லா இருக்கும்ன்னு நினைக்கிறேன்”
” சார், அடிக்க மாட்டிங்களே ?”
” இல்ல . சொல்லு “
” சார், 4000 வருசத்துக்கு முன்னாலேயே முதன் முதல்ல நாணயத்த கிரேக்கர்கள் தான் தயாரிச்சாங்க. கிரேக்க நாட்டிலிருந்து இத்தாலி, பாரசீகம், இங்கிலாந்துக்கு அனுப்புறாங்க. அப்புறம், 1640 ல ஹேல்ங்கிற அதிகாரி தான் நாணயச் சாலைய ஏற்படுத்தினார். அந்த நாணயச் சாலைய லிங்கச் செட்டிங்கிறவர் தான் கவனிச்சிட்டு வந்தார்.
” டேய் என்னாடா இவ்வளவு விஷயங்களச் சொல்ற ?”
” இன்னும் இருக்கு சார்,1841– 1842–ம் ஆண்டுல கிழக்கு இந்திய கம்பெனிக்காரங்க தான் நாணயத்தை அச்சடிக்கிற தொழிற்சாலை ஆரம்பிச்சிருக்காங்க.அவங்க மின்ட சாலைன்னு பேர் வச்சாங்க. அப்புறம் தான் அது தங்கச்சாலைன்னு பேர் மாறுச்சு” என்று நாராயணன் சொல்ல,
” ஏண்டா டேய், அடிச்சது கள்ள நாணயம், தெரிஞ்சு வச்சிருக்கிறது உலக வரலாறு. நல்ல அறிவு இருக்கு. ஏன் இப்படி அரசாங்கத்துக்கு எதிரா வேல பண்றீங்க ? உண்மையச் சொல்லுங்கடா எங்க இந்த நாணயங்கள எல்லாம் அச்சடிச்சீங்க ” என்று ஒரு காவலர் கேட்க
” இங்கதான் சார். இந்தச் சாலையில் தான் நாங்க நாணயத்தை அச்சு அடிச்சாேம்” என்று தங்கச்சாலையில் உள்ள ஒரு இடத்தைக் காட்டினான், நாராயணன்.
” நல்ல நாணயம் அச்சடிக்கிறதுக்காக நாணயத் தொழிற்சாலைய ஆரம்பிச்சு அதுக்குத் தங்கச் சாலைன்னு பேரு வச்சிருக்காங்க. நீங்க என்னாடான்னா கள்ள நாணயம் அச்சடிக்கிறது இந்த இடத்தைப் பயன்படுத்தி இருக்கீங்களா? என்று நாராயணனையும் அவன் நண்பர்களையும் நையப்படைத்தார்கள்.
” சார், எங்கள விட்டுருங்க சார், உங்களுக்கு கோடிக்கணக்கான நாணயங்களைக் கொடுக்கிறோம்”
என்று பல மூட்டைகளைக் காட்டினான். நாராயணன்.
” டேய், எங்களுக்கே கள்ள நாணயங்களைக் குடுக்கிறீங்களா?”
என்று மேலும் அவர்களை அடித்து, அங்கிருந்த நாணய மூட்டைகளைப் பிய்த்து எறிந்தார்கள். நாலா பக்கமும் சிதறி ஓடின, கள்ள நாணயங்கள் தங்கச் சாலையில்.
![]()





