பதினைந்து அடி உயரம்.. மூன்று அடி அகலத்தில் சிலை செய்தாயிற்று. மேல்பூச்சு, கீழ் பூச்சு வேலைகள் முடிந்து சிலையை நிறுவுவதற்கு இன்னும் ஐந்து நாட்களே இருந்தன.
‘சிலையை எப்படிக் கொண்டு வரலாம்?’
என்று தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தார், கிருஷ்ணன்.
” பெரிய லாரி வச்சுக் கொண்டு வந்திரலாமா? ” என்று கிருஷ்ணனின் நண்பன் குணா கேட்க
“லாரியில வச்சுக் கொண்டு வந்தா ஏதாவது டேமேஜ் ஆயிருமே? அப்புறம் இவ்வளவு செலவு பண்ணுனது வேஸ்ட் ஆயிரும். கொஞ்சங்கூட கீறல் இல்லாம பாதுகாப்பா கொண்டு வரணும்”
என்று கிருஷ்ணன் சொன்னார்.
” அப்போ ஒரு பெரிய கண்டெய்னர் லாரியில கொண்டு வந்திரலாமா ? “
“கரைக்ட் . கண்டெய்னர்ல பலகைகள அடுக்கி, அதுக்கு மேல சிலையத் தூக்கி வச்சுக் கீறல் விழாத அளவுக்கு அழகா கொண்டு வந்து இறக்கிரலாம். சிலையும் அவ்ளோ பாதுகாப்பா இருக்கும். “
” ம்… ஆமா….”
“அடுத்த வாரம் சிலை திறப்பு விழா வச்சிரலாம். அதுக்கான எல்லா ஏற்பாடும் செஞ்சிருங்க “
என்று கிருஷ்ணன் சொல்ல
சிலை திறப்பு விழாவிற்கான எல்லா ஏற்பாடுகளும் மும்முரமாக நடக்க ஆரம்பித்தன. பத்திரிகை அடிப்பது. விழாவிற்கான ஏற்பாடுகள் செய்வது என்று கிருஷ்ணனின் உறவினர்களும் நண்பர்களும் குடும்பத்தார்களும் வேகமாக ஓடிக் கொண்டிருந்தார்கள் .
சிலை வைக்கும் இடத்தில் இருந்த செடிகள், கொடிகள் எல்லாம் வெட்டப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டது அந்த இடம் .
“பெரிய பெரிய தலைவர்கள் எல்லாம் வருவாங்க போல. இந்தச் சிலை திறப்பு விழாவுல எந்த அசம்பாவிதமும் நடந்திரக் கூடாது. ஜாதி, மதம், இனம், மொழிக்கு அப்பாற்பட்டது, இந்தச் சிலை திறப்பு விழா ” என்று கிருஷ்ணன் தன்னைச் சார்ந்த அத்தனை பேரிடமும் சொன்னார் .
“நீங்க கவலைப்படாதீங்க கிருஷ்ணன். இந்தச் சிலை திறப்பு விழாவில சின்னப் பிரச்சினை கூட வராது.
” இது பத்தி நீங்க கவலப்படாதீங்க. நாங்க பாத்துக்கிறோம். நீங்க உங்களுடைய வேலையில மட்டும் முழு கவனத்தையும் செலுத்துங்க. அப்பத்தான் எந்தப் பிசுறும் இல்லாம விழாவைச் சிறப்பா நடத்த முடியும் “
என்று கிருஷ்ணனை ஒருமுகப்படுத்தினார்கள் அவரின் நண்பர்கள் .
நாட்கள் கடந்தன. சிலை திறப்பு விழாவிற்கான அந்த நாளும் வந்தது . சிலை வைக்கும் இடத்தில் பெரிய பந்தல் போடப்பட்டது. மேடை, நாற்காலிகள் சகிதம் எல்லாம் ஏற்பாடானது. ஒலிபெருக்கியிருந்தாலும் எந்த பாடலும் போடாமல் அமைதியாக இருந்தது.
விழா நடக்கும் இடத்திற்கு ஒவ்வொரு கார்களாக வரத் தொடங்கின.
” இந்தச் சிலை திறப்பு விழாவுல ஏதாவது பிரச்சனை இருக்குமா?”
“அதெல்லாம் இருக்காது. “
“நீங்க தைரியமா வரலாம். பாதுகாப்புக்கு போலீஸ் இருக்காங்க”
” ஏதாவது பிரச்சனை ஏற்பட்டா கட்டுப்படுத்துறதுக்கு இன்னும் கொஞ்சம் போலீஸ் வச்சுக்கோங்க”
என்று காரில் வந்து கொண்டிருந்த முக்கியப் புள்ளி செல்வராஜ், தன்னுடன் வந்த நெல்லையப்பரிடம் கேட்டுக் கொண்டே வந்தார்.
இது எதற்கும் பதில் சொல்லாமல் சிரித்துக் கொண்டே தலையை மட்டுமே ஆட்டிக் கொண்டு வந்தார் நெல்லையப்பர்.
” இப்ப எல்லாம் எங்க பாத்தாலும் சிலை உடைப்பு. சிலைகளுக்கு அவமரியாதை பண்றது. இப்படி எத்தனையாே சாதிப் பிரச்சனைகள் ஏற்பட்டுட்டு இருக்கு. அதனால இந்தச் சிலையை நீங்க பாத்து திறக்கிறது ரொம்ப நல்லது “
” நாம எந்த சாதியையும் சார்ந்தவங்க இல்ல. அதனால் தைரியமா இந்தச் சிலையைத் திறக்கலாம் “
என்று சிரித்துக் கொண்டே சொன்னார் நெல்லையப்பர்.
சற்று நேரத்திற்கெல்லாம் விழா நடக்கும் இடத்தில் வந்து நின்றது அந்த கப்பல் வடிவ கார். செல்வராஜும் நெல்லையப்பரும் காரை விட்டு இறங்கி வந்தார்கள். விழா நடக்கும் இடத்தில் ஆட்கள் எல்லாம் குழுமியிருந்தார்கள்.
சிலைக்கு பீடம் அமைத்து ,அதற்கு மேலே சிலை நிறுவப்பட்டிருந்தது சிலையை மெல்லிய துணியால் கட்டி வைத்திருந்தார்கள் .
” சிலை பாதுகாப்பா இருக்கா? “
என்று கிருஷ்ணனிடம் கேட்டார், நெல்லையப்பர்.
” பாதுகாப்பா இருக்கு சார்”
என்றார், கிருஷ்ணன்.
” சிலையைத் திறந்திரலாமா?”
” கண்டிப்பா சார் “
என்று கிருஷ்ணன் சொல்ல, சிலையின் மீது சுற்றப்பட்டிருந்த துணியை மெல்ல மெல்ல அவிழ்த்தார்கள். தன் கையில் இருந்த எலக்ட்ரானிக் பட்டனை மெல்ல அழுத்தினார் நெல்லையப்பர்.
திரை மெல்ல மெல்ல விலகிப் பளிச்சென்று எல்லோர் கண்களுக்கும் விருந்தளித்தது அந்தச் சிலை.
சிலையைப் பார்த்து ஓ வென அழுதாள், நிர்மலா.
” சரி… சரி… அழாதே …”
என்று அவளைத் தேற்றினாள் அவளின் தோழி, காயத்ரி. கிருஷ்ணனுக்கும் கண்ணீர் பொங்கியது. அவரின் தோளைத் தட்டிய நெல்லையப்பர், ” நீங்க தாங்க உண்மையான மனுசன். மழை, வெயில், காடு, கரைன்னு கஷ்டப்பட்டு உங்கள வளர்த்து ,இந்த இடத்துக்கு கொண்டு வந்த உங்க தாயை மறக்காம, அவங்களுக்கு சிலையை வச்சு வணங்கணும் நினைச்ச உங்கள நான் உயர்வா பார்க்கிறேன். இப்படியொரு சிலையை என்னைய திறக்க வச்சதுக்கு ரொம்ப நன்றி :
என்றார், நெல்லையப்பர்.
” என்ன நெல்லையப்பர், ஒரு தாயோட சிலையைத் தான் திறக்கப் போறோம்னு ஏன் சொல்லல . என்னைய ரொம்ப பயமுறுத்திட்டிங்க “
என்று செல்வராஜ் குமுற
“தாய், தகப்பனக் கொண்டு போயி முதியோர் இல்லத்தில சேர்த்து விட்டுட்டு ,
நிம்மதியா வாழ்றதா நடிச்சிட்டு இருக்கவங்க மத்தியில இறந்துபோன அம்மாவோட உருவச் சிலையை திறந்து வச்சு அதை சாமியா கும்பிடணும்னு நினைக்கிற கிருஷ்ணனாேட மனநிலையை நீங்க தெரிஞ்சுக்கிரத் தான் நான் எதுவும் உங்ககிட்டச் சொல்லல”
” நான் கூட ஏதோ ஜாதித் தலைவர் சிலையைத் தான் நீங்க திறந்து வைக்கப் போறீங்கன்னு நினைச்சிட்டு இருந்தேன். ஆனா, இது பெத்த தாய்க்கு வச்சிருக்கிற சிலை. இது எவ்வளவு பெரிய விஷயம். தப்பா நினைச்சிட்டேன். இந்த கிருஷ்ணன் மாதிரி உலகத்துல எல்லா மனுஷங்களும் இருந்துட்டா பெத்தவங்களுக்கான மரியாதை கண்டிப்பாக கிடைக்கும் “
என்று சொன்னது மட்டும்,
கிருஷ்ணனின் அம்மா அமிர்தம்மாளின் சிலையை வணங்கினார், செல்வராஜ். உடன் உறவினர்கள் , நண்பர்கள், விழாவிற்கு வந்தவர்கள் எல்லாம் வணங்கினார்கள்.
அமிர்தம்மாளின் சிலைக்கு மாலை அணிவித்தார்கள். மரியாதை செய்தார்கள். சூடம் காட்டினார்கள் ஒரு தெய்வமாகவே அமிர்தம்மாளை வணங்கினார்கள்.
சிலையைப் பார்த்த சிலர் தங்கள் தாய்க்கும் தகப்பனுக்கும் சிலை வைக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டனர்,
“முதியோர்கள் இல்லத்தில் இருக்கலாம்..!
முதியோர் இல்லத்தில் இருக்கக் கூடாது. “
என்ற வாசகம் அமிர்தம்மாள் சிலையின் மீது எழுதியிருந்தது.
சிறப்பாக நடந்து கொண்டிருந்தது, சிலை திறப்பு விழா.
![]()





