” பூஜைக்குத் தேவையான எல்லாப் பொருளும் எடுத்தாச்சா?
” எடுத்தாச்சு”
“எத்தனை மணிக்குப் போகணும் ? “
” நாம முடிவு பண்ணுறது தான் “
“காலையில போனா போக்குவரத்து நெரிசல் இருக்கும். சாயங்காலம் போனாலும் அதே நிலைமை தான் ” இடைப்பட்ட நேரத்தில் பன்னெண்டு மணிக்கு மேல போனமுன்னா அந்த சாலை ஓய்வா இருக்கும்னு நினைக்கிறேன்”
என்று கமலக் கண்ணனும் விஜயகுமாரும் பேசிக் கொண்டிருந்தார்கள்.
” அங்கே என்னென்ன பண்ணனும்? “
” நேரம் இருந்தா அந்த இடத்தில பொங்கல் வைக்கலாம். இல்ல வெறும் பத்தி, சூடம், தேங்காய் பழம் மட்டும் வச்சுச் சாமி கும்பிட்டுட்டு வந்துடலாம்”
” அது போதுமா ? “
“போதும். “
” இதுக்கு போலீசில்ல பெர்மிஷன் எதுவும் வாங்கணுமா?
“சொல்லிக்கலாம். “
” இல்ல இருந்தாலும் முன்கூட்டியே நீங்க போலீஸ்ல அனுமதி வாங்குறது நல்லது .ஒருவேளை நாம சாமி கும்பிட்டு இருக்கும் போது இதெல்லாம் செய்யக்கூடாதுன்னு, அவங்க துரத்தி விட்டா அது நல்லா இருக்காதில்ல “
என்று கமலக்கண்ணன் சொல்ல,
” நீங்க சொல்றதும் சரிதான். நிச்சயமா போலீஸ்ல ஒரு வார்த்தை நான் சொல்லிடுறேன்”
என்று விஜயகுமார் ஆமோதித்தார்.
” வெளியூரில்ல இருந்தெல்லாம் ஆளுக வாராங்களா? “
“ஆமா சொந்த பந்தம்ன்னு மொத்தம் ஒரு இருநூறு பேருக்கு மேல வருவாங்கன்னு நினைக்குறேன். அதுதான் கொஞ்சம் கூட்டமா இருக்கும் “
” அப்படின்னா நீங்க போலீசில்ல பெர்மிஷன் வாங்கி தான் ஆகணும். இவ்ளோ ஆளுகள ஒரே இடத்தில கூட்டி வச்சுட்டு இருந்தோம்னா போக்குவரத்துக்கு இடைஞ்சலா இருக்கும். அதுவும் நாம தனி மனுஷனக் கும்பிடுகிற விஷயமா இருக்கிறதால மத்தவங்க ஏன் எதுக்குன்னு கேள்வி கேப்பாங்க. போனமா சாமி கும்பிட்டோமான்னு சட்டுப்புட்டுன்னு கிளம்பிரனும்”
என்று கமலக்கண்ணன் விஜயகுமாரன் இருவரும் பேசிக் கொண்டிருக்கும்போதே அத்தனை சொந்த பந்தங்களும் ஒன்று கூடினார்கள் .
“வேன் வந்திருச்சா ? “
என்று சாந்தி கேட்க
“வந்திருச்சு”
” சரி போலாங்க “
என்று எல்லோரும் ஒன்று கூடி வந்த வேனில் ஏறி கோவிந்தன் சாலையை நோக்கிப் புறப்பட்டார்கள்.
” எந்த வழியா போகலாம்? “
” கோடம்பாக்கம் மேம்பாலம் ஏறி வலது கைப் பக்கம் வித்யோதயா ஸ்கூல்ல திரும்பி நேரா வாணி மகாலுக்கு எதிர் திசையில் தான் கோவிந்தன் சாலை இருக்கு. அப்படி இல்லன்னா துரைச்சாமி பாலத்து வழியா கீழே இறங்கி, போத்தீஸ்க்கு லெப்ட் கட் பண்ணி பனகல் பார்க்க வழியா போகலாம் இந்த ரெண்டு வழியில எந்த வழி சரின்னு நீங்களே முடிவு பண்ணுங்க ” என்று வேன்காரரிடம் சாந்தி சொல்ல,
” கோடம்பாக்கம் மேம்பாலம் வழியா போங்க”
என்று சொல்லி அத்தனை பேரையும் ஏற்றிக் கொண்ட வேன்கள் கோடம்பாக்கம் மேம்பாலம் வழியாகச் சென்று கோவிந்தன் சாலைக்குள் சென்றது .அந்த ஏரியாவுக்கு உட்பட்ட காவல் நிலையத்தில் அனுமதி வாங்க சென்றார்கள் கமலக்கண்ணனும் விஜயகுமாரும்.
” கோவிந்தன் சாலையிலே எவ்வளவு நேரம் ஆகும் ? (
“ஒரு மணி நேரத்துக்குள்ள எல்லாம் முடிஞ்சுரும் சார் “
“சரி, அதுக்குள்ள முடிச்சிடுங்க. போக்குவரத்துக்கு இடைஞ்சல் இருக்கக் கூடாது. அப்படியே ஏதாவது வண்டிகள் வந்தா நீங்க வழி விட்டுட்டு தான் உங்க வழிபாட செய்யணும். பொதுமக்களுக்கு எந்த இடையூறும் உங்களால வந்துரக் கூடாது”
என்று காவல்த்துறை அதிகாரி உத்தரவு சொல்ல
” சரிங்க சார், நாங்க எந்தத் தொந்தரவும் செய்ய மாட்டோம்”
என்று உறுதியளித்து கோவிந்தன் சாலைக்கு வந்தார்கள். உறவினர்கள், நண்பர்கள் என்று கோவிந்தன் சாலை என்று எழுதப்பட்ட பெயர்ப் பலகையின் கீழே பொங்கல் வைத்து, பத்தி ,சூடம், தேங்காய், பழம் என்று தலைவாழை இலை விரிக்கப்பட்டு, பொங்கல் வைத்து பரிமாறப்பட்ட போது, அங்கு இருந்த யாசகர்களுக்கும் கொடுத்தார்கள்
” ஐயா, எனக்கு எழுவது வயசு ஆச்சு. பெத்த பிள்ளைகள் எல்லாம் என்னக் கைவிட்ட பிறகு இப்படி யார்கிட்டயாவது யாசகம் கேட்டு தான் வாழ்ந்துகிட்டு இருக்கேன். தெரு தான் படுக்கிற இடம். எல்லாரும் கோயில் குளம்னு பொங்கல் வச்சு சாமி கும்பிடு வாங்க . நீங்க , கோவிந்தன் சாலை அப்படிங்கற பெயர் பலகைக்கு கீழ பொங்க வச்சு சாமி கும்பிட்டுட்டு இருக்கீங்களே ? இது என்னன்னு தெரிஞ்சுக்கலாமா? “
என்று அந்த யாசகர் கேட்க இவருக்கெல்லாம் பதில் சொல்லணுமா? இவரே யாசகம் கேட்கிறவர் என்று நினைக்காத கமலக்கண்ணன் ,அந்த யாசகரை அருகில் அழைத்தார்.
” கோவிந்தன் அப்படிங்கிறவர் எங்களுடைய தாத்தா.
என்று சாந்தி சொல்ல ,அங்கு நின்றவர்கள் எல்லாம் சாந்தி சொல்வதைக் கேட்டு அருகே வந்தார்கள்.
” எங்க தாத்தாவும் நாதமுனிங்கிற இன்னொரு தாத்தாவும் பாதாள சாக்கடையில் வேலை பார்த்துக்கிட்டு இருந்தாங்க. ஊர் மொத்த இருக்கிற சாக்கடை தண்ணி எல்லாம் கூடி வர்ற பாதாளச் சாக்கடையில வேலை பார்த்துட்டு இருக்கும் போது , திடீர்னு எங்க தாத்தாவும் நாதமுனி தாத்தாவும் அந்த சாக்கடையிலேயே மூச்சு அடைச்சு இறந்துட்டாங்க. மத்த மனுஷன்களோட அழுக்கெல்லாம் போயி எங்க தாத்தாக்கள் உசுரக் குடிச்சிருச்சு. இதைப் பார்த்த அப்போதைய அரசாங்கம் பொதுமக்களுக்காக சேவை செஞ்சிட்டு இருக்கும்போது உயிர் விட்ட சாதாரண நிலையில் இருந்த என் தாத்தாக்களுடைய கோவிந்தன் பேரையும் நாதமுனி பேரையும் சாலைக்கு பேரா வச்சிருக்காங்க. அவங்க இறந்த நாள் தான் இன்னைக்கு. அதனால அவங்க இறந்த இடத்தில அவங்களுடைய பெயர் இருக்கக்கூடிய இந்தப் பெயர் பலகைக்கு கீழே ஒவ்வொரு வருஷமும் நாங்க பொங்கல் வச்சு சாமி கும்பிட்டுட்டுப் போவோம். நாதமுனி தாத்தாவுக்கும் நாதமுனி தெருன்னு பேரு வச்சிருக்காங்க.
நாங்க பொங்க வச்சுச் சாமி கும்பிடுவதற்கான அர்த்தம் இது தான்
என்று சாந்தி, கமலக்கண்ணன், விஜயகுமார் சொன்னபோது ,அந்த யாசகருக்குக் கண்களில் கண்ணீர் வழிந்தது.
” ஐயா, உங்க தாத்தாக்கள் ஜெயிச்சிட்டாங்க. பெரிய பெரிய ஆளுங்க , பணக்காரங்க, புகழடைஞ்சவங்க இப்படிப்பட்டவங்க பேர தான் தெருவுக்களுக்கும், சாலைகளுக்கும் பேரா வைப்பாங்க. ஆனா, உங்க தாத்தாக்கள் பேர இந்தச் சாலைகளுக்கு வச்சிருக்காங்கன்னா, அது எவ்வளவு பெரிய விஷயம் .இந்தச் சாலையில இருக்கக்கூடிய பெரிய கோடீஸ்வரர் வீட்டுக்கு கூட கோவிந்தன் சாலை அப்படின்னு பேர் போட்டுத் தான் முகவரி இருக்கும். கடிதமோ மற்ற எந்த விஷயமோ அவர் பேர்ல தான் இருக்கும். செத்தாலும் உங்க தாத்தாக்கள் ஜெயிச்சிட்டுத் தான் செத்து இருக்கிறாங்க. “
என்று ‘கோவிந்தன் சாலை’, நாதமுனி தெருவைப் புகழ்ந்து பேசினார்கள்.
“கோவிந்தன் சாலை “என்று எழுதிய அந்தப் பெயர்ப் பலகையைத் தொட்டுக் கும்பிட்டார், அந்த யாசகர். கோவிந்தன் இறந்தநாள் அன்று, அவரின் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் அவர் நினைவைப் போற்றுவதற்காகப் பொங்கல் வைத்துச் சாமி கும்பிட்டுக் கொண்டிருந்தார்கள், கோவிந்தன் சாலையில்.
![]()





