“உங்க வீட்ல அமுதன் ரொம்ப கெட்டிக்காரப் பையன். நல்லா படிக்கிறான். நல்லா பாடுறான். நல்லா ஆடுறான். அவனுக்கு இருக்கக்கூடிய திறமை உங்க வீட்ல யாருக்குமே இல்லை”
என்றுஅமுதனைப் பற்றிப் பெருமையாகப் பேசிக் கொண்டிருந்தார், ஆண்டவர்.
“நீங்க சொல்றது சரிதான். எங்க வீட்டில் இருக்கிற மத்த பிள்ளைகளை விட அமுதன் கொஞ்சம் கெட்டிக்காரப் பையன்தான். அவனுக்கு சின்ன வயசுல இருந்தே படிப்புமேல, டான்ஸ் மேல, அலாதி விருப்பம். நாங்களும் அவனுக்கு எந்த தடையும் சொல்றது இல்ல. அவன் மனசுக்கு என்ன பிடிக்குதோ அதைச் செய்யட்டும்னு விட்டுட்டோம். இப்பக் கூட பாருங்க. உள்ள டான்ஸ் ஆடிட்டு இருக்கான்”
என்று அமுதனின் அப்பா சச்சிதானந்தம் பேசிக் கொண்டிருக்கும் அறையை ஒட்டிய அறையில் ஒரு பாடலைப் போட்டு நடனமாடிக் கொண்டிருந்தான், அமுதன்.
“அடடே அப்படியே ஒரு பெண்ணை உறிச்சி வச்சது மாதிரியே ஆடுறானே அமுதன். நல்ல நளினம். நல்ல உடல்வாகு. அமுதன் ஆட்டத்திற்கே பிறந்தவன் போல” என்று அமுதனின் ஆட்டத்தைப் பார்த்த ஆண்டவர், சச்சிதானந்திடம் மெச்சிப் பேசினார்.
“ஆமாங்க அவனுக்கு ஆட்டம்ன்னா அவ்வளவு இஷ்டம். இங்க பாருங்க சின்ன வயசுல எடுத்த போட்டோவ” என்று சச்சிதானந்தம் ஆல்பத்தை எடுத்துப் புரட்டினார். அதில் நெற்றி, கண் இமைகளில் என்று கண் மை எழுதியிருந்தான், அமுதன்.
“சின்ன வயசுல இருந்தே இப்படித்தானா? அப்படின்னா கண்டிப்பா உங்க பையன் பெரிய ஆளா வருவான். மைக்கேல் ஜாக்சன விட பெருசா வர்றதுக்குக் கூட நிறைய சான்ஸ் இருக்கு “
என்று அமுதனைப் புகழ்ந்து தள்ளினார், ஆண்டவர்
“இங்க பாருங்க இதில எப்படி இருக்கான்னு” என்று அமுதனின் அம்மா நீலாம்பிகை சொல்ல,
“என்னங்க, உங்க புடவையக் கட்டிட்டு இப்படி ஆடிக்கிட்டு இருக்கான்.”
“ஆமா, என் புள்ள ஆம்பளப் புள்ளையா பொறந்தாலும் அவனப் பொம்பளப் புள்ள மாதிரி தான் வளர்த்தோம் நாங்களே சும்மா இருந்தாலும், அவனே ஜடைப் பின்னி விடச் சொல்லுவான். பொட்டு வைக்க சொல்லுவான். என் சேலையை எடுத்துக் கட்டிட்டு ஆடுவான். அம்மா மேல அவ்வளவு பிரியம் போல. அதுதான் அம்மாவோட சேலையைக் கட்டி இருக்கான் “
“ஆமா ஆண்டவர், என்னைய விட அவங்க அம்மா தான் அவனுக்கு ரொம்பப் பிடிக்கும். இந்தா பாத்தீங்களா இந்தப் போட்டோவைப் பாருங்க” என்று சச்சிதானந்தம் ஒரு போட்டோவைக் காட்ட
“என்னங்க உங்க அமுதன் ஆம்பள புள்ள தானே? ஒரே சந்தேகமா இருக்கு. ஆனா, அவன் சேர்ந்து போட்டா எடுத்திருக்கிறது எல்லாம் பொம்பள புள்ளையா இருக்காங்க. அதான் சந்தேகமா கேட்டேன் . “
“இல்ல … இல்ல … அவனுக்குப் பெண் நண்பர்கள் அதிகம் என்று சச்சிதானந்தம், அமுதனுக்கு வக்காளத்து வாங்கினார்.
“இந்தப் போட்டோவப் பாருங்க ” என்று சச்சிதானந்தம் சொல்ல,
“வயசுக்கு வந்த பொண்ணு மாதிரி இவ்வளவு அழகா இருக்கானே ? பொம்பள வேஷத்துக்கு ரொம்ப சரியா இருப்பான். எங்களுக்கு அமுதன் ஒரே ஆம்பள புள்ளை தான். பொம்பள புள்ளையா நினைச்சு தான் அவ்வளவு செல்லம் கொடுத்து வளர்த்துட்டோம் ” என்று அமுதனின் அம்மா நீலாம்பிகை ஆண்டவரிடம் பேசியதெல்லாம் நினைவில் வந்து கொண்டிருந்தது. சச்சிதானந்தமும் நீலாம்பிகையும் அழுது கொண்டிருந்தார்கள்.
“இப்ப என்ன ஆயிப்போச்சுன்னு அழுதுகிட்டு இருக்கீங்க? அதுதான் உயிரோட இருக்கான்ல்ல. செத்துப் போனா தான் நீங்க சங்கடப்படணும். பிள்ளைய உசுரோட வச்சுக்கிட்டு, நீங்க இப்படி உக்கி உருகி அழுகிறதில் எந்தப் பிரயோஜனமும் இல்ல. நடந்தது நடந்து போச்சு. இனி அடுத்து என்ன செய்யணும் அப்படிங்கிறத மட்டும் தான் யோசிக்கணும் ” என்ற ஆண்டவர் அவர்களுக்கு தைரியம் சொன்னார்.
“ஒன்னு ஆம்பளையா இருக்கணும். இல்ல பொம்பளையா இருக்கணும். ரெண்டுமே இல்லாம மூணாவது மனுசனா வந்து நிற்கிறதுதாங்க எங்களுக்கு மூச்சுத் திணறுது. என்ன பண்றது? பிறந்த இந்த ஆம்பள வாரிசு எங்க குடும்பத்தை விருத்தி பண்ணுவான்னு நினைச்சுத் தான் கனவு கண்டுட்டு இருந்தோம் .இப்படி திருநங்கையா போவான்னு ஒருநாளும் நினைச்சுப் பாக்கலையே?”
என்று தேம்பித் தேம்பி அழுதார் சச்சிதானந்தம் .
“சரி இப்ப எங்க போயிருக்கிறான் “
“இன்னைக்குக் கூவாகம் கூத்தாண்டவர் திருவிழா இல்ல, அங்கதான் போயிருக்கான். அவன அங்க ஏன் போக விட்டீங்க? “
“நாங்க எங்கே போக விட்டாேம்.. அவனா கிளம்பிப் போயிட்டான் “
என்று இருவரும் கண்ணீர் மல்கச் சொல்ல,
“சரி விடுங்க, மகாபாரதத்தில கூட அரவாணி, சிறப்பா தான் பேசப்பட்டார். பாண்டவர்களோட வெற்றிக்காக காளி தெய்வத்திற்கு அரவாணி தன்னையே தியாகம் செஞ்சதா மகாபாரதம் சொல்லுது. அப்படிப்பட்ட வம்சத்தை சேர்ந்தவன் தான் இந்த அமுதன், உங்க புள்ள திருநங்கையா போயிட்டான்னு வருத்தப்படாதீங்க. திருநங்கைக்கும் இங்க வாழ இடமிருக்கு .ஆண், பெண் அப்படிங்கிறது போக இங்க திருநங்கைகளும் நல்லா தான் வாழ்ந்திட்டு இருக்காங்க”
என்று சமாதானம் சொன்னார் ஆண்டவர் .
“அமுதனுக்குக் கல்யாணம் பண்ணல. குழந்தை குட்டி பெறல. இப்படி வீணாப் போவான்னு கனவுல கூட நினைக்கல” என்று அழுத சச்சிதானந்தத்தையும் நீலாம்பிகையையும் ஆறுதல் படுத்தினார், ஆண்டவர்.
“சரி கூத்தாண்டவர் கோயிலுக்குப் போகலாமா?” என்று ஆண்டவர் கேட்க
“சரி போகலாம்” என்று மூவரும் கூத்தாண்டவர் கோவிலுக்குக் கிளம்பினார்கள்.
வழி நெடுக அமுதனின் பேச்சு தான். அவர்கள் பேச்சில் வழி மாறி , அமுதனை விட அமுதினியே நிறைந்து நின்றாள். சில மணி நேரப் பயணத்திற்குப் பின் கூத்தாண்டவர் கோயில் வாசலில் , அவர்கள் கண்ட காட்சி மூவரையும் சிலிர்க்க வைத்தது.
” உங்க ஒரு புள்ள தான் இப்பிடித் திருநங்கையா போயிட்டான்னு நீங்க அழுது புலம்புறீங்க. இங்கே பாருங்க ஆயிரக்கணக்கான ஆம்பளைங்க திருநங்கையா வந்து நிக்கிறாங்களே இதை யார் கிட்டப் போய் சொல்லுவீங்க? அந்த தாய் தகப்பனுக்கு யாரு ஆறுதல் சொல்லுவாங்க. உங்கள மாதிரி தானே அவங்களும் தன்னுடைய மகனை நேசிச்சிருப்பாங்க. இப்போ இவங்களெயெல்லாம் பார்க்கும்போது உங்கள மாதிரி தான் அவங்களுக்கு மனசு உடையும். பாத்தீங்களா எவ்வளவு சந்தோஷமா இந்த விழாவைக் கொண்டாடிட்டு இருக்காங்கன்னு “
என்று ஆண்டவர் சொல்ல, அரவாண் சிலை வைக்கப்பட்ட தேர், அந்த ஊரையே சுற்றி வந்தது. தங்கள் கையில் சிறிய நெருப்பை பற்ற வைத்து, அதைச் சுற்றி வந்த அரவாணிகள் எல்லாம் தங்கள் தாலியை அறுத்து , கையில் அணிந்திருந்த வளையல்களை உடைத்து ஒப்பாரி வைத்து பாடல்களைப் பாடிக் கொண்டிருந்தார்கள் .இதையெல்லாம் பார்த்த சச்சிதானந்தம், ஆண்டவர், நீலாம்பிகைக்கு தலையே சுற்றியது.
“நாம வாழ்ந்துக்கிட்டு இருக்கிற உலகம் வேற .இவங்களுக்கான உலகம் வேற. இது நம்ம நடைமுறை வாழ்க்கைக்குச் சாத்தியப்பட்டு வராது .வாங்க கிளம்பலாம்”
என்று நீலாம்பிகை அழுது கொண்டே சொல்ல, “வந்தது வந்துட்டோம் அமுதன ஒரு தடவை பார்த்துட்டுப் போலாமே?” என்று சச்சிதானந்தம் சொல்ல, “அவன் இப்ப அமுதன் இல்லங்க. அமுதினி.. அமுதினி … இந்தக் கூட்டத்தில நாம் எங்கே போய் தேடுறது?” என்று கோபத்தோடு சொன்னாள், நீலாம்பிகை.
தன் கண்களை அத்தனை கூட்டத்திலும் மேய விட்ட சச்சிதானந்தம் ஒரு கட்டத்தில் அமுதனைக் கண்டுபிடித்தார்.
“அந்தா இருக்கான் அமுதன்” என்று சொல்ல,
தன் கழுத்தில் கட்டியிருந்த தாலியை தன் கைகளால் அறுத்து எறிந்தான். தன் நெற்றியில் இருந்த பொட்டை அழித்தான். கையில் இருந்த வளையல்களை உடைத்தான். அரவான் சிலை இருக்கும் இடத்தில் வளர்ந்து நின்ற தீயைச் சுற்றிச் சுற்றி ஒப்பாரி பாடல் பாடிக்கொண்டிருந்தான். இதைப் பார்த்த சச்சிதானந்தத்திற்கும் நீலாம்பிகைக்கும் நெஞ்சே வெடித்து விடுவது போல் இருந்தது.
“நாம அமுதனுக்குக் கல்யாணம் பண்ணி வச்சு, நம்ம குடும்ப வாரிச இவன் பெருக்குவான். நமக்கு ஒரு மகன் பிறந்திருக்கான்னு சந்தோஷமா இருந்தாேமே? இப்ப அவனே கழுத்துல தாலியைக் கட்டிட்டு, அவனே தாலிய அறுத்து, கையில இருக்கிற வளையல உடைச்சு இப்படிப் பண்ணிக்கிட்டு இருக்கானே ? இதை என்னால பார்க்கமுடியல? வாங்க போகலாம். எனக்கு அமுதன் தான் வேணும் .இந்த அமுதினி வேண்டாம். ஏதோ நாம பாவம் பண்ணி இருக்கோம் போல. அதுதான் நமக்குப் பிறந்த ஒத்த புள்ளையும் இப்படி ஆயிருக்கான். இனிமே, ஒரு நிமிஷம் கூட என்னால இருக்க முடியாது” என்று அழுது கொண்டே அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள், நீலாம்பிகை .
“எங்களுக்கும் இங்க என்ன வேலை இருக்கு? நாங்களும் வாரோம்” என்று ஆண்டவரும் சச்சிதானந்தமும் கூத்தாண்டவர் கோயிலை விட்டு வெளியேறினார்கள்.
தங்களுக்குத் தாங்களே திருமணம் செய்து கொண்ட அரவாணிகள், தங்கள் கழுத்தில் இருந்த தாலியை அறுத்துக் கீழே எறிந்தார்கள். கைகளிலிருந்த வளையல்களை உடைத்து, ஒப்பாரிப் பாடல்களைப் பாடிக் கொண்டிருந்தார்கள். அமுதனும் அமுதினியாக மாறி இதையே செய்து கொண்டிருந்தான்.
அரவாணிகள் கூட்டத்தில் அரங்கேறிக் கொண்டிருந்தது, கூவாகம் திருவிழா.
![]()




