வானம் சாட்சியாக, பூமி சாட்சியாக அத்தனை தெய்வங்களின் சாட்சியாக நடக்கத் தயாராக இருந்தது, கடற்கரையில் அமைந்த திருக்கோயிலின் குடமுழுக்குத் திருவிழா. கண்ணுக்கெட்டிய தூரம் வரை, பெருங்கடல் சூழ்ந்திருந்தாலும் புனித நதிகளில் இருந்து தீர்த்தங்கள் கொண்டு வந்திருந்தனர்,
புண்ணியத் தலங்களிலிருந்து வந்த ஆன்மீகவாதிகள். கோயில் முழுவதும் பந்தல் போடப்பட்டு, ஆங்காங்கே சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்தனர்,
ஆன்மீகச் சொற்பொழிவாளர்கள் , அவர்களின் பக்திப் பேச்சில் மயங்கிக் கிடந்தனர் பக்தர்கள் . ஆன்மீகம், சொற்பொழிவு இது எதையும் கவனிக்காமல் தங்கள் வியாபாரம் மட்டுமே பெரியதென்று மக்கள் வரும் திசையைப் பார்த்தபடியே இருந்தனர்,
வியாபாரிகள் இப்படி அத்தனை பேரும் அந்தக் குடமுழக்கு விழாவில் குழுமியிருந்தார்கள். என்றைக்கும் இல்லாத அளவிற்கு கோயில் முழுவதும் அன்று கூட்டம் கூடியிருந்தது. அலைகள் அடிக்கும் கரையில் இருந்த அந்தக் கோயிலில் ,அலைகளை விட அதிகமான ஆட்கள் வந்து போய்க் கொண்டிருந்தார்கள் .
பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலர் போல ஒவ்வொரு கோயிலுக்கும் பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை குடமுழக்கு வைப்பது மரபாக ஆகம விதிப்படி வழக்கமாக இருந்தது.
” கோயில்ல , குடமுழக்கு விழான்னு எதுக்காக வைக்கிறாங்க அப்பா ? “
என்று அந்தக் குடமுழக்கு விழாவிற்கு வந்த ஞானப்பிரகாசம் என்ற சிறுவன் , அவனின் அப்பா சிவப்பழத்திடம் கேட்க
“ஒவ்வொரு பனிரெண்டு வருசத்துக்கு ஒரு முறை கோயில்ல இருக்கக்கூடிய தெய்வங்களுக்குச் சக்தி ஏத்துறதுக்காகத் தான் இந்த குடமுழுக்கு விழா வைக்கிறாங்க”
என்று சிவப்பழம் சொன்னதும்
” அப்படின்னா கடவுளுக்கு இருக்கக்கூடிய சக்தி குறைஞ்சிட்டே வருமா அப்பா ? “
என்று எதிர் கேள்வி கேட்டான் ஞானப்பிரகாசம்
” லட்சக்கணக்கான மக்கள் வந்து கடவுள்கிட்ட இருக்கக்கூடிய சக்தி எடுத்திட்டு போயிர்றாங்க. அதுனால கடவுளோட சக்தி குறைஞ்சு போயிருது. அதுனால புனித நதியிலிருந்து தீர்த்தம் கொண்டு வந்து, யாகம் வளர்த்து, கோபுரத்துக்கு மேல இருக்கிற கலசத்தில் இருக்கிற தானியத்த மாத்தி ,இப்படி எல்லாமே குடமுழக்கு விழாவில செஞ்சு, மறுபடியும் சாமிக்குச் சக்தி ஏத்துறதுக்குப் பேரு தான் குடமுழக்கு விழா,”
என்று பக்தி கலந்து உண்மையைச் சொன்னார் சிவப்பழம்.
” அப்படின்னா கடவுள் செல்போன் மாதிரியா அப்பா .செல்போன்ல சார்ஜ் இருக்கும் போது நாம பேச முடியும். சார்ஜ் குறையக் குறைய போன் டெட் ஆகுற மாதிரி, கடவுளுக்கும் சக்திங்கிற சார்ஜ் போயிடுமா அப்பா? “
என்று விதண்டாவாதம் பேசினான் சிறுவன் ஞானப்பிரகாசம். அவனை அகல விழி விழித்துப் பார்த்த சிவப்பழம் இவனுக்கு எப்படிப் பதில் சொல்லி புரிய வைக்கிறதுன்னு தெரியலையே?
என்று அவருக்குள்ளே குழம்பினார்.
கோயிலின் நடுவில் யாகங்கள் வளர்க்கப்பட்டு ,வேத விற்பன்னர்கள் வேத மந்திரங்களை ஓதிக் கொண்டிருந்தனர். நாதஸ்வரம் கொட்டுமேளம் என்று மங்கல ஒலிகள் இடைவிடாமல் ஒலித்துக் கொண்டிருந்தன. ஆன்மீகம் பரப்பும் தெய்வீகப் பாடல்கள் அந்தத் திருத்தலம் முழுவதும் கேட்டுக் கொண்டிருந்தது.
குட முழுக்கு விழா நடக்கும் வரையில் கோயிலுக்கு வெளியே யாசகம் கேட்டுக் கொண்டிருந்த யாசகர்கள் யாரும் அங்கு இப்போது இல்லை .எல்லாம் புதுப் புது மனிதர்கள் .புதுப்புது விசயங்கள். ஆன்மீகத்தில் பெரிய பெரிய சொற்பொழிவாற்றும் மேதைகள். வியாபாரிகள், கடைகள்
என்று அந்த கோயில் முழுவதும் ஆட்களால் ஆக்கிரமப்பட்டு இருந்தன.
” இந்தக் குடமுழுக்கு விழா முடிஞ்சா தான், கோயில் வாசல்ல நாம ஒக்காந்து யாசகம் கேக்க முடியும் “
என்று அந்தக் கோயில் வாசலில் அமர்ந்து யாசகம் கேட்கும் யாசகர்கள் வருத்தப்பட்டுப் பேசிக் கொண்டிருந்தார்கள் ..
“குடமுழுக்கு விழா வைக்கிறது நல்லது தான். ஏன்னா அதுக்கு அப்புறம் தான் ஆளுக கோயிலுக்கு நிறைய வருவாங்க. அப்பத்தான் நமக்கும் வருமானம் நிறைய கிடைக்கும் “
என்று யாசகம் கேட்கும் ஆட்கள் பேசிக் கொண்டார்கள்.
” எப்படியோ நம்ம வாழ்க்கை ஒரு வாரத்துக்கு மேல தான் சரியாகும் போல. இதெல்லாம் சரியா வந்ததுக்கப்புறம் தான் நாம கோயில் வாசல்ல போய் உட்கார முடியும் “
என்று ஒரு யாசகப் பெண் சொல்ல
” அப்படித்தான் இருக்கு. பெரிய பெரிய ஆளுக எல்லாம் வந்திருக்காங்க. .பெரிய பெரிய பூஜை எல்லாம் பண்றாங்க. எங்க பாத்தாலும் தோரணம், கொடி மரம்னு கோடிக் கணக்கா செலவு பண்றாங்க. கடவுளுக்கு சக்தி ஏத்துறதா சொல்றாங்க. நமக்கு எதுவும் விளங்கலையே? “
என்று ஒரு ஊனமான ஆண் யாசகர் சொல்ல
” நமக்கு என்ன தெரியும். கோயில்ல இருக்கிற சாமிகளுக்கு தான் இது தெரியும். இவங்க எல்லாம் குடமுழுக்கு விழா முடிச்சிட்டுப் போனா போதும் , அப்ப தான் நமக்கு யாசகம் கிடைக்கும். இல்ல நமக்குப் பொழப்புப் போயிரும்” என்று பேசிக் கொண்டார்கள் அந்த யாசகர்கள் . அதில், ஒரு சிலர் நோய் வாய்ப்பட்டிருந்தார்கள். ஒரு சிலர் வறுமையின் பிடியில் உடல் மெலிந்து போயிருந்தார்கள். இப்படி யாசகம் கேட்கும் யாசகர்கள் ஒரு பக்கம் புலம்பிக் கொண்டிருந்தார்கள்.
பெரிய பெரிய ஆன்மீகவாதிகள் பெரிய பெரிய பணக்காரர்கள். நன்கொடையாளர்கள், சொற்பொழிவாளர்கள் என்று கூடியிருந்த அந்தக் கூட்டத்தில் இருந்தவர்கள் எல்லாம் சிறப்பாகக் குட முழுக்கு விழா நடக்க வேண்டும் இது ஊர், உலகத்திற்கு எல்லாம் தெரிய வேண்டும் “
என்று பேசிக் கொண்டிருந்தார்கள். ஆனால், இந்த யாசகம் கேட்பவர்கள் மட்டும், எப்போது இவர்கள் எல்லாம் இந்த இடத்தை விட்டு நகர்வார்கள், நாம் எப்போது கோயில் வாசலில் அமர்ந்து யாசகம் கேட்கலாம்”
என்று நினைத்துக் கொண்டிருந்தார்கள். சரி, இந்தக் கூட்டத்திற்குள் நாம் சென்றால், நம்மை ஏதும் திட்டி விடுவார்களோ? என்று பயந்தனர் யாசகர்கள் . அதையும் மீறி அந்த ஒரு மாற்றுத்திறனாளிப் பெண் தன் கைக் குழந்தையுடன் யாசகம் கேட்க, குட முழுக்கு விழா நடக்கும் இடத்திற்குச் சென்றாள். இதைப் பார்த்த அந்தக் கோயிலின் தர்மகர்த்தா
” ஏம்மா, எவ்வளவு பெரிய குடமுழுக்கு விழா இங்க நடந்துக்கிட்டு இருக்கு . நாங்க சாமிக்கு சக்திய கொண்டு வந்திட்டு இருக்கிற ,இந்த நேரத்துல, நீங்க வந்து இப்படி யாசகம் கேக்குறது தப்பு இல்லையா ? “
என்று விரட்டினார் தர்ம கர்த்தா
” ஐயா, ரெண்டு மூணு நாளா, கோயில் குடமுழுக்குனு எல்லாரும் கூட்டங் கூட்டமா போறீங்க. வாரீங்க .யார்ட்ட என்ன கேக்கிறதுன்னு தெரியல. ரொம்ப பசிக்குது. குழந்தைக்கும் பால் இல்ல அது தான் இங்க வந்தேன் “என்று மாற்றுத் திறனாளிப் பெண்மணி சொல்ல
” குடமுழுக்கு முடியுற வரைக்கும் இங்க யாரும் வரக் கூடாது “
என்று விரட்டினார் தர்மகர்த்தா.
செய்வதறியாது திகைத்த அந்த மாற்றுத் திறனாளிப் பெண் தன் கைக்குழந்தையுடன் அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்.
“யம்மா… யம்மா.. பசிக்குது” என்று கத்தியது, அந்தக் குழந்தை.
ஓரிடத்தில் அமைதியாக உட்கார்ந்திருந்த யாசகர்களிடம் நடந்ததைச் சொன்னாள் அந்த மாற்றுத் திறனாளிப் பெண்.
” இவளுக்கே இந்த நிலைமைன்னா நாமெல்லாம் அங்க போனா நம்மையும் இப்படித் திட்டித்தான் அனுப்புவாங்க “
என்று வருத்தப்பட்டு ஒரு இடத்திலேயே குழுமியிருந்தார்கள் யாசகர்கள் .
கோயிலில் இருந்த தீபங்களில் நெய் ஊற்றித் தீபம் ஏற்றினார்கள். வகை வகையான மலர்களால் பூஜை செய்தார்கள். அத்தனை உணவு வகைகளும் சாமி சிலைகளுக்கு முன்னால் வைத்து படையல் செய்தார்கள். மலர்களின் வாசனையும் எரியும் தீபங்களின் வாசனையும் நிறைந்து, ஒரு தெய்வீக மணம் கோயில் முழுவதும் பரவிக் கொண்டிருந்தது.
மொத்த யாசகர்களும் கூடியிருந்த அந்த இடத்தில் அழுக்கு வாசனையே அதிகமாக அடித்தது.
“எப்படியும் குடமுழுக்கு விழா முடிஞ்ச பெறகு தான், நாம யாசகம் கேக்க போக முடியும் போல. அது வரைக்கும் நாம இங்க தான் இருக்கணும் போல “
என்று வருத்தப்பட்டு படுத்து கிடந்தார்கள் யாசகர்கள்.
இரவு ,பகல் என்று பாராமல் கோயில் குடமுழக்கு பூஜைகள், குடமுழக்குப் பாடல்கள். குடமுழக்கு மந்திரங்கள், புனித நதிகளின் நீரூற்றல் .கலசத்தில் இருக்கும் தானியங்களை மாற்றிப் புதிய தானியங்கள். நெய், பால், பழம் அபிஷேகம்
என்று சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தது, குடமுழக்கு விழா. யாக சாலையில் ஓதப்பட்ட மந்திரங்கள். சிறப்பு பூஜைகள் என்று அத்தனையும் மாற்றியதால் கடவுளுக்கும் அங்கிருக்கும் சிலைகளுக்கும் சக்தி ஏற்றி விட்டதாக நினைத்தார்கள் ,அங்கு வந்த ஆன்மீகப் பெரியவர்கள்
லட்சக்கணக்கான பணத்தை வாரி வாரி கோயில் உண்டியலில் செலுத்தி விட்டு, பெருமிதத்தோடு வெளியே வந்த ஒருவரிடம் திரும்பவும் அங்கு வந்து ” ஐயா ,பசிக்குது ஏதாவது குடுங்க “
என்று மாற்றுத் திறனாளிப் பெண் தன் கைக் குழந்தையோடு கேட்க,அவரைத் திரும்பிக் கூட பார்க்காமல் உண்டியலில் பணம் போட்டுத் திரும்பியவரும் மற்றும் அங்கு கூடிய மக்களும் தனக்கும் தன் குடும்பத்துக்கும் நல்ல பலனைக் கொடுப்பார்”
என்று பணத்தை உண்டியில் கொட்டி ,தங்களுடைய நேர்த்திக் கடனைக் கடவுள் தீர்ப்பார் என்று நினைத்துக் கொண்டு, கோயில் வாசலில் நின்றிருந்த மாற்றுத் திறனாளி பெண்ணையும் அவள் கையில் இருந்த குழந்தையும் பார்த்தவர்கள்
” இவங்களுக்கு எல்லாம் வேற வேலையே இல்லையா? இந்த நிலைமை இந்தியாவில மட்டும் தான் இருக்கு .அதுவும் குறிப்பா தமிழ்நாட்டில தான் இப்பிடி ரொம்ப இருக்கு. எங்க போனாலும் இந்த பிச்சைக்காரங்க தொல்லை தாங்க முடியல ? “
என்று திட்டிக்கொண்டே சென்றார்கள். இன்னும் சிலர் கைக் குழந்தையுடன் இருந்த அந்த ஊனமுற்ற பெண்ணை ஏளனமாக பார்த்து
“உங்களுக்கெல்லாம் வேற வேலையே இல்லையா ? “
என்று பேசிப் போனார்கள் தன் நிலையை நினைத்து அழுதாள், அந்த மாற்றுத்திறனாளி பெண்.
கோடிக்கணக்கான ரூபாய் செலவு செய்து வண்ணம் பூசி, யாகம் வளர்த்து, மந்திரம் சொல்லி, எத்தனையோ ஆன்மீகப் பெரியவர்கள் குடமுழக்கு மந்திரங்கள் சொல்லி, கோயிலில் உள்ள சாமி சிலைகளுக்குச் சக்தி ஏறி விட்டதாக நினைத்தார்கள், குடமுழக்கு விழாவில் மந்திரம் சொன்னவர்கள். ஆன்மீகச் சொற்பொழிவாளர்கள் , ஆன்மீக வாதிகள் பக்தர்கள்.
கோயில் வாசலில் நின்று, யாசகம் கேட்கும், ஊனமுற்ற பெண்ணின் கையில் இருந்த குழந்தையின் கண்களில் சிரித்தார் கடவுள்.
![]()





