” வணக்கம் அண்ணா, எங்க இருக்கீங்க?” என்று கேட்டான், சங்கர்
” வளசரவாக்கத்தில, நீங்க எங்க இருக்கீங்க?” என்று ராஜா கேட்க
” ஆசிரியர்கள் போராட்டத்திற்காக சென்னை வந்தோம் .காந்தி – இர்வின் சாலையிலே போராட்டம் நடக்குது” என்றான் சங்கர்
” என்னது காந்தி – இர்வின் சாலையா?” என்று கடகடவென சிரித்தான் ராஜா
” ஏன் இப்படிச் சிரிக்கிறீங்க?”
” உங்க போராட்டத்துக்கும் காந்தி – இர்வின் சாலைக்கும் ஒரு தொடர்பு இருக்கு “
என்று காந்தி – இர்வின் சாலையைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தான், ராஜா
“காந்தி – இர்வின் சாலை சென்னை எழும்பூர் பகுதியில் இருக்கிற முக்கியமான சாலை. காந்தி – இர்வின் ஒப்பந்தத்தை ஞாபகப்படுத்தும் விதமாக 1931 ஆம் ஆண்டு, மகாத்மா காந்திக்கும் இந்திய வைஸ்ராய் லார்ட் இர்வினுக்கும் கையெழுத்தான வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம்.
சென்னை மாநகராட்சி பல சாலைகளின் பெயர்களை மாற்றியது. தற்போது எழும்பூர் சாலை என்று காந்தி இர்வின் சாலை மாற்றப்பட்டாலும் காந்தி இர்வின் சாலை என்றே சொல்லப்படுகிறது”
என்று ராஜா சொல்ல, அதைக் கேட்டுக் கொண்டே இருந்தான், சங்கர்.
” முதலில் இந்தச் சாலை ரெடவுட் சாலை என்றே அழைக்கப்பட்டது.
1702 ஆம் ஆண்டு அங்கு கட்டப்பட்ட எழும்பூர் ரெடவுட் என்ற சின்னக் கோட்டையின் நினைவாக இப்பெயர் வைக்கப்பட்டது. இந்தக் கோட்டையில் பிரிட்டிஷ் படைகள் தங்கள் ஆயுதங்களைச் சேமிக்கவும் நகரைப் பாதுகாக்கவும் பயன்படுத்தப்பட்டது. பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் மைசூர் போர்க்களின் போது பிரிட்டிஷ் படைகள் அணிவகுத்துச் செல்ல இந்தச் சாலை முக்கியப் பகுதியாக இருந்தது. திப்பு சுல்தான் படைகள் மெட்ராஸ் மீது தாக்குதல் நடத்துவதைத் தடுக்கும் அரணாகப் பயன்பட்டது. பதினெட்டாம் நூற்றாண்டில் இந்தப் பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தில் ராணுவ வீரர்களின் அனாதை ஆண் குழந்தைகளுக்கான புகலிடம் இருந்தது.
இங்கு தான் பெல் – லங்காஸ்டர் என்ற கல்வி முறை உருவானது. பின்னர் இது பரவி இங்கிலாந்து வரை நவீனக் கல்வி முறையை ஏற்படுத்தியது. எழும்பூர் ரயில் நிலையத்தை உருவாக்கியவர் ஹென்றி இர்வின். இந்த சாலையின் பெயர் வைஸ்ராய் ஹென்றி இர்வினைக் குறிப்பிட்டாலும் கட்டிடக்கலை நிபுணர் ஹென்றி இர்வின் கட்டிய ரயில் நிலையம் கம்பீரமாக நிற்கிறது. 1817 இல் கட்டப்பட்ட இந்தச் சாலையின் மேம்பாலம் சென்னை சிறையில் இருந்த கைதிகளைக் கொண்டு கட்டப்பட்டது. இதை மேஜர் டி ஹவிலாண்ட் என்பவர் கைதிகளைப் பயன்படுத்தினார்.
இதற்கான சுண்ணாம்பு மற்றும் செங்கல்கள் அருகிலேயே உள்ள சூளையில் தயாரிக்கப்பட்டன” என்று காந்தி – இர்வின் சாலையப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தான், ராஜா.
.1930 களில் ஒத்துழையாமை இயக்கத்தின் போது இந்தச் சாலையில் போராட்டங்கள் நடந்தன. 19 ஆம் நூற்றாண்டில் தென்னிந்தியாவின் பல இடங்களிலிருந்து வேலை தேடி சென்னைக்கு வந்த மக்கள் முதலில் கால் பதித்த இடம் இந்தச் சாலை தான். எழும்பூர் ரயில் வருகைக்குப் பிறகு இந்தச் சாலை சென்னையின் நுழைவாயிலாக மாறியது” என்று ராஜா சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தான், சங்கர்.
” காந்தி – இர்வின் ஒப்பந்தம் இரண்டாம் வட்டமேசை மாநாட்டிற்கு வழி வகுத்தது. அதில் அரசியல் கைதிகளை விடுவித்தல், உப்பு சத்தியாக்கிரகம். உப்புச் சட்ட இயக்கம் மற்றும் தேசிய இயக்கத்திற்கு பேச்சுவார்த்தை இது போன்ற அம்சங்களை கொண்டது .1930 காந்தி தொடங்கிய சட்ட மறுப்பு இயக்கம் தீவிரமடைந்த போது பிரிட்டிஷ் அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எடுத்தது. மார்ச் 5 1931 மகாத்மா காந்தி – இர்வின் ஒப்பந்தம் நடந்தது.
ஆங்கிலேயர் காலத்தில் எழும்பூர் பகுதி மிக முக்கியமான பகுதியாக இருந்தது. சென்னை மாநகராட்சியின் பெயர் மாற்றத் திட்டத்தின் கீழ் எழும்பூர் சாலை என்று மாற்றப்பட்டது .இருப்பினும் இன்றும் மக்கள் மத்தியில் காந்தி – இர்வின் சாலை என்றே அழைக்கப்படுகிறது. இந்த சாலையைச் சுற்றி தெற்கு ரயில்வே நிலையம (1908), அரசு அருங்காட்சியகம் (1851) கன்னிமாரா நூலகம் (1896) வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டிடங்கள் அமைந்துள்ளன” என்று காந்தி -இர்வின் சாலையைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தான், ராஜா.
“காலணித்துவ வைஸ்ராயான இர்வின் பெயரும் இந்திய தேசப்பிதா காந்தியின் பெயரும் ஒரே சாலையில் இன்று நிலைத்திருப்பது போல, உங்கள் ஆசிரியர் போராட்டமும் அரசுக்குத் தெரிந்து, உங்கள் ஒப்பந்தமும் வெற்றிகரமாக முடியும்” என்று வாழ்த்தினான், ராஜா.
“மிக்க நன்றி அண்ணா. ஒரு பெரிய வரலாற்றுப் போராட்டத்தை மிக எளிதாக எனக்குப் புரிய வச்சிட்டீங்க என்று அதை ஆமோதித்தபடி சிரித்துக் கொண்டே, காந்தி – இர்வின் சாலையில் நடக்கும் போராட்டத்திற்கு விரைந்தான், சங்கர்.
![]()





