நீலவான் வெளியில் நீண்ட வால் முளைத்த விண்மீன்களாய் பறந்து கொண்டிருந்தன, வண்ண வண்ணக் காத்தாடிகள். பறக்கும் அத்தனை வண்ணங்களிலும் சுரேந்திரனின் நீல வண்ணக் காத்தாடி மட்டும் வானிலேயே நிலை கொண்டிருந்தது.
“அந்த நீல நிறக் காத்தாடி தான் ரொம்ப தூரத்தில பறந்திட்டு இருக்கு. நிச்சயமா அதுதான் ஜெயிக்குமுன்னு நினைக்கிறேன்”
என்று ஒரு பார்வையாளர் சொல்ல
“இல்ல, அந்தச் சிவப்புக் கலர் காத்தாடியப் பாருங்க . அதுவும் ரொம்ப தூரத்தில பறந்திட்டுத் தான இருக்கு.”
“இல்ல, அத விட அந்த நீல நிறக் காத்தாடி தான் உயரமாப் பறக்குது”
என்று பேசிக் கொண்டார்கள், பார்வையாளர்கள்.
எப்படியும் இந்தக் காத்தாடித் திருவிழாவில் ஜெயித்து விட வேண்டுமென்று தன் கையில் இருந்த மாஞ்சா நூலை அப்படியும் இப்படியுமாகச் சுண்டிச் சுண்டி இழுத்துக் கொண்டிருந்தான், சுரேந்திரன். அவன் இழுக்கும் திசையை விட்டுவிட்டு, வேறு பக்கம் சென்று கொண்டிருக்கும் காத்தாடியைத் திட்டியவாறே இருந்தான்.
‘ஏய்…. எந்தப் பக்கம் போற? இங்கிட்டு வா…’
என்று சுரேந்திரன் தன் கையிலிருந்த மாஞ்சா நூலை வேகமாக இழுக்க, அது காற்றின் திசையிலேயே சென்று கொண்டிருந்தது.
‘ச்சே… இப்பிடியே போனா , காத்தாடியே நம்ம கைய விட்டு விட்டுப் போயிரும் போல’
என்று உள்ளுக்குள் வேதனைப்பட்டுக் கொண்டே காத்தாடியை இழுத்துப் பிடித்தான், சுரேந்திரன். வானுக்கும் நூலுக்குமிடையே முகாமிட்டிருந்தது, காற்று.
‘இந்தத் திருவிழாவில எப்படியாவது ஜெயிச்சிரணும்; இல்ல இவ்வளவு வருசம் நாம காத்தாடி விட்டதுக்கே அர்த்தம் இல்லாமப் போயிரும் ‘
என்று ரொம்பவே வைராக்கியத்துடன் காத்தாடியை இழுத்துப் பிடித்துக் கொண்டிருந்தான், சுரேந்தர்.
அவனின் நீல நிறக் காத்தாடி மட்டுமல்ல, உள்ளூர், வெளியூர், வெளிநாடுகளில் இருந்தும் போட்டிக்கு வந்திருந்தன, நிறையக் காத்தாடிகள். யாருடைய காத்தாடி அதிக நேரம் பறக்கிறது. எந்தக் காத்தாடி ரொம்ப உயரம் போகிறது என்பதை வைத்துத்தான் வெற்றியை நிர்ணயம் செய்கிறார்கள்.
தன் கையிலிருந்த காத்தாடி வெற்றியைவிட்டு விலகக்கூடாது என்று மாஞ்சா நூலை சுண்டியிழுத்துக் கொண்டிருந்தார்கள், போட்டியாளர்கள். நூல் அறுந்து வானை விட்டுக் கீழே விழுந்தன சில காத்தாடிகள்.
“ச்சே… நம்ம காத்தாடி நூல் அறுந்து கீழ விழுந்திருச்சே?
“நம்ம காத்தாடி வானத்தில இருக்குதா?”
என்று தங்கள் கையிலிருந்த நூலையும் வானில் பறக்கும் காத்தாடியையும் ஒரு முறைக்குப் பல முறை சோதனை செய்து கொண்டனர், போட்டியாளர்கள்.
“இந்தக் காத்தாடித் திருவிழா எதுக்கு? வேண்டாமே? மனுசன் சந்தோசப்பட எத்தனையோ விழாக்கள் இருக்கு. இதனால என்ன பயன்? இதுக்கு தடை விதிக்கணும்” என்று வாதம் செய்தார், பால்ராஜ்
“இந்தத் திருவிழா இருக்கறதுனால உங்களுக்கு என்னப் பிரச்சனை?
என்று எதிர்வாதம் செய்தார், சிகாமணி.
“சார் ஒரு விழாங்கிறது மனுசன சந்தோஷப்படுத்தணும். இல்ல உயர்த்தணும். இது எதுவுமே இல்லாம இந்த விழா எதுக்கு. இதனால எத்தனை பறவைகள், மனுசங்க இறந்திருக்காங்கன்னு உங்களுக்குத் தெரியுமா?”
என்று காத்தாடித் திருவிழாவிற்கு எதிராக பால்ராஜ் பேசிக் கொண்டிருந்தார்.
“இந்தத் திருவிழாவில அப்படி என்ன பிரச்சனை இருக்கும்னு நினைக்கிறீங்க” என்று எதிர் வாதம் செய்து கொண்டே இருந்தார், சிகாமணி
‘‘திடீர்னு வானத்தில காத்தாடிகள் பறக்கிறதால பறவைகள் எல்லாம் பயப்படுதுக. மீறி வானத்தில பறக்கிற சில பறவைகள் றெக்கை உடையுது. கால்ல சிராய்ப்பு ஏற்படுது. ஏன் சில நேரங்கள்ல செத்துக் கீழ விழுகுது. ஏன் மனுசங்க கூட மாஞ்சா நூல் கழுத்தில பட்டு இறந்திருக்காங்கள்ல . அதனால இந்தக் காத்தாடி திருவிழாவை நிறுத்தி வைக்கிறது நல்லது’’
என்று வாதம் செய்தார், பால்ராஜ்.
“இந்தக் காத்தாடித் திருவிழாவால எந்தப் பிரயோஜனமும் இல்ல. வெளிநாட்டிலிருந்தும் உள்நாட்டில் இருந்தும் இதுக்கு ஏகப்பட்ட செலவு.
இந்தத் திருவிழா நடக்குறதுனால சமூகத்துக்கு பெருமையோ? இல்ல தனிமனித உயர்வோ எதுவுமே இல்லையே? அப்படி எதுவுமே இல்லாம இருக்கிற இந்தக் காத்தாடித் திருவிழா நமக்கு வேண்டாமே? இதுனால மனிதர்களையும் பறவைகளையும் காவு குடுக்கிறது தான் மிச்சம். இந்தக் காத்தாடித் திருவிழாவுக்கு கடிவாளம் போட்டு இத்தோட நிறுத்தி வைக்கணும்”
என்று சொன்னார், பால்ராஜ்.
எதுவும் பேசாமல் சிரித்துக் கொண்டிருந்தார், சிகாமணி.
வானில் வண்ண வண்ணமாய் பறந்து கொண்டிருந்தன, காத்தாடிகள்.
” நம்ம தமிழ்நாடு மட்டுமில்ல. வெளிநாட்டுல இருந்தும் இந்தக் காத்தாடித் திருவிழாவில நிறையப் பேரு கலந்திருக்காங்க. இதுக்கு நம்ம அரசாங்கமும் நிதி உதவி செய்யுது. இந்த விழா நமக்குத் தேவை “
என்று பேசினார், அரசாங்கப் பிரதிநிதி.
“இன்னும் சற்று நேரத்தில் காத்தாடித் திருவிழா நிறைவடையும். வெற்றி பெற்ற காத்தாடிகளுக்கும் காத்தாடி விடுபவர்களுக்கும், பரிசு வழங்கப்படும்” என்ற அறிவிப்பு வர, வானில் பறந்து கொண்டிருந்தன வண்ண வண்ணக் காத்தாடிகள்.
“சார்… தப்பு நடந்து போச்சு சார்.. தப்பு நடந்து போச்சு…” என்று சிலர் ஓடி வர, எதற்காக இவர்கள் ஓடி வருகிறார்கள்” என்று அவர்கள் வரும் திசை நோக்கி திரும்பினார்கள், பார்வையாளர்கள்.
காற்றில் பறந்து கொண்டிருந்த ஒரு காத்தாடியின் மாஞ்சா கயிறு, வானில் பறந்து கொண்டிருந்த சி பறவைகளின் சிறகைச் சிதைத்து, தன் நீள நூலை அறுத்தது. காற்றின் திசையில் வேகமாய் பறந்து வந்த அறுபட்ட காத்தாடியின் மாஞ்சா நூல், சிகாமணியின் கழுத்தைப் பதம் பார்க்க ரத்தம் சொட்டச் சொட்ட கீழே விழுந்தார், அதே வேகத்தில் அறுபட்ட சிவப்பு வண்ணக் காத்தாடியும் அசைந்து அசைந்து கீழே விழுந்தது. சரசரவெனக் கீழே இறக்கப்பட்டன, போட்டியில் கலந்து கொண்ட பல காத்தாடிகள்.
“நாம சொல்றத யார் கேக்குறது ? பட்டா தான் எட்டுப் புத்தி வரும்” என்று சிகாமணியை நினைத்து வருத்தப்பட்டார், பால்ராஜ்.
கழுத்தில் அறுபட்ட சிகாமணியைத் தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தார்கள், மக்கள்.
காத்தாடிகள் இல்லாத வானத்தில் இப்போது, வானில் வட்டமடித்துக் கொண்டிருந்தன, பறவைகள்.
![]()





