கதைகள் சிறுகதை

சிறுகதை … கல்லூரிச் சாலை 5 …! …. ராஜா செல்லமுத்து

Makkal Kural Official

நக்கல், நையாண்டி, கானா பாட்டு, கேலிக் கவிதைகள் என்று கூச்சலும் குழப்பமுமாகத் தார்ச்சாலையில் ஓடிக் கொண்டிருந்தது, அந்த நகரப் பேருந்து.

” ஏன் தான், இவனுக இப்பிடி இம்சை பண்றானுகளோ தெரியல? இவனுக எல்லாம் படிச்ச ஆளுகளா ? இல்ல ரவுடிப் பயலுகளா ?

என்று பொதுமக்கள் புலம்பினாலும் எதையும் சட்டை செய்யாத அந்தக் காவாலிகள், மேலும் மேலும் சத்தம் போட்டுக் கிண்டல் செய்து கொண்டே வந்தார்கள்.

” தம்பி, இந்த பஸ்ல நீங்க மட்டும் பயணம் செய்யல. பொது மக்கள் எல்லாம் ட்ராவல் பண்ணிட்டு இருக்காங்க. அது மனசில இருக்கட்டும். இனி ஒரு தடவை இப்படிக் கிண்டல், கேலி பண்ணுனீங்கன்னா, உங்கள போலீஸ்ல கம்ப்ளைண்ட் பண்ண வேண்டியிருக்கும் ” என்று ஒரு பயணி திட்ட,

” டேய், இங்க பாருடா , இவர் போலீஸ்ல கம்ப்ளைண்ட் பண்ணுவாராம்…. ஊ…. ஊ…. ஊ… ” என்று மேலும் மேலும் கிண்டல் செய்து கொண்டே வந்தனர், அந்தக் காவாலிகள்.

” கண்டக்டர், இவனுகள என்னா, ஏதுன்னு கேக்க மாட்டிங்களா? இந்தப் பஸ்ஸுக்கு நீங்க தான கண்டக்டர்?”

என்று ஒருவர் எகிற , எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார், நடத்துனர்.

” இந்த ரூட்ல பெண்கள் கல்லூரிகள் நிறைய இருக்கு. பஸ்ல நிறைய மாணவிகள் இருக்காங்க. இந்த மாதிரி இவங்க சத்தம் போட்டு அலம்பல் பண்ணிட்டு இருந்தா நல்லா இருக்கா என்ன? “

என்று ஒரு பெண் சொல்ல, அதையும் காதில் வாங்காத காவாலிகள், பேருந்தைத் தட்டிக் கொண்டும், கிண்டல், கேலிப் பாட்டுக்களைப் பாடிக் கொண்டும் வந்து கொண்டிருந்தார்கள்.

பிதுங்கி வழியும் நகரப் பேருந்தில் ஒதுங்கி நின்று கொண்டிருந்தான், திருமாறன்

“சார், கல்லூரிச் சாலைக்கு ஒரு டிக்கெட்” என்று நடத்துனரிடம் கேட்டான்.

திருமாறனை முறைத்தபடியே டிக்கெட்டைக் கொடுத்தார், நடத்துனர்.அந்தக் கூட்டத்திலும் அவனின் முகம் நடத்துனருக்கு அவ்வளவு பரிச்சயம். இவனிடம் எதைக் கேட்பது ?

‘எப்படியோ போய்த் தொலையட்டும். இவனுக்குத் தினமும் இதே வேலையா போச்சு’

என்று கேட்காமலேயே விட்டுவிட்டார், நடத்துனர் . பஸ் புறப்படும் இடத்தில் இருந்து தினமும் கல்லூரிச் சாலை வரை வந்து, சில மணி நேரங்கள் அங்கேயே கழித்து விட்டு, மறுபடியும் கல்லூரிச் சாலையில் இருந்து கோடம்பாக்கம் வருவதையே வாடிக்கையாக வைத்திருந்தான், திருமாறன் .

“டிக்கெட் … டிக்கெட்..!” யாராவது டிக்கெட் வாங்கணுமா? கேட்டு வாங்கிக்கங்க”

என்று சொல்லியபடியே இருந்தார், நடத்துனர். அப்போதும் திருமாறனை அவர் கவனிக்கத் தவறவில்லை. மீனாட்சி கல்லூரி நிறுத்தம் வரும் வரை அதே கூச்சல், குழப்பம், மாணவிகள் எல்லாம் பயத்தோடும், ஒரு விதமான நடுக்கத்தோடும் கல்லூரி வாசலில் இறங்கினர். இப்போது பேருந்து கொஞ்சம் காலியானது.

” இதே ரோட்ல இன்னும் நிறைய லேடீஸ் காலேஜ் இருக்கு. இன்னும் நிறைய லேடீஸ் ஸ்டூடன்ஸ் இருக்காங்க. அது வரைக்கும் இந்தக் காவாலிகளோட தொல்லை தாங்க முடியாது. “

என்று ஒரு பெண் புலம்ப அந்தப் பேருந்து, கோடம்பாக்கம் மேம்பாலத்தைத் தொட்டு, இசைஞானி இளையராஜா அவர்களின் இசைக் கூடத்தைக் கடந்தது.

“பெரியார் சாலை எறங்குங்க ” என்று நடத்துனர் சொல்ல சிலர் இறங்கினார்கள், சிலர் ஏறினார்கள். திருமாறனைப் பார்த்தார், நடத்துனர்.

அவன், ஆட்டம் பாட்டம் போட்டு ஆடிக் கொண்டிருக்கும் அந்தக் காவாலிகளைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

வருடம் முழுவதும் இப்படியே வந்து கொண்டிருந்தவனைப் பார்த்த நடத்துனருக்கு அவ்வளவு கோபம் .

” இவன் ஏன் தினமும் பஸ்ல இப்படி வந்திட்டு இருக்கான்? இங்கப் பெண்கள் கல்லூரிகள் இருக்கு. இன்னும் நிறையக்காவாலிப் பயல்கள் பஸ்ல வேற இருக்கானுக. இவன் ஏதாவது பேசிட்டா ஏதாவது பிரச்சினை ஏற்பட்டுருமாே ? ” என்ற எரிச்சல் நடத்துனருக்கு இருந்தது. இன்னும் அந்தக் காவாலிகளின் அட்டகாசம் தாளவில்லை. கூச்சல், குழப்பம் ஏற்படுத்திக் கொண்டே சென்றார்கள்.

வள்ளுவர் கோட்டம் தாண்டி, ஸ்டெர்லிங் ரோட்டைக் கடந்து, சாஸ்திரி பவன், இந்திய வானிலை ஆராய்ச்சி நிலையம் தாண்டிப் போய்க் கொண்டிருந்தது, பேருந்து.

” கல்லூரிச் சாலை ஸ்டாப் யாராவது இருக்கீங்களா? பெண்கள் கிருஸ்தவக் கல்லூரி இறங்குங்க “

” நாங்களும் பெண்கள் கல்லூரி தான். நாங்களும் எறங்கலாமா கண்டக்டர்?

என்று அந்தக் காவாலிகள் கிண்டல் செய்ய, அதுவரை எதுவும் பேசாமல் இருந்தார், நடத்துனர். பெண்கள் கல்லூரி நிறுத்தத்தில் அவர்கள் இறங்கிய பிறகு,

டுர்… என்று விசில் ஊதினார், நடத்துனர். கல்லூரிச் சாலையில் இருந்து மெல்ல நகர்ந்தது, பேருந்து.

அன்பழகன் நூற்றாண்டு விழா கட்டிடம், டிபிஐ நிறுத்தத்தைத் தாண்டி, கோ- ஆப்டெக்ஸைத் தொட்டது பேருந்து.

” கோ- ஆப்டெக்ஸ், எத்திராஜ் காலேஜ் இறங்குங்க” என்று நடத்துனர் சொல்ல, மீதமிருந்த பெண்களும் அந்தப் பேருந்தை விட்டு இறங்கினர்.

” டேய், அவ்வளவு தாண்டா, இனி லேடீஸ் காலேஜ் எதுவும் இல்ல. இனி இந்த பஸ்ல டிராவல் பண்றது வேஸ்ட்டு “

என்று அந்தக் காவாலிகள் பஸ்ஸை விட்டு இறங்கி ஓட முற்பட, அவர்களைக் கீழே இறங்க விடாமல் தடுத்தான், திருமாறன்.

” டேய், நீங்க எல்லாம் யாருடா? தினமும் பஸ்ல ஏறி பெண்களையும் பொதுமக்களையும் கிண்டல் பண்ணி டார்ச்சர் பண்ணிட்டு இருக்கீங்க. தினமும் உங்களைப் பாத்திட்டு தான் இருக்கேன். இன்னைக்கு சரியா மாட்டுனீங்க. உங்கள விட மாட்டேன். “

என்று அவர்களை நையப்புடைத்தான், திருமாறன் –

” டேய் திருமாறா வேண்டாம்டா.. விட்டுரு … டேய் திருமாறா.. வேண்டாம்டா.. ஏதாவது பிரச்சினை ஏற்பட்டுரும்டா” என்று நடத்துனர் கத்த

“நீங்க பேசாம இருங்க. இவனுகள இப்படியே விட்டா சரிப்பட்டு வராது.போலீஸும் கேட்காது. பஸ்ல வர்ற எவனும் கேக்க மாட்டான். கல்லூரிக்குப் போற பொண்ணுகளுக்கு என்ன பாதுகாப்பு. இவனுகள்ல ரெண்டு பேரப் போட்டம்னா அடுத்து எவனும் இந்த மாதிரி வேலையச் செய்ய மாட்டானுக “

என்று அந்தக் காவாலிகளை நையப் புடைத்தான், திருமாறன்.

” நீ ஒருத்தன் மட்டும் இந்த வேலையச் செஞ்சா போதுமா? மத்தவங்களுக்கு இந்த உணர்வு ஏதும் இல்லையே ?”

என்று நடத்துனர் கேட்க,

” இங்க எல்லாமே சுயநலம் தான். அவன் அவனுக்கு வந்தா தான் களத்துக்கு வருவான். கலவரம் பண்ணுவான். வேடிக்கை பார்த்திட்டு இருக்கிறவன் ஒரு நாளும் புரட்சி செய்ய மாட்டான். இந்த ஆரம்பம் , இந்தக் காவாலிகளுக்குப் புதுத் தொடக்கமா இருக்கும்னு நினைக்கிறேன். “

என்ற திருமாறன் அவர்களை அடித்து விரட்டினான்.

அன்று இரவு,

” டேய் திருமாறா… இன்னைக்கும் பஸ்ல போனியா? “

” ஆமாம்மா…”

” ம்… ஒனக்கு இருக்கிற உணர்வு கூட உங்க அப்பனுக்கு இல்லையே ?” காலேஜ் படிக்கப் போன பெத்த பொண்ணக் காவாலிப் பயக கிண்டல், கேலி , கலாட்டா பண்ணி, தற்கொலையே பண்ண வச்சிட்டானுக. இது பத்தி போலீஸ்ல கேஸ் குடுத்தா, தற்கொலைன்னு கேஸ் எடுக்கல “உங்க அப்பனும் இத என்ன ஏதுன்னு கூடக் கேக்கல. நீ கேட்டா அதுக்கும் சண்டைக்கு வாராறா? நீ தினமும் பஸ்ல போ. திமிர் பிடிச்சுத் திரியுற வெட்டிப் பயலுகள அடிச்சு நொறுக்கு. அப்பத் தான் இவனுக பயப்படுவானுக “

என்று திருமாறனின் அம்மா

தீபலட்சுமி சொல்ல,

” ம்…. இப்படி நீ கொம்பு சீவி விட்டுட்டே இரு . ஒரு நாளைக்கு உன் மகன் கொலைகாரனா தான் வந்து நிப்பான். “

என்றார், திருமாறனின் அப்பா நடத்துனர், ரங்கன்.

” வரட்டும்… தப்பான ஆளுகளத் தட்டிக் கேக்குறது தப்புன்னா, அந்தச் சட்டம் எங்களுக்கு வேண்டாம். நீ தினமும் பஸ்ல போ எவனாவது பஸ்ல கலாட்டா பண்ணுனா அடி. வர்றத அப்புறம் பாக்கலாம். “

என்று தீபலட்சுமி சொல்ல,

அப்பா ரங்கன், எதுவும் பேசாமல் இருந்தார். வீட்டின் ஒரு அறையில் அவமானப்பட்டு, தீப ஒளியில் மின்னிக் கொண்டிருந்தது. பஸ்ஸில் போகும் போது, கிண்டல், கேலிகளால் இறந்து போன மகள் லாவண்யாவின் புகைப்படம்

வழக்கம் போல் மறுநாள் காலை, கிளம்பியது அந்தப் பேருந்து. அன்று, எந்தக் குழப்பமும், கூச்சலும் , கிண்டலும் இல்லவே இல்லை.

” கல்லூரிச் சாலைக்கு இருபது டிக்கெட் குடுங்க” எனக்கு மீனாட்சி காலேஜ், இங்க நாலு கிருஸ்தவ கல்லூரி, இங்க பத்து எத்திராஜ் காலேஜ் என்று கல்லூரிப் பெண்கள் கேட்க, டிக்கெட்டை கிழித்துக் கொடுத்தார், நடத்துனர்.

” எனக்கு ஒரு கல்லூரிச் சாலை டிக்கெட் ” என்றான், திருமாறன். அவனை முறைத்தபடியே டிக்கெட்டைக் கிழித்தார், ரங்கன்.

” என்ன ஒரே அதிசயமா இருக்கு?இன்னைக்கு ஒரு பயலும் சத்தம் போடல. பாட்டுப்பாடல. கிண்டல் ,கேலி பண்ணல ” என்று தினந்தோறும் அந்தப் பேருந்தில் வரும் பெண்கள் கேட்க,

எந்தப் பிரச்சனையும் இல்லாமல் நகர்ந்து கொண்டிருந்தது, அந்தப் பேருந்து.அமைதியாக இருந்தது, கல்லூரிச் சாலை.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *