” நடக்கப் போற திருவிழாவுக்கு நீங்க அவசியம் வந்திரணும். சரியா? ” என்று அப்துல் காதரிடம் பத்திரிகையைக் கொடுத்தார், சொக்கலிங்கம்.
” நீங்க சொல்லி வராம இருப்பேனா, என்ன? திருவிழாவில முதல் ஆளா நான் வந்து நிப்பேன்”
என்றார், அப்துல் காதர்.
” சரி… இன்னும் நிறையப் பேருக்குப் பத்திரிகை குடுக்கணும். அப்ப நான் வரட்டுமா?”
என்று சொல்லிய, சொக்கலிங்கம் அப்துல்காதர் வீட்டை விட்டுக் கிளம்பினார்.
” அவசியம் எங்க திருவிழாவில நீங்க பங்கெடுத்துக்கிரணும்”
என்று தன் கையிலிருந்த பத்திரிகையை அருணாச்சலத்திடம் கொடுத்தார், ஸ்டீபன்.
” வருத்தப்படாதிங்க. நிச்சயம் உங்க திருவிழாவுக்கு நான் வருவேன்”
” நான் இல்லாம உங்க திருவிழாவா?”
” நான், முதல் ஆளா உங்க திருவிழாவில இருப்பேன் “
இப்படிச் சொல்லிய எத்தனையோ ஆட்கள், அந்தத் திருவிழாவிற்குமொத்தமாக கிளம்பினார்கள்.
அந்த ஊரின் பிரதான இடத்தில் கூடினார்கள். அங்கு அழகாய் பந்தல் போடப்பட்டிருந்தது. வாழை மரங்கள், தோரணங்கள் கட்டப்பட்டிருந்தன. கொட்டு, மேளம் கரகாட்டம், ஒயிலாட்டம் என்று அந்த ஊரே அன்று களை கட்டியிருந்தது. ஒட்டு மொத்த ஊரும் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்தார்கள்.
” இது என்ன விழா? இவ்வளவு ஆளுக , இங்க ஏன் இப்படிக் கூடியிருக்கிறாங்க? அதுவும் சண்ட சத்தம் இல்லாம ஊரே ஒத்துமையா இருக்காங்களே? முன்னாடியெல்லாம் ஜாதி, மதம், இனம் அப்படின்னு பேசிக்கிட்டு எப்பவும் சண்டை போட்டுக்கிட்டு இருந்த ஆளுக எல்லாம் இன்னைக்கு ஒரே இடத்துல மொத்தமா சேர்ந்து இருக்கிறதப் பாத்தா, ஏதோ ஒரு அதிசயம் இங்க நடக்கிறது மாதிரி தெரியுதே ? ஏதாவது , மத நல்லிணக்க விழாவா? என்று அந்த ஊருக்குப் புதிதாக வந்த பிரபு, அந்த ஊரில் இருந்த ஒருவரிடம் கேட்டார்.
” என் பேரு சுரேஷ். நானும் இந்த ஊருக்குப் புதுசு தான். எனக்கும் இங்க என்ன நடக்குதுன்னு தெரியல. என்ன இது? ஒரே கொட்டுச் சத்தமா கேட்டுக்கிட்டே இருக்குன்னு நானும் இங்க வந்து பாத்தேன் . வந்து பாத்தா, எல்லா வீட்டுல இருந்தும் தாய், தகப்பன் பள்ளிக்கூடம் போற பிள்ளைங்கன்னு எல்லாருமே கூட்டமாச் சேந்து ஆடிக்கிட்டு இருக்காங்க? இந்த விழா என்னன்னு எனக்கும் தெரியலையே?” என்று சுரேஷும் தலையைச் சொரிந்தார்.
” இது சாமி கும்பிடுறதுக்கான மாசமும் இல்லை. கோயில்ல எந்த அலங்காரமும் இல்ல. சும்மா தான் இருக்கு. ஒருவேளை கோயில்ல பந்தல் போட்டு ,பூஜை, புனஸ்காரம் பண்ணா கூட கோயில்ல திருவிழா இருக்குன்னு சொல்லலாம். இந்தப் பக்கம் திரும்பினா சர்ச் இருக்கு. அந்தச் சர்ச்சிலயும் எந்த விசேஷமும் இல்ல. அந்தப் பக்கம் மசூதி இருக்கு. மசூதியில் அந்த மாதிரி பங்க்ஷன் நடக்கிறதான்னு எதுவும் தெரியல? ஆனா ஏதோ ஒரு விஷயத்துக்காகத் தான் இந்த ஊர் மக்கள் எல்லாம் சந்தோஷமா கூடி இருக்காங்கன்னு தெரியுது. அது என்ன தான்னு தெரியல? ஒரு பயலையும் கேக்க முடியல. அவ்வளவு பேரும் ஆட்டம் போட்டுக்கிட்டு இருக்காங்க. இப்ப யாரைக் கேட்டு நாம தெரிஞ்சுக்கிறதுன்னு தெரியலையே?” என்று இருவரும் புலம்பிக் கொண்டிருந்தார்கள்.
அந்த வழியாகப் போன ஒரு நபரைப் பிடித்து “ஐயா எதுக்காக இந்த இடத்தில எல்லாரும் ஆட்டம் போட்டுக் கிட்டு இருக்கீங்க. அதுவும் சாதாரண ஆட்டம் இல்ல சதிராட்டம் போட்டுக்கிட்டு இருக்கீங்களே? என்ன காரணம். யாரக் கேட்டாலும் சொல்ல மாட்டேங்கிறாங்களே? என்று பிரபு கேட்க
” உங்களுக்கு ஆடணும்னு ஆசை இருக்கா? ” என்று அந்த ஊர்க்காரர் பிரபுவிடம் கேட்க
“ஆமா” என்று தலையாட்டிய பிரபுவை
” வாங்க நாமளும் சேர்ந்து ஆடலாம் “
என்று பிரபுவைப் பிடித்துக் கொண்டு சுரேஷும் ஆட ஆரம்பித்தார். இன்னதென்று தெரியாமல் இருவரும் ஆடிக் கொண்டிருந்தார்கள்.
” எல்லாரும் டான்ஸ் ஆடிட்டு அப்படியே போயிடாதீங்க ? பிரியாணி ரெடியா இருக்கு. எல்லாரும் சாப்பிட்டு தான் போகணும் ” என்று அங்கிருந்தவர்கள் சொல்ல,
” கண்டிப்பா ” என்று நிறையக் குரல்கள் அங்கு ஒலித்தன .ஆட்டம் ,பாட்டம் கொண்டாட்டம் என்று அந்த இடமே கதி கலங்கி நின்றது. சிறிது நேரத்திற்கெல்லாம் அவரவர் சாப்பிடக் கிளம்பினார்கள்.
‘அப்போதும் எதற்குத் தான் இந்த விழாவைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்? ‘
என்று பிரபுவுக்கும் சுரேஷுக்கும் தெரியாமலே இருந்தது. மண்டையைப் பிய்த்துக் கொள்ளணும் போல இருந்தது, இரண்டு பேருக்கும்.
” இந்த விழா எதுக்குன்னு யாரக் கேட்டாலும் சொல்ல மாட்டேன்கிறாங்களே ? எல்லாரும் அவ்வளவு பிஸியா இருக்காங்க. ஆனா, அவங்க மனசுக்குள்ள ஏதோ பெரிய சந்தோஷம் இருக்கு அப்படின்னு நினைக்கிறேன் ” என்று சொல்லிய சுரேஷ், வேறு வழியின்றி ஒரு சிறுவனைப் பிடித்தான்
“தம்பி, எதுக்காக இந்த மாதிரி விழா கொண்டாடுறீங்க ? எதுக்காக இந்தப் பிரியாணி விருந்து ? கேட்டா ஒரு பயலுகளும் சொல்ல மாட்டேங்கிறீங்களே? என்ன காரணம்? “
என்று பிரவும் கேட்க
” சார், உங்க வீட்ல படிக்கிறவங்க யாராவது இருக்காங்களா? என்று இருவரையும் பார்த்துக் கேட்டான் அந்தச் சிறுவன்
” ஆமா என் பையன் பத்தாவது படிக்கிறான்” என்று சுரேஷ் சொல்ல
“உங்க வீட்ல சார்” என்று பிரபுவைப் பார்த்து அந்தச் சிறுவன் கேட்க
” எங்க வீட்டுல பிளஸ் டூ படிக்கிற பொண்ணு இருக்கிறா” என்று பிரபு சொல்ல,
” அவங்களுக்கு பரீட்சைக்கு இன்னும் எத்தனை நாள் இருக்கு? என்று அந்தச் சிறுவன் கேட்க,
” என்ன, இன்னும் கொஞ்ச நாள் தான் இருக்கும் போல” என்று சுரேஷ் சொல்ல
“உங்க பிள்ளைங்க எல்லாம் நல்லா படிச்சிட்டு இருக்காங்களா? “
என்று அந்தச் சிறுவன் கேட்க
” நல்லா படிச்சிட்டு இருக்காங்க. அவங்கள அடிச்சுப் படிக்க வச்சிருக்கோம். எப்படியும் நிறைய மார்க் எடுத்திருவாங்க. நீட் தேர்வு எழுதணும் .இல்ல வேற உயர் படிப்புக்கு போகணும்னு சொல்லித் தான் அவங்கள படிக்க வச்சிட்டு இருக்கோம். இங்க பக்கத்துல ஊருக்கு நாங்க போகும் போது தான் இந்த ஊர்ல இந்த மாதிரி திருவிழா நடக்கிறதப் பார்த்து நின்னுட்டோம். ஆமா, படிக்கிற பிள்ளைகளுக்கும் இந்த விழாவுக்கும் என்ன சம்பந்தம்? நீங்க எல்லாம் ஏன் யூனிஃபார்ம் போட்டுக்கிட்டு ஆடிக்கிட்டு இருக்கிங்க “
என்று சுரேஷ் கேட்க
” இதுக்கு முன்னாடி நாம எல்லாம் படிப்ப, பரீட்சைய , ஒரு பயத்தோட தான் நாம அணுகியிருப்பாேம். அதனால தான் ,நாம தேர்வு எழுதும் போது, ஒரு விதமான பயத்தோட தான் எழுதியிருப்போம். ஒரு சிலர் நல்லா எழுதிடுறாங்க. சிலர் பயந்திட்டு சரியா எழுதாம ஃபெயில் ஆயிடுறாங்க. அதனால தான் பரீட்சை எழுதுறவங்க மனசுலயும், பரீட்சை எழுதப் போற குழந்தைகளுடைய குடும்பத்துலயும் ஒரு மகிழ்ச்சியை உருவாக்கணும் அப்படிங்கிறது தான், எங்களோட நோக்கமா இருந்தது.
அதனாலதான் நடக்கக்கூடிய பரீட்சைக்கு முன்னோட்டமா எங்க ஊர்ல பரீட்சைத் திருவிழான்னு ஒன்ன நாங்க ஆரம்பிச்சு இருக்கிறோம். அதனுடைய விளைவுதான், இந்தத் திருவிழா. பரீட்சை எழுத போற பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களும், அதுக்கடுத்து பரீட்சை எழுதப் போற பத்தாம் வகுப்பு மாணவர்களும் அவங்க அவங்கள பெற்றவர்களும் எவ்வளவு சந்தோஷமா ஆடிட்டு இருக்காங்கன்னு பாருங்க. பரீட்சைங்கிறது ஒரு கடமை இல்லங்க. ஒரு பொறுப்பு . அது ஒரு உற்சாகம். பரீட்சைங்கிறத சுமையா இல்லாம அத ஒரு திருவிழாவப் போல் கொண்டாடணும். பரீட்சை எழுதுற மாணவர்கள் மனசுக்குள்ள மத்தாப்பூ கொளுத்திப் போடணும். அந்த சந்தோஷமே அவங்கள எந்தத் தவறும் இல்லாம பரீட்சை எழுத வைக்கும். அதுக்கு முன்னோட்டம் தான் இந்த விழா “
என்று பனிரெண்டாம் வகுப்புப் படிக்கும் அந்த சிறுவன் சொல்ல,
” என்ன இது, வித்தியாசமா இருக்கே? பரீட்சை எழுதுறதுக்கு ஒரு திருவிழாவா? அடி வயித்துல நெருப்பக் கட்டிட்டுப் பரீட்சை எழுதும் போது ,நீங்க திருவிழாவுல டான்ஸ் ஆடிட்டுப் போனா நல்லா இருக்குமா?
என்று பிரபு கேட்க,
” திருவிழா வச்சு கொண்டாடிப் பாருங்க சார். நல்லா இருக்கும் . பரீட்சைங்கிறது எவ்வளவு பெரிய கொம்பனுக்கும் ஒரு பயமான விஷயம்தான். பயத்தோட பரீட்சைய அணுகும் போது, அது பயமா தான் இருக்கும்.தெரிஞ்ச விஷயங்களைக் கூட நாம சரியா அணுக முடியாம மறந்து போயிர்றோம் .ஆனா, இத ஒரு விழாவாக் கொண்டாடிட்டு, அந்த சந்தோஷமான மனநிலையில போயி மாணவர்கள பரீட்சை எழுதுச் சொல்லுங்க. அவ்வளவு சிறப்பா இருக்கும் “
என்று பத்தாவது படிக்கும் மாணவன் பிரபுவின் புத்தியைத் தட்ட
“இவங்க சொல்றதும் நல்லா தான் இருக்கும் போல “
அன்று பன்னிரெண்டாவது பரீட்சைக்கான திருவிழா. அடுத்து பத்தாவது பரீட்சை.
‘ டேய் சின்னப்பயலே … இது பனிரெண்டாவது பரீட்சைக்கான விழா, இங்க வந்து, நீ டான்ஸ் ஆடிட்டு இருக்க? உனக்கு ஏதாவது பயம் இருக்கா?
என்று அந்த ஊர் பெரியவர் கேட்க
” எனக்கு பயமில்ல தாத்தா. இப்ப பரீட்சையப் பார்த்தா சந்தோஷமா இருக்கு .எந்தவிதமான கேள்விகளுக்கும் இப்ப நான் அழகா தேர்வ எதிர்கொள்வேன். நல்ல மார்க் எடுப்பேங்கிற மனநிலை வந்திருச்சு” என்று பத்தாவது படிக்கும் ஒரு மாணவன் சொல்ல,
அடுத்து, பத்தாவது பரீட்சைத் திருவிழாவுக்கான தேதியைக் குறித்துக் கொண்டார்கள், அந்த ஊர் மக்கள் .
இதையெல்லாம் பார்த்த சுரேஷும் பிரபுவும் விக்கித்து நின்றது மட்டுமில்லாமல் , அவர்கள் ஊரிலும் பரீட்சைத் திருவிழாவை நடத்த வேண்டும் என்று முடிவு செய்து அந்த ஊரை விட்டு நகர்ந்தார்கள்.
![]()





