சிறுகதை விழாக்கள்

சிறுகதை … கனகாபிஷேக விழா..! விழா 20 …. ராஜா செல்லமுத்து

Makkal Kural Official

மயிலாடும்பாறை கிராமத்தில் அப்படியொரு கூட்டத்தை இதுவரை யாரும் கண்டதில்லை. ஊரின் தொடக்கத்தில் இருந்து ஊர் முடியும் வரை கூட்டங் கூட்டமாய் வந்து கொண்டிருந்தார்கள், ஆட்கள் திரும்பிய பக்கமெல்லாம் வாழை மரங்கள், தோரணங்கள், குழாய் ரேடியோவில் பாடல்கள் என்று கிராமமே சந்தோசத்தில் நிறைந்திருந்தது. உயர்தரக் கார்கள் முதல் உள்ளூர் கார்கள் வரை வந்து கொண்டிருந்தன. அந்த ஊருக்குப் புதிதாக வந்த பரமனுக்கு எதுவும் விளங்கவில்லை.

” என்ன இது? ஊரே திருவிழாக் கோலமா இருக்கு? சாமி கும்பிடு எதுவும் வச்சிருக்காங்களா.?”

என்று வியந்து பார்த்தபடியே ஊருக்குள் நுழைந்த பரமன். இது பற்றி யாரிடம் கேட்பது? என்று தன் சிந்தனையை ஓட விட்டார், நிறைய ஆட்கள் போய் கொண்டிருந்தாலும். இது பற்றி யாரிடம் கேட்பது? என்று திகைத்தவர் எதிரில் வரும் ஒரு நபரைக் கூப்பிட்டு, ” ஐயா, என்ன ஊரே ஒரே அமர்க்களமா இருக்கே ? ஏதாவது கோயில் திருவிழாவா?”

என்று கேட்ட பரமனை ஒரு மாதிரியாகப் பார்த்தவர்

” உங்களுக்கு சேதி தெரியாதா?”

என்று அவரிடமே கேள்வி கேட்டார்.

இல்லை என்பது போல், தன் தோள் இரண்டையும் தூக்கினார் பரமன்

” சரி.. சரி… இப்படியே ஊருக்குள்ள போய் பாருங்க “

என்று பரமனை வழியனுப்பி வைத்தவர்,

‘ ஆமா, யாரு இவரு ? எதுக்காக இது பத்தி நம்மகிட்ட கேக்கணும் ? ‘

என்று யோசித்தவர், போய் கொண்டிருந்த பரமனை மறுபடியும் கூப்பிட்டு,

” ஆமா , யார் நீங்க ? இங்க யாரப் பாக்க வந்திருக்கீங்க”

என்று கேட்டார்.

” ஐயா , நான் டெல்லியில இருந்து வாரேன். பேரு பரமன். எங்க அப்பா பேரு சங்கரலிங்கம், அம்மா பேரு ஈசம்மா. ஈசுவரன் கோயில்கிட்ட இருக்கிற வீடு தான் எங்க வீடு”

என்று பரமன் சொல்ல.

” ஓ…. நீங்க சங்கரலிங்கம் மகனா ? சரி… சரி… போங்க… போங்க…”

என்று வழியனுப்பினார் அந்தப் பெரியவர்.

“சரி… நான் வாரேன்” என்று அந்தப் பெரியவரிடம் சொல்லிய பரமன், அலங்காரம் செய்யப்பட்ட வீதி முழுவதும் பார்த்துக் கொண்டே சென்றார்.அவரைத் தாண்டிச் சென்று கொண்டிருந்தன நிறைய வாகனங்கள்.

‘ என்ன விழாவாக இருக்கும் ?’குழம்பியபடியே சென்று கொண்டிருந்தவரை யாரோ கூப்பிடுவது போல் இருந்தது.

” ஏய்… பரமா?’ இப்ப தான் வாரியா? ’’என்று யாரோ கூப்பிட

‘நம்மள யார் கூப்பிடுறது ? ‘ திரும்பிப் பார்த்தவருக்கு ஒரே வியப்பு.

” ஏய்… தங்கச்சாமி ; நீயா ? நான் கூட யாரோன்னு நெனச்சேன். வாப்பா…வா….” என்று பரமன் கூப்பிட இருவரும் பரசுபரம் விசாரித்தார்கள்.

” என்ன பரமா ? இவ்வளவு வீம்பு வீராப்பு வேண்டாமே? “

என்று தங்கச்சாமி சொல்ல எதற்கும் பதில் சொல்லாமல் இருந்தார், பரமன்.

” நீ நல்ல வேல பாக்குற ? நல்ல சம்பாத்தியம். இப்படி அண்ணன், தம்பிகள் சண்டை சத்தம் போட்டு, இருக்கிற வீடு வாசலப் பிரிச்சு, அம்மா வேற வீடு, நீங்க வேற வீடுன்னு இருக்கிறது. நல்லா இருக்கா என்ன? கொஞ்சம் யோசிங்க. இன்னைக்கு இருக்கிற மனுசன நாளைக்கு காணாம் . எதுக்கு இவ்வளவு ஈகோ ? ஊரு, ஒலகமெல்லாம் சந்தோசமா இருக்காங்க. நீங்க மட்டும் இப்படி இருக்கலாமா ? “

என்று பரமன் நெஞ்சில் வேல் பாய்ச்சினார் தங்கச்சாமி.

” இப்ப நான் என்ன பண்ணனும்? “

” ஒடஞ்சு போய் கெடக்குற உன் குடும்பத்த ஒன்னு சேக்கணும் “

” அது முடியாது “

” ஊர்ல இப்ப என்ன விழா நடந்திட்டு இருக்கு தெரியுமா?”

என்று தங்கச்சாமி கேட்க,

தெரியாது என்று தலையை ஆட்டினார் பரமன்.

” சரிவா… ஊருக்குள்ள வந்திட்டியே? நீயே தெரிஞ்சுக்கிருவ “

என்று தங்கச்சாமியும் பரமனும் பேசிக் கொண்டே சென்றார்கள்.

சிறிது நேரத்திற்கெல்லாம் இருவரும் பரமனின் வீட்டிற்குச் சென்றார்கள். .அத்தனை ஆண்டு காலமாக பேரன்,பேத்திகள், அத்தை, மாமா, சித்தப்பா, சித்தி என்று உறவுகளோடு வாழ்ந்து வந்த அந்தக் குடும்பம் இப்போது யாரும் இல்லாமல் வெறிச்சோடிக் கிடந்தது. வேலை விசயமாய் பரமன் டெல்லிக்கு சென்று விட்டதால் அந்த வீட்டில் யாரும் இல்லாமல் இருந்தார்கள் . தான் கொண்டு வந்திருந்த சாவியை எடுத்துப் பூட்டைத் திறந்தார், பரமன். வீட்டைத் திறந்தது தான் தாமதம்.. வீட்டின் உள்ளே இருந்து, வவ்வால் குருவி, பறவைகள் என்று பறந்து வெளியே வந்தன. இருட்டுப் படிந்த வீடு முழுவதும் நூலாம்படை படிந்திருந்தது. வீட்டைச் சுற்றிப் பார்த்தபோது அவரின், நினைவில் கூட்டுக் குடும்பமாய் வாழ்ந்த நினைவுகள் அவரை ஆட்கொண்டது.

பரமனின் அப்பா இறந்துவிட, அவரின் அம்மா ஈசம்மாள் தான் ஒற்றை ஆளாய் இருந்து குடும்பத்தைக் கவனித்தார். அண்ணன், தம்பி அக்கா, தங்கை என்று அத்தனை பேரையும் வளர்த்து திருமணம் செய்து வைக்கப் பெரும்பாடுபட்டு எல்லோரையும் செட்டில் செய்த பிறகு, குடும்பத்தில் இருந்த ஒருவருக்கொருவர் சொத்து பிரச்சனை, வந்த மருமகன், வந்த மருமகள் என்று ஆளுக்கு ஒன்றாய் பேசி மொத்தக் குடும்பமும் சுக்கு நூறாகச் சிதறியது நினைவில் வர பரமனின் கண்களிலிருந்து நீர் பெருகியது. அதிலிருந்து பிரிவுபட்ட குடும்பங்கள், இப்பொழுது பிரிந்து கிடந்தன. பரமனின் குடும்பம் டெல்லியில் . மற்ற உறவுகள் எல்லாம் திசைக்கொன்றாய். அத்தனையும் நினைத்துப் பார்த்த பரமனுக்கு கண்களில் கண்ணீர் நிறைந்தது.

” என்ன பரமா? பழைய ஞாபகம் வருதா? இதுதான் வாழ்க்கை. இருக்கிற கொஞ்ச காலத்தையாவது நல்லபடியா வாழக் கத்துக்கங்க “

என்று சொன்னவர்

“சரி அம்மாவை பாக்க போலாமா?” என்று தங்கச்சாமி கேட்டார்.

” இல்ல முடியாது” என்றார் பரமன்

” அவங்க தனியா இருக்காங்க. வெந்ததச் சாப்பிட்டுட்டு விதி வந்தா செத்துப் போலாம்னு இருக்கவங்கள யாரும் போய் பாக்குறது இல்ல. அவங்களா தண்ணி எடுத்து, அவங்கள சோறாக்கி சாப்பிட்டு இருக்காங்க. அவங்கள ஒரு எட்டுப் பார்க்க கூடாதா? ” என்று தங்கச்சாமி சொன்னார்.

” முடியாது என்றார் பரமன்.

” இந்த ஊரே திருவிழா கோலமா இருக்கு . இங்க என்ன விழா அப்படின்னு என்கிட்ட கேட்டியே? அது என்னன்னு உனக்குத் தெரியுமா? “

என்று தங்கச்சாமி சொல்ல, பதில் ஏதும் சொல்லாமல், தங்கச்சாமியைப் பார்த்தார் பரமன்.

” நீங்க எல்லாம் சொத்து, சுகம், வீடு, வாசல், அது இதுன்னு பெருசா பேசி சண்ட போட்டுப் பிரிஞ்சு கெடக்குறீங்க உங்களுக்கு எதிர்மாறா இன்னைக்கு கமலாங்கிற நூறு வயசு கடந்த பாட்டிக்கு தான் இன்னைக்கு கனகாபிசேகம் .அவர் பெத்த புள்ளைங்க .அவர் பேத்தி, பேத்தியாட புள்ளைங்கன்னனு அத்தனை பேரும் இங்க வந்திட்டு இருக்காங்க. நாம பாத்துட்டு வந்த கார் எல்லாம் அவங்க வீட்டுக்கு வந்தது தான். அவங்களோட பத்து பிள்ளைங்க . அம்பது பேத்திகள், பேத்தியோட பேத்திகள் நூறு, உற்றார், உறவுகள், சொந்த பந்தம்னு தான் இந்த கிராமத்துக்கு வந்திட்டு இருக்காங்க.அதுவும் உயர்ந்த படிப்பு , உயர்ந்த பதவி, சொத்து சுகம்னு இருக்கிறவங்க.நீங்க என்னடா உங்க அம்மாவையும் அனாதையா விட்டுட்டு, நீங்களும் தனித்தனியா பிரிஞ்சு கெடக்கீங்க .இப்படி வாழ்ந்து என்ன பிரயோஜனம்?”

என்று தங்கச்சாமி சொல்லச் சொல்ல பரமனுக்கு என்னவோ போலானது. . இருவரும் கனகாபிசேகம் நடக்கும் வீட்டிற்கு சென்றார்கள். நூறு வயதான கமலா பாட்டிக்கு மகன், மகள், பேரன், பேத்திகள், உற்றார், உறவுகள் என்று ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் ஒன்றாய் கூடிப் பாட்டியை வாழ்த்தினார்கள். இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த பரமனுக்கு மூச்சு வாங்கியது.

” தங்கச்சாமி எங்க அம்மா உடனே நான் பாக்கணும் ?

என்று பரமன் சொன்னதும் ,

” இந்தா உடனே போயிரலாம் “

என்று இருவரும் ஈசம்மாள் வாழும் வீட்டை நோக்கிச் சென்றார்கள்.

ஒரு ஓலைக் குடிசையில் தனியாக வாழ்ந்து வந்த தன் தாய் ஈசம்மாவை பார்த்த பரமன்

” அம்மா என்ன மன்னிச்சிரு “

என்று நெடுஞ்சாண்டையாகக் காலில் விழுந்தார் பரமன்

” பரமா… என்னய்யா.. ஏன் இப்படி ? எந்திரிய்யா … ஏதோ நமக்கு கெட்ட நேரம்’

என்று தன் மகன் பரமனைத் தேற்றினார் ஈசம்மாள்

” என்ன மன்னிச்சிரும்மா..! அண்ணன் ,தம்பி ,அக்கா தங்கச்சின்னு எங்களுக்குள்ள இருக்கிற ஈகோவால உங்க வாழ்க்கையை நாங்க நாசம் பண்ணிட்டோம். இந்த வயசுல உங்கள தனியா விட்டதுக்கு நாங்க ரொம்ப வருத்தப்படுறோம். எங்கள மன்னிச்சிரும்மா “

என்று அழுது புலம்பிய பரமனைத் தேற்றிய ஈசம்மாள்

” தம்பி எந்திரிப்பா .நான் பெத்த பிள்ளைகள் நீங்க எல்லாம் ஒண்ணா இருக்கலாம். ஆனா, நம்ம வீட்டுக்கு வந்த மருமகளோ? மருமகனோ? நம்ம வீட்டுப் பிள்ளைகள் இல்லையேப்பா. ஆளுக்கு ஒரு திசையில தான் இருப்பாங்க. ஆளுக்கொரு எண்ணம், ஆளுக்கொரு செயல் இப்படித் தான் இருப்பாங்க. இது எல்லாம் எனக்கு நல்லாவே தெரியும்ப்பா. வயசான காலத்துல இதெல்லாம் நான் பெரிசு படுத்த விரும்பலைய்யா .நான் பெத்த புள்ளைங்க நீங்க நல்லா இருந்தா போதும் .சாகப் போற வயசுல நீங்க எல்லாம் சண்டை சத்தம் இல்லாம ஒத்துமையா இருந்தா அதுவே போதுமய்யா ” என்று கண்களில் நீர் ததும்பப் பேசினாள் ஈசம்மா.

“இல்லம்மா நாங்க தான் உங்கள ரொம்ப துன்பப்படுத்திட்டோம்.. நீங்க தான் எங்கள மன்னிக்கனும்” என்று பரமன் அழ ஆரம்பித்தார்.

” நீ அழாதே கண்ணு. நான் கண்ணு மூடுறதுக்குள்ள மொத்தக் குடும்பத்தையும் நான் ஒத்துமையா பாக்கணும்யா “

என்று ஈசம்மாள் சொல்ல

சிறிது காலத்திற்கெல்லாம் உடைந்து போன ஈசம்மாளின் மொத்தக் குடும்பமும் ஒன்று சேர்த்தார்கள்.

அவர்களுக்குள் இருந்த ஈகோ, பொறாமை , போட்டிகள் எல்லாம் சுக்குநூறாய் உடைந்து சிதறின.

நூறு வயதில் கமலா பாட்டிக்கு கனகாபிசேகம் செய்து வைத்து மயிலாடும்பாறை கிராமத்தையே மகிழ்ச்சியில் ஆழ்த்திய அதே கிராமத்தில்…

எண்பது வயதான ஈசம்மாவுக்கும் கனகாபிசேகம் செய்ய ஏற்பாடு செய்தார்கள் பரமன் குடும்பத்தார்கள்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *