” சீக்கிரமா கொண்டு போங்க. ரொம்ப சீரியஸா இருக்காங்கன்னு நினைக்கிறேன். எத்தன பேரு இந்த வேலைய செஞ்சாங்கன்னு தெரியல. இதெல்லாம் ரொம்ப தப்புங்க “
என்று ஒருவர் பதற, கதிர்வேலன், புஷ்பதுரை, பாலமுருகன் இன்னும் சில பேர் உடம்பில் பலமான காயங்களுடன் ஒரு பிரபலமான மருத்துவமனைக்குக் கொண்டு வந்திருந்தனர். அவர்களின் நிலையைப் பார்த்த அந்த மருத்துவமனையிலிருந்த மருத்துவர்கள் முதல் செவிலித்தாய் வரை ஓடி ஒதுங்கினார்கள்.
” யாராவது ஸ்ட்ரெச்சர் எடுத்திட்டு வாரீங்களா?
என்று ஒருவர் துடிக்க
” இது வெட்டுக் குத்து கேஸ். போலீஸ்ல கம்ப்ளைண்ட் குடுத்திட்டு, அப்புறமா இங்க கொண்டு வாங்க . அதுக்கப்புறம் தான் நாங்க ட்ரீட்மெண்ட்ட ஆரம்பிப்போம்”
என்று ஒரு மருத்துவர் சொல்ல
” சார் , இது அந்த மாதிரி கேஸ் இல்லீங்க. இது வேற “
என்று காயம்பட்டவர்களைக் கூட்டி வந்தவர் சொல்ல
” இதெல்லாம் முடியாதுங்க. உடம்புல வெட்டு பெருசா இருக்கு. நீங்க போலீஸ்ல கம்ப்ளைண்ட் குடுத்திட்டு வந்தா மட்டும் தான் நாங்க சிகிச்சை குடுப்போம்”
என்று மருத்துவமனையிலுள்ளவர்கள் சொல்ல, வெட்டுப்பட்டவர்களைக் கூட்டி வந்தவர்களே ஸ்ட்ரெச்சரைத் தள்ளி வந்து வெட்டுப்பட்ட மூன்று பேரையும் அதில் படுக்க வைத்துத் தள்ளிப் போனார்கள்.
” அவசரச் சிகிச்சைப் பிரிவு எங்கே இருக்கு ? “
என்று கேட்க
மருத்துவமனையில் இருந்தவர்கள் யாரும் எதுவும் பேசாமல் இருந்தார்கள்.
இவர்களைக் கேட்டு எந்தப் பிரயோசனமும் இல்லை என்று உணர்ந்தவர்கள், மருத்துவமனை உள்ளே ஸ்ட்ரெச்சரைத் தள்ளிப் போனார்கள்.
” சார், அவசரச் சிகிச்சைப் பிரிவு எங்க இருக்கு ?”
என்று மருத்துவமனையிலிருந்த ஒரு நோயாளியிடம் கேட்க,
” இப்படியே ரைட்ல போங்க, லெப்ட்ல திரும்புனா அவசரச் சிகிச்சைப் பிரிவு வரும் “
என்று ஒரு செவிலித் தாய் சொல்ல,அவசர சிகிச்சை பிரிவுக்குள் கொண்டு செல்லப்பட்டார்கள் வெட்டுப்பட்டவர்கள் .
” அதான் நான் சொன்னேனே? நீங்க போய் போலீஸ்ல கேஸ் கொடுத்துட்டு அதுக்கப்புறம் வந்தா தான் ட்ரீட்மென்ட் கொடுப்பேன்னு”
என்று மருத்துவர் சொல்ல, “சார் நீங்க என்ன நினைச்சிட்டு இருக்கீங்கன்னு தெரியல. இது வேற சார். இவங்க மூணு பேருமே அவங்களுக்கு அவங்களே வெட்டிக்கிட்டாங்க, அப்படிங்கறத நான் எதுவுமே சொல்லாம இருந்தேன். நீங்க என்னடான்னா அதை சொல்ல வச்சிட்டிங்க” என்று ஒருவர் முறைக்க,
“அப்படி என்னய்யா அவங்களுக்கு…? பைத்தியம் ஏதும் பிடிச்சிருக்கா? அவங்களுக்கு அவங்களே வெட்டிக்கிறாங்க” என்று டாக்டர் முறைத்துக் கேட்க,
“சார், இது ஒரு நேர்த்திக்கடன் சார். கத்தி போடும் திருவிழா “
” என்னது கத்தி போடும் திருவிழாவா? “
என்னாய்யா கூத்தா இருக்கு ” என்று தன் இரு புருவங்களை மேலே உயர்த்திக் கேட்டார், மருத்துவர் .
” எங்க ஊர்ல பிரபலமான ஒரு கோயில் இருக்கு சார். ரொம்பத் துடியான சாமி. ஒவ்வொரு வருஷத் திருவிழாவுக்கும் இந்த மாதிரிக் கத்தி போடுற திருவிழாவ நாங்க வைப்போம். அதுல யார் யார் தன்னுடைய உடம்புல காயம் போட்டு இருக்காங்களோ… கத்தியால குத்திக் காயப்படுத்திக்கிறார்களோ? பாட்டுப் போட்டு டான்ஸ் ஆடிச் சாமிக்கு நேர்த்திக்கடன் செலுத்துவாங்க. இதுக்கு பேரு தான் சார் கத்தி போடும் திருவிழா. இவங்க புதுசு. பழைய ஆளுகளுக்கு எல்லாம் எதுவும் ஆகாது. இவங்க புது ஆளுங்க நாங்களும் வேண்டாம் வேண்டாம்னு தான் சொன்னோம் .ஆனா இவங்க உடம்புல கத்தி போட்டாங்க. வலிதாங்க முடியல காயம் ஆகிப்போச்சு. இப்ப ஆஸ்பத்திரி வந்திருக்கோம் .இதைப் போய் எப்படி சார் போலீஸ்ல கம்ப்ளைண்ட் குடுக்க முடியும் .சாமி குத்தம் ஆயிரும் சார்”
என்று கத்திக்குத்துப்பட்டவர்களைக் கூட்டி வந்த ஒருவன் கத்திக் கத்திச் சொல்லிக் கொண்டிருந்ததைப் பார்த்த மருத்துவர்
” ஏன்யா உங்களுக்கெல்லாம் அறிவு இருக்கா இல்லையா? உலகம் எங்கயாே போய்க்கிட்டு இருக்குது. நீங்க என்னாடான்னா கத்தி போடும் திருவிழா .குத்தி போடும் திருவிழான்னு என்னென்னமோ பண்ணிட்டு இருக்கிங்க.கடவுள் உங்களை எல்லாம் இதையெல்லாம் செய்யச் சொன்னாரா? பகுத்தறிவுக்கும் மூடநம்பிக்கைக்கும் உள்ள வித்தியாசமே நாம எதை சிந்திக்கிறோம், எதச் செயல்படுத்துறோம் அப்படிங்கறதுல தான் இருக்கு.
மருத்துவர் பேசுவதை எல்லோரும் ஆவலாகக் கேட்டுக் கொண்டிருந்தார்கள், அங்கு வந்தவர்கள்.
” நாம பகுத்தறிவோட நடந்துக்கணும்ங்க. கடவுள் வருவாரு வருவாரு அப்படிங்கிறது தப்பான விஷயம். இல்லாத ஒருத்தனுக்கு நீ செய்ற உதவி தான் கடவுள். அது எந்த வகையில இருந்தாலும் சரி. அப்படி நீங்க செஞ்சீங்கனனா, அந்த இடத்தில கடவுள் இருக்கிறார். அப்படிச் செய்ற எல்லா இடத்திலும் கடவுள் இருப்பார். அதை விட்டுட்டு இப்படி காட்டுமிராண்டித்தனமா கத்தி போடுறது, தீயில மிதிக்கிறது. அலகு குத்திக்கிறது. இதெல்லாம் கடவுள் உங்ககிட்ட கேக்கல .நீங்களா செஞ்சிட்டு கடவுளுக்கு ஏன் கெட்ட பேர வாங்கிக் குடுக்குறீங்க?
உங்களுக்கு என்ன செய்யணும்னு கடவுள் பாத்துகிட்டு தான் இருக்கார். உங்களுக்கு தேவையான விஷயத்தை கடவுள் கிட்ட கேட்டு முறையிடுங்க. கண்டிப்பா செய்வார் . அத விட்டுட்டு இப்படி உடம்பெல்லாம் கத்திய வச்சுக் குத்திட்டு , ஏதாவது ஒன்னு கெடக்க ஒன்னு ஆச்சுன்னு என்ன பண்ணுவீங்க . “
என்று திட்டித் தீர்த்தார், மருத்துவர்.
” சரி நீங்க ஏதோ கடவுள் அப்படி இப்படின்னு சொல்றதுனால எனக்கு வருத்தமா இருக்கு. அதைவிட மனுச உசுரு பெருசு. ஒரு மனுசனக் காப்பாத்தணும்ங்கிற அக்கறை எனக்கு இருக்கு. கண்டிப்பா நான் இவங்களுக்கு ட்ரீட்மென்ட் கொடுக்கிறேன். ஆனா, இனி ஒரு முறை இந்த மாதிரிக் கத்திக் குத்து திருவிழாவ , இது மாதிரி மூட நம்பிக்கையுள்ள விஷயங்களை விட்டுட்டு, வேற வேல பாருங்க.
” சரிங்க சார்”
” இந்தக் கம்ப்யூட்டர் யுகத்துல இந்த மாதிரி எல்லாம் பண்றது நம்ம கடவுள நாமளே தப்பான இடத்துக்கு கொண்டு போறது மாதிரி .இனிமே இதைச் செய்ய மாட்டீங்கன்னு நினைக்கிறேன்”
என்று சொல்லியபடியே தனக்குத்தானே குத்திக் கொண்ட பக்தர்களுக்குச் சிகிச்சை அளித்தார், மருத்துவர் .
தங்கள் தவறை உணர்ந்த அந்த ஊர் மக்கள், வரும் வருடம் கொண்டாடப் போகும் கத்திக் குத்துத் திருவிழாவைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தார்கள்.
![]()





