காவல்த் துறைக் கட்டுப்பாட்டு அறைக்கு அவசரமாக ஒரு போன் கால் வந்தது. அந்த அழைப்பை ஏற்ற காவல்த் துறை அதிகாரி
“அப்படியா எங்கே?”
என்று கொஞ்சம் வியப்பாய்க் கேட்டார்.
“கண்ணதாசன் சாலையிலே சார்”
“கண்ணதாசன் சாலையா?”
“ஆமா சார்”
“சரி, உடனே அங்க போலீஸ அனுப்புறேன். அங்க ஏதும் பிரச்சினை வந்தா எங்களுக்கு உடனே போன் பண்ணுங்க”
என்று காவல்த்துறை அதிகாரி சொல்ல
“சரிங்க சார்”
என்று அந்த அழைப்பைத் துண்டித்தான், தகவல் சொன்னவன்.
சிறிது நேரத்திற்கெல்லாம் காவலர்களை அழைத்த அந்தக் காவல்த்துறை அதிகாரி,
“இது ரொம்ப சென்சிட்டிவ்வான விஷயம். மக்களுக்காக போராடுற விஷயம். இத நீங்க சரியா கையாளணும். இல்லன்னா பெரிய பிரச்சினை ஆகிரும். மக்கள் அவங்களோட உரிமைக்காக போராடுறத நாம ஒன்னும் தடுக்க முடியாது. கண்ணீர்ப் புகையோ இல்ல தடியடியோ எதுவுமே நீங்க பண்ணக் கூடாது. சும்மா சத்தம் போட்டு மக்கள அனுப்பிடுங்க. அதுக்கு மேல வேற எதுவும் பண்ண வேண்டாம்” என்று கண்ணதாசன் சாலைக்குச் செல்லும் காவலர்களிடம் சொல்லிக் கொண்டு இருந்தார்
“சார், கூட்டம் கொஞ்சம் கட்டுக்கடங்காம இருந்து, ஏதாவது சண்டை சத்தம் வந்தா என்ன பண்றது? என்று ஒரு காவலர் கேட்க, “எதுவும் பண்ணக் கூடாது. பொறுமையாத் தான் இருக்கணும். சின்னச் சண்டை, சத்தம் வந்தாக் கூட அதற்கும் நீங்க சுமுகமாத் தான் பேசணும். தடியடி அப்படி இப்படின்னு எதுவும் செஞ்சுராதீங்க. இது தேர்தல் நேரம்” என்று எச்சரிக்கை செய்தார் காவல்த்துறை உயர் அதிகாரி “சார், இப்ப நாங்க அங்க போகலாமா?
“உடனே கிளம்புங்க. காவல்த்துறை உங்கள் நண்பன் அப்படிங்கிற மாதிரி நடந்துக்கங்க. காவல்த்துறை உங்கள் எதிரி அப்படிங்கிற பேர வாங்கிட்டு வந்துராதீங்க. இப்ப எல்லாம் போலீஸ்காரங்களப் பார்த்தாலே மக்கள் தலைத்தெறிக்க ஓடுறாங்க. நாட்டுல நமக்கு நல்ல பேரு இல்ல. அதனால எவ்வளவு சுமூகமா கையாள முடியுமோ அந்த மாதிரிப் பேசி, வேலைய முடிச்சுட்டு வாங்க .அவங்க என்ன சொல்றாங்களோ அதுக்கு நீங்க சரி, சரின்னு சொல்லிட்டு வாங்க. அவங்க பேசுறதுக்கு எதிர்த்து பேசுனீங்கன்னா, பிரச்சனைகள் வர்றதுக்கு நிறைய வாய்ப்புகள் இருக்கு. பத்திரமா போயிட்டு பத்திரமா வாங்க”
என்று காவல்த்துறை மேல் அதிகாரி கண்ணதாசன் சாலைக்குச் செல்லும் போலீசுக்கு நிபந்தனைகளைச் சொல்லி அனுப்பினார், சிறிது நேரத்திற்கெல்லாம், காவல்த்துறையின் கார்கள் கண்ணதாசன் சாலைக்கு வந்து நின்றன. கண்ணதாசன் சாலை முழுக்க மக்கள் வெள்ளம், அவர்கள் கைகளில் போராட்டப் பதாகைகள்.
சார், இங்க மதுபானக் கடை இருக்கிறதால, தினமும் குடிச்சிட்டு சண்டை போடுறாங்க. ஸ்கூல், கோயில் இருக்கு, இந்த இடத்தில் போய் மதுபானக் கடை எப்படி வைக்கலாம்? குடிச்ச எல்லாரும் சும்மா இருக்காம அசிங்கமாப் பேசிச் சண்டை சத்தம் போடுறாங்க. பொம்பளைங்க சுதந்திரமா வெளியே போய் வர முடியல. எந்த நேரம் எவன் என்ன செய்வான்னு தெரியல. அதனால தயவு செஞ்சு இந்த மதுபானக் கடைய இங்க இருந்து எடுத்திருங்க. இல்லன்னா இங்கே பெரிய பெரிய பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பு இருக்கு” என்று போலீசாரிடம் விவாதம் செய்து கொண்டு இருந்தார்கள், அந்தச் சாலையில் வசிக்கும் மக்கள்.
“சார், இங்க இருக்கிற ஸ்கூலுக்கும் கோயிலுக்கும் சம்பந்தமில்லை. எல்லாமே தூரம் தூரம் தான் இருக்குது. ஏன் இந்தப் பெண்கள் இந்த மதுபானக் கடைய இங்கிருந்து எடுக்கச் சொல்றாங்கன்னு தெரியல. எங்கள மாதிரி தினந்தோறும் குடிக்கிற ஆளுகளுக்கு எல்லாம் இந்த இடம் ரொம்ப பக்கமா இருக்கு சார். அதனால இந்த மதுபானக் கடையை எடுக்க வேண்டாமே?”
என்று ‘குடி’மகன்கள் அந்த மதுபானக்கடையை எடுக்க வேண்டாம் என்று பேசிக் கொண்டிருந்தார்கள்.
‘‘இல்லங்க பெண்கள் என்ன சொல்றாங்களோ அதைத்தான் முடிவு எடுக்க முடியும்” என்று சொன்னார் ஒரு போலீஸ் அதிகாரி.
“அவங்களுக்கு என்ன சார் வீட்டில உட்கார்ந்து சாப்பிட்டு இருக்காங்க. நாங்க காலையில போனா ராத்திரி வரைக்கும் உடம்பு நோக வேலை பார்த்துட்டு வாரோம். கொஞ்சமாவது உடம்புல வலி இல்லாம இருக்கனும்னா ஏதாவது சரக்கு போட்டா தான் முடியுது. அதனால இந்த மதுபானக்கடையை எடுக்க வேண்டாமே ? கொஞ்சம் தயவு பண்ணுங்க” என்று குடிமகன்கள் கேட்டுக்கொண்டார்கள்.
“எங்கள யாரு பக்கம் பேசச் சொல்றீங்க? இந்தப் பக்கம் பெண்கள் மதுபானக் கடையை எடுக்கச் சொல்லி போராட்டம் பண்றாங்க. நீங்க வைக்க சொல்றீங்க? இப்ப நாங்க என்ன பண்றது?” என்று போலீஸ் அதிகாரிகள் குழம்பிப் போய்க் கேட்க “சார், சரக்குங்கிறது பழச்சாறுகள் தான். யாரோ மதுபானம்னு தப்பா சொல்லி இருக்கிறாங்க. இனிமே மதுபானக் கடையோட பேரை மாத்திட்டு பழச்சாறு விற்கும் இடம் அப்படின்னு போடுங்க சார் .யாரும் ஒன்னும் செய்ய மாட்டாங்க. திராட்சையை நீங்க அப்படியே சாறாக்கிக் குடிச்சா அது ஜூஸ். அதையே ரொம்ப நாள் கழிச்சுக் குடிச்சா, அது ஒயின். அப்படித்தான் சார் எல்லா மதுபான வகைகளும் “
என்று மதுபானங்களுக்கு அடிப்படை அறிவு சொன்னான், ஒரு குடிகாரன். அவனை மேலும் கீழும் பார்த்த ஒரு போலீஸ் அதிகாரி அவனிடம் எதுவும் பேசாமல் அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்.
“சார், இந்தக் குழந்தையைப் பாருங்க இவங்க அப்பன் தினமும் குடிச்சிட்டு இருக்கான். குடும்பத்தைப் பாக்குறது இல்ல. சாயங்காலமானாப் போதும் சம்பாதிக்கிற பணத்தில பாதியைக் குடிச்சிட்டு வந்து பணத்தைத் தர மாட்டீங்கிறான். வாடகை வீடு. படிக்கிற பிள்ளைங்க என்ன சார் பண்ணுவாங்க. வீட்டுக்குப் பக்கத்துல இந்த மதுபானக் கடையைத் திறந்து வச்சா என்னா செய்றது ?கொஞ்சம் யோசிங்க சார். உங்களுக்கும் குடும்பம் குட்டி இருக்கில்ல”
என்று நெற்றிப் பொட்டில் அடிப்பது போல பேசினாள் ஒரு பெண் .
“நாங்க மேலிடத்தில பேசி மதுபானக் கடையை எடுக்கறதுக்கான முயற்சி பண்றோம்” என்று உத்தரவாதம் கொடுத்தார்கள் காவல்த்துறையினர்.
” இல்ல சார். இத இப்பவே மூடுனா தான். இங்க இருந்து நாங்க போவோம். இல்லன்னா நாங்க போக மாட்டோம்” என்று போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்.
உடனே அந்த மதுபானக்கடையை இழுத்து மூடினார்கள், காவலர்கள்.
“இப்பதான் நிம்மதியா இருக்கு .இந்த மதுபானக்கடையை நிரந்தரமா மூடிடுங்க” என்று கையெடுத்து கும்பிட்டார்கள், பெண்கள்.
அந்தச் சாலையில் இருந்த கண்ணதாசன் சிலையைப் பார்த்து உள்ளுக்குள்ளே சிரித்துக் கொண்டார்கள், காவல்த்துறையினர்.
” என்ன ஒரு ஒற்றுமை பாத்திங்களா? ஒரு கையில மதுவும் இன்னொரு கையில மாதுவும் இருக்கும்போது என்னோட உயிர் பிரியம்னு சொன்ன கண்ணதாசன் சாலையில இருக்கிற மதுபானக் கடைக்கு இப்படி ஒரு சோதனையா? இது கண்ணதாசனுக்கே பிடிக்காதே?”
என்று காவல்த்துறையினர் சிரித்துக் கொண்டனர்.
” கண்ணதாசன் இறந்ததற்கு காரணம் மதுவருந்தியது. கண்ணதாசன் இல்லாமல் மது வருந்தியது.
கண்ணதாசன் பத்தி வாலி ஐயா எழுதின கவிதை எப்பிடி இருக்கு சார்?”
“சிறப்பு” என்று சொல்லிய காவல்த்துறையினர் அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்கள்.
“கண்ணதாசன் ஐயா எப்படியாவது இந்த இடத்துல இருக்கிற மதுபானக் கடைய நிரந்தரமா மூடுறதுக்கு நீங்க தான் துணை புரியணும்”
என்று கையெடுத்துக் கும்பிட்டார்கள், அந்தச் சாலையில் வசிக்கும் பெண்கள். தன் இயல்பு நிலையிலிருந்து சற்று சாய்ந்தபடியே இருந்தது, கண்ணதாசன் சாலை என்ற பெயர்ப் பலகை.
![]()





