காற்றின் திசையெங்கும் நறுமணம் பரப்பும் அறுசுவை உணவுகளின் வாசம். திரும்பிய பக்கமெல்லாம் உணவுத் திருவிழாவைப் பற்றிய விளம்பரங்கள். அந்த உணவுத் திருவிழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டிருந்தாள்,கோமதி. அவள் வருகைக்காக உணவுத் துறை அமைச்சரும் அத்தனை முக்கியப் புள்ளிகளும் காத்துக் கிடந்தார்கள்.
” கோமதி என்ன அவ்வளவு பெரிய ஆளா ? அவளுக்காக நாம ஏன் காத்துக் கிடக்கணும்? விழாவ ஆரம்பிக்கலாமே? அமைச்சர் வேற காத்திட்டு இருக்காரு “
” இல்ல சார், இந்த உணவுத் திருவிழாவை ஏற்பாடு பண்ணுனது அவங்கதான் .அது மட்டுமில்லாம அவங்க இந்தியாவிலயே பெரிய செஃப் .அவங்க இல்லன்னா இந்த உணவு திருவிழாவே இல்ல. இந்த உலகத்துலயே அப்படி ஒரு சுவையில அவங்களத் தவிர வேற யாராலயும் சமைக்க முடியாது.
அவங்க விரல்கள் அத்தனையிலயும் சுவை சுரந்து கொண்டே இருக்கும். அதனால எங்களுக்கு கோமதி தான் காட்பாதர். அவங்க இல்லாம நாங்க இந்த உணவுத் திருவிழாவைத் துவக்க மாட்டோம் என்று அங்கு வந்த உணவுத்துறை மந்திரியிடம் அடித்துச் சொன்னார்கள் ,அந்த சுய உதவிக் குழு பெண்கள் .அதற்கு மேல் பெண்களிடம் பேசினால் ஏதாவது பிரச்சனை வரும் என்று தெரிந்து கொண்ட அந்த அமைச்சர் அந்த இடத்தை விட்டு நழுவினார்
“கொஞ்சம் பேர் வாங்கினாலே எல்லாருக்கும் திமிர் வந்துருது. இந்தக் கோமதி கூட அப்படித்தான்னு நினைக்கிறேன் .இவ்வளவு பேரு காத்துக்கிட்டு இருக்கோம். சீக்கிரம் வந்து சேராம அத்தனை பேரையும் காக்க வச்சிட்டு இருக்காங்க. பாருங்க இது தப்பு இல்லையா? அதுவும் உணவுத்துறை அமைச்சரே உட்கார்ந்துட்டு இருக்கிறாரு” என்று வருத்தப்பட்டுக் கொண்டார்கள், அமைச்சருடன் வந்த ஆட்கள்.
” இந்த உணவுத் திருவிழாவில ஏதும் சண்டை போட்டுடாதீங்க. ஒவ்வொரு ஊர்ல இருந்தும் ஆட்கள் வந்திருக்காங்க. ஒன்னா கூடியிருக்காங்க. நீங்க கோவிச்சிட்டு போனாலாே இல்ல தேவையில்லாம ஏதாவது பேசினாலோ அது எல்லா ஊர்லயும் பரவிடும். இது தேர்தல் வர்ற நேரமா இருக்கு.கொஞ்சம் அடக்கி வாசிங்க” என்று கட்சியின் மேலிடத்திலிருந்து தகவல் பரவ, உணவுத்துறை அமைச்சர் அமைதியாய் ஓரிடத்தில் உட்கார்ந்து கொண்டார்.
ஈக்கள் நுழைய முடியாத அளவுக்கு அங்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தாலும், ஆங்காங்கே உணவிற்கு மேலே ஈக்கள் பறந்து கொண்டுதான் இருந்தன. வகை கொன்றாய் உணவுகள். சுவைக் கொன்றாய் தட்டுகள் என்று அந்த உணவுத் திருவிழாவில் பாரம்பரிய உணவுகள் முதல் பரவசமூட்டும் உணவுகள் வரை அத்தனையும் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன .
கோமதி வந்து துவக்கி வைத்தால் மட்டுமே, இந்த உணவுத் திருவிழா ஆரம்பமாகும் என்று கங்கணம் கட்டிக் கொண்டிருந்தார்கள் அந்த சுய உதவிக் குழுப் பெண்கள்.
” இப்ப வந்துருவாங்க, இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துருவாங்க” என்று சொல்லிச் சொல்லி அந்த வார்த்தைக்கே வலிமை இல்லாமல் போனது. மறுபடியும் அதைச் சொல்வதற்கு அவமானமாக இருந்ததால் அமைதி காத்தார்கள் அந்தப் பெண்கள்.
இதுவரை பத்து டீயும் ஐந்து காபியும் குடித்து ஆற அமர பேப்பர் படித்த படியே உட்கார்ந்திருந்தார் , அமைச்சர்.
” ஒரு பொண்ணுக்காக மந்திரி ஒக்காந்து இருக்கணுமா? அது தப்பு. ஏதோ அவங்க பெண்ணா இருக்கிறதால நாங்க அமைதியா இருக்கோம். இதே ஆம்பளையா இருந்தா போடா இவனேன்னு விட்டுட்டுப் போயிருப்போம்” என்று கண்கள் சிவக்க பேசினார்கள், அமைச்சருடன் வந்த ஆட்கள்.
” சார் பொறுத்தது பொறுத்திட்டிங்க இன்னும் கொஞ்ச நேரம் தான் .அப்புறம் இந்த விழாவைத் தொடங்கி வச்சிட்டுப் போயிரலாம். கட்சி மேலிடத்துக்கு தெரிந்துச்சுன்னா பெரிய பிரச்சினையாயிரும். வர்ற தேர்தல்ல வேற மறுபடியும் நீங்க சீட்டு கேக்கணும். எதுக்கு சார் இந்த வம்பு “
என்று மந்திரியை ஆசுவாசப்படுத்தினார் உடன் வந்த ஒருவர். பல்லை நறநறவென்றுக் கடித்துக் கொண்டு கோபத்தைத் தன் கண்கள் வழியே துப்பிக் கொண்டிருந்தார் உணவுத்துறை அமைச்சர். ஒரு வழியாக கோமதி வந்து சேர்ந்த போது, பட்டாசு வெடிக்கும் சத்தமும் கொட்டு மேளமும் வானை முட்டும் அளவிற்குக் கேட்டுக் கொண்டிருந்தது .அமைச்சருக்கே கோபம் வரும் அளவிற்கு கோமதிக்கு ஆடம்பரமான வரவேற்பளிக்கப்பட்டது
” என்னய்யா எனக்கு கூட இவ்வளவு விளம்பரம் இல்ல .வரவேற்பு இல்ல இந்தப் பொம்பளைக்கு இவ்வளவு வரவேற்பா ? அப்பிடி என்னய்யா இந்தப் பொம்பள கிழிச்சுப்புட்டாங்க “
என்று வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசினார் அந்த அமைச்சர்
” சார் கொஞ்சம் மெல்லப் பேசுங்க யாராவது கேட்டா? என்று மறுபடியும் உடன் வந்தவர் சொல்ல , திட்ட வரும் வார்த்தைகளை எல்லாம் வாய்க்குள்ளேயே அடக்கிக் கொண்டு கோமதி வரும் திசையை நோக்கி திரும்பினார் அமைச்சர்
” கோமதி அம்மா வந்துட்டாங்க .வாங்க சார் “
என்று அமைச்சரை ஒருவர் அழைத்த போது, அவருக்கு இன்னதென்று சொல்ல முடியாத கோபம் வந்தது ,வேறு வழியின்றி கோமதியுடன் சேர்ந்து அமைச்சரும் ரிப்பன் வெட்டி அந்த உணவுத் திருவிழாவை ஆரம்பித்து வைத்தார். கோமதியை கண் கொண்டு பார்த்ததும் அவருக்குக் கோபம் கொப்பளித்தது.
” யார் இந்தக் கோமதி எதுக்காக இவருக்காக நாம் காத்துக்கிட்டு இருக்கணும் .என்றெல்லாம் அவருக்கு கோபம் இருந்தாலும் அதையெல்லாம் அடக்கிக் கொண்டு அமைதியாகவே இருந்தார் உணவுத்துறை அமைச்சர்
” சார் மன்னிக்கணும் ரெண்டு மூணு இடத்தில இந்த உணவுத் திருவிழாவ நான் தொடக்கி வச்சிட்டு வந்ததுனால இங்கே வர லேட் ஆயிடுச்சு .உங்ககிட்ட நான் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக்கிறேன்”
என்று கோமதி சொன்னாலும் ,அதை ஏற்றுக் கொள்வது போல், மந்திரி தலையாட்டினாலும் அவருக்கான ஈகோ தலை தூக்கியே நின்றது.
“வாங்க சார் எல்லா உணவுகளையும் சாப்பிட்டுப் பாருங்க எங்களுடைய படைப்புகளும் எங்களுடைய உணவுகளும் ரொம்பவே நல்லா இருக்கும் “
என்று கோமதி சொல்லவும் வேறு வழியின்றி அவள் காட்டிய உணவுகளைச் சுவைக்க ஆரம்பித்தார், அமைச்சர்.
ஒவ்வொன்றாகச் சுவைத்து வியந்தார்.
சரி மேடைக்கு போகலாமா? ஒருவர் சொல்ல,
அமைச்சரும் கோமதியும் மேடைக்கு போனார்கள்.
உணவுத் திருவிழாவைப் பற்றி அமைச்சர் பேசி முடித்ததும், சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த கோமதி பேச ஆரம்பித்தார். எல்லோருக்கும் வணக்கம்.
” இங்க இருக்கிற உணவுகளை எல்லாம் நீங்க சாப்பிட்டுப் பாத்திருப்பீங்க.நீங்க கேள்விப்படாத உணவு வகைகளும் ,உணவுகளும் இங்க இருக்கு. இதுக்கெல்லாம் காரணம், எங்களுடைய உழைப்பு எங்களோட கூட்டு முயற்சி. இவ்வளவு பெரிய உழைப்புக்கும் சுவைக்கும் பின்னாடி ஒரு கசப்பான உண்மை இருக்கு .அதை உங்களுக்கு நான் சொல்லணும்னு ஆசைப்படுகிறேன். “
என்று கொஞ்சம் கண் கலங்கினார் கோமதி. அவள் கலங்கியதைப் பார்த்த மொத்தப் பெண்களும் மேடை நோக்கி ஏற முயல, அவர்களைக் கை காட்டி வேண்டாம் என்று சொன்னார். கலங்கிய கண்களோடு இருந்த கோமதிக்கு இப்போது கண்களில் கண்ணீர் கசிந்தது.
நான் சிறப்பு விருந்தினரா இந்த உணவுத் திருவிழாவுக்கு வரவேற்கப்பட்டிருக்கேன். நான் இந்தியாவிலே பெரிய செஃப். எத்தனையோ பட்டங்கள், பாராட்டுக்கள், சொத்து சுகம் இல்லாம இருக்கு. பட், இந்த இடத்துக்கு நான் வர்றதுக்கு பின்னாடி ஒரு கசப்பான கதை இருக்கு. நான் சின்ன வயசா இருக்கும் போது, இதே மாதிரிதான் ஒரு உணவுத் திருவிழா எங்க ஊருக்குப் பக்கத்து டவுன்ல நடந்துச்சு. நானும் எங்க அம்மாவும் அந்த உணவுத் திருவிழாவுக்குப் போனாேம்.
ஆடம்பரமான விளம்பரம்.. பணக்காரங்க எல்லாம் கூடி நின்னு இந்த திருவிழாவ நடத்திக்கிட்டு இருந்தாங்க. வறுமை, பசியாேட இருந்த எங்கள யாரும், அந்த உணவுத் திருவிழாவுக்குள்ள விடல. நான் உள்ள போகணும்னு நெனச்சேன். ஆனா யாரு உள்ள விடல. அந்தப் பகுதி முழுவதும் அந்த உணவாேட வாசம் மிதந்து வந்துச்சு. அதன் சுவை எங்க மூக்குல நுழைஞ்சு நாக்கில எச்சில் ஊறுச்சு. இந்த உணவு எப்படி இருக்கும்னு சாப்பிட ஆசை வந்துச்சு.
யாரும் அந்த உணவுத் திருவிழாவில உள்ள விடாதுனால எங்களுக்கு ரொம்ப அவமானமா, அசிங்கமா இருந்தது. அன்னைக்கு என் மனசுல முடிவு பண்ணுனேன். எந்த உணவுத் திருவிழாவில நாம காயப்பட்டோமோ ? எங்க நாம அசிங்கப்பட்டமோ ? அதே உணவுத் திருவிழாவுக்கு நான் சிறப்பு விருந்தினரா வரணும்னு நெஞ்சில நிறுத்துனேன். நல்லா படிச்சேன். உணவுத்துறையில என்னென்ன இருக்கோ, அத்தனையும் தேடித் தெரிஞ்சுக்கிட்டேன். அதுக்கப்புறம் இந்த சுய உதவிக் குழுவ ஆரம்பிச்சேன்.. இன்னைக்கு உங்க முன்னாடி நிக்கிறேன்”
என்று அழுது கொண்டே சொன்னார், கோமதி. அவள் சொல்வதைக் கேட்ட அத்தனை பேருக்கும் கண்ணீர் பெருகியது.
அதுவரை கோமதியின் மீது கோபமாக இருந்த அமைச்சர் கூட தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு, கோமதிக்காக ஆதரவுக் குரல் கொடுத்தார்
“சரிம்மா அழாதே ! நான் கூட உங்களைத் திமிருப் புடிச்ச பொண்ணுன்று நினைச்சுட்டு இருந்தேன். ஆனா, இத்தனை காயங்களோட தான் படிச்சு முன்னேறி, இந்த இடத்துக்கு வந்திருக்கீங்கன்னு, தெரிஞ்சதும், உங்கள நெனச்சு ரொம்ப பெருமையா இருக்கும்மா. நீங்க வெறும் பெண் மட்டும் இல்ல. எல்லா பெண்களுக்கும் ஒரு உண்மை உதாரணம். எல்லாருக்கும் நீங்க ஒரு ரோல் மாடல் “
என்று கோமதியை வாழ்த்தினார் அமைச்சர். அமர்க்களமாக ஆரம்பமானது அந்த உணவுத் திருவிழா. அடுத்த உணவுத் திருவிழாவைத் துவக்கி வைப்பதற்காக இன்னொரு இடத்திற்கு காரில் பறந்தார் கோமதி.
![]()





