சிறுகதை விழாக்கள்

சிறுகதை … ஆண்டு விழா..!விழா 26 …. ராஜா செல்லமுத்து

Makkal Kural Official

ஆண்டு விழா கொண்டாட்டத்திற்காக அந்தத் தனியார் பள்ளி வெகு விமர்சையாக அலங்கரிக்கப்பட்டிருந்தது . பல்வேறு போட்டிகளை நடத்தி அதற்கான பரிசளிப்பு விழாவும் வழங்குவதற்குத் தயாராக இருந்தார்கள், பள்ளி நிர்வாகிகள். அந்தப் பகுதியில் இருக்கும் மிகப் பிரபலமான பள்ளி என்பதால் பெற்றோர்கள் எல்லாம் அந்தப் பள்ளியிலே குழந்தைகளைச் சேர்த்திருந்தார்கள்.

மாநிலத்திலேயே முதல் இடத்திற்கு வர வேண்டும். எந்த ஒரு மாணவரும் தேர்ச்சியடையாமல் போகக் கூடாது என்பதில் அந்தப் பள்ளி நிர்வாகம் ரொம்பவே கண்டிப்பாக இருந்தார்கள். அது போல தான் ஒவ்வொரு ஆண்டும், மிகச் சிறப்பாக இயங்கி வருகிறது, அந்தப் பள்ளி.

இன்று, அந்த வருட ஆண்டு விழா மிகச் சிறப்பாக நடக்க ஏற்பாடானது. அரசியலில் இருக்கும் மிக முக்கியப் புள்ளி ஒருவர்.சினிமாவில் ஒரு பிரபலம் என்று சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருந்தார்கள். பள்ளியின் கலையரங்க மேடையில் விழாவிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சினிமா பாடல்களுக்கு நடனமாடும் மாணவ மாணவிகளைப் பார்த்த அரசியல்வாதி

” இது கொஞ்சம் ஆபாசமான பாடலா இருக்கு. இது தப்பு. மாணவ மாணவிகளுக்குப் படிப்பு சம்பந்தமான விஷயங்களைத் தான் நாம சொல்லித் தரணும். சினிமா பாட்டெல்லாம் போட்டு ஆடக்கூடாது அதுவும் ஆபாசமான பாட்டப் போட்டு இப்படி ஆடிட்டு இருக்காங்க” என்று சொல்ல

” சினிமா இல்லாம மனுஷ வாழ்க்கை இல்லங்க. சினிமா தான் எல்லா மனுஷங்களையும் சேத்து வைக்குது. அதனால சினிமா பாட்டுப் போடுறதில தப்பு இல்ல”

என்று சினிமாவுக்காக வக்காலத்து வாங்கினார் ,சிறப்பு விருந்தினராக வந்திருந்த சினிமாக்காரர்.

” எத்தனையோ நல்ல நல்ல சினிமா பாடல்கள் இருக்கு. அந்தப் பாடல்களத் தேர்ந்தெடுத்து இருக்கலாம். இவங்க தேர்ந்தெடுத்து, ஆடுற பாட்டு கொஞ்சம் ஆபாசமான பாட்டு அதுதான் சொன்னேன் “

என்றார், அரசியல்வாதி

“நீங்க சொல்றது சரிதான். பாட்டத் தேர்ந்தெடுக்கும் போதே அதப்பத்தி யோசித்து இருக்கணும். இப்ப பேசி என்ன பிரயோஜனம். மேடையில வந்து ஆடிட்டு இருக்காங்க.

என்று சினிமா பிரபலம், அரசியல்வாதி இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். அந்த ஆபாசப் பாடல் முடிந்ததும் வந்திருக்கும் சிறப்பு விருந்தினர்களுக்கு மரியாதை செலுத்த மேடை ஏற்றி, மரியாதை செலுத்தினார்கள்.

ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெற்றவர்களுக்குச் சிறப்பு விருந்தினர்கள் பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கினார்கள்.

” இந்தப் பள்ளி மாநிலத்திலேயே முதல் இடத்தில இருக்குது. இங்க படிக்கிற பிள்ளைங்க எல்லாம் ரொம்ப நல்லா படிக்கிறாங்க. அதுக்கு என்ன காரணம் அப்படின்னு எனக்கு தெரியல. படிக்கிற பிள்ளைங்க எங்க இருந்தாலும் நல்லா படிப்பாங்க அப்படிங்கிறதுக்கு இந்த கல்வி நிறுவனம் நல்ல உதாரணம் “

என்று தன் பங்குக்குப் பேசினார், அரசியல்வாதி.

” படிப்பு… படிப்பு.. அப்படின்னு எப்பவும் இருக்காம கலைத்துறைப் பக்கமும் மாணவர்கள் வரலாம். நடிகராக , இயக்குநராக, பாடலாசிரியராக , இப்படி எத்தனையாே பிரிவுகள்ல மாணவர்கள் வந்து சினிமாவுல ஜெயிக்கலாம்”

என்று சினிமாத்துறை சார்ந்த சிறப்பு விருந்தினரும் பேச

அவ்வளவு நேர்த்தியாக நடந்து கொண்டிருந்தது ,அந்த ஆண்டு விழா .

இறுதியாக அந்தப் பள்ளியின் தாளாளர் பள்ளியைப் பற்றி பேச ஆரம்பித்தார் .

” இந்தப் பள்ளி ஆரம்பிக்கும் போது ஒரு அஞ்சு மாணவர்களாேட தான் ஆரம்பிச்சோம். அதுவும் சின்ன குடிசை வீட்டில இருந்து, இன்னைக்கு இவ்வளவு பெரிய ஆலமரமா வளந்து நிக்குதுன்னா, அதுக்கு இங்க பணிபுரியுற ஆசிரியர்களும் பணியாளர்களும் தான் முக்கியக் காரணம் அவர்களுக்கு என் வணக்கத்தைத் தெரிவிக்கிறேன் என்றார், அந்தப் பள்ளியின் தாளாளர் . பணி புரியும் ஆசிரியர்கள் எல்லாம் பம்பரமாக வேலை செய்து கொண்டிருந்தார்கள் .ஒரு வழியாக விழா முடிந்து சிறப்பு விருந்தினர்கள் கீழே இறங்கினார்கள்.

” சார் ,உங்க கூட ஒரு போட்டோ எடுத்துக்கிரலாமா? “

என்று சிறப்பு விருந்தினர்களிடம் மாணவர்களும் ஆசிரியர்களும் கேட்க

” ஓ…தாராளமா எடுக்கலாம்”

என்று இருவருடனும் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டிருக்கும் போது,

ஒரு மாணவனிடம் கேட்டார், அந்த அரசியல்வாதி .

“தம்பி, நீங்க என்ன படிக்கிறீங்க ?’

“நான் பத்தாவது படிக்கிறேன் சார்”

” நல்லா படிப்பீங்களா? “

” நல்லா படிப்பேன் சார். படிச்சு அரசாங்கத்தில உயர் பதவிக்கு போவேன் சார்”

” குட் “

” அம்மா, அப்பா என்ன பண்றாங்க?”

” கூலி வேலை செய்றாங்க சார்”

இங்க நான் படிக்கிறதுக்காக, எங்க அப்பா ,அம்மா வட்டிக்குப் பணம் வாங்கி ,என்னைய இந்த ஸ்கூல்ல சேத்து விட்டுருக்காங்க. அவங்களுடைய கனவையும் செலவையும் நான் சிதைச்சிடக் கூடாது சார்”

என்றான் அந்த மாணவன்.

அந்த மாணவனை ஒரு மாதிரியாகப் பார்த்தனர் சிறப்பு விருந்தினர்கள்.

” நீங்க என்ன படிக்கிறீங்க ? “

” ப்ளஸ் டூ “

” படிச்சு என்ன பண்ணப் போறீங்க?”

” அரசாங்கத்தில உயர் பதவிக்கு போகணும் சார்”

என்று அங்கிருந்த மாணவர்கள் எல்லாம் , அரசாங்க வேலையைப் பற்றியே அக்கறையாகப் பேசினார்கள். இதையெல்லாம் வியப்பாகப் பார்த்த சிறப்பு விருந்தினர்கள், அங்கிருந்த ஆசிரியர்களிடம்

” உங்களுக்கு என்ன சம்பளம் கொடுக்கிறாங்க ? “

” என்ன சார் , பெரிய சம்பளம் கொடுக்கிறாங்க அவ்வளவுதான் ஒரு எட்டாயிரம் ஒம்பதாயிரம் கொடுப்பாங்க

என்று அவர்கள் சொன்னதும்

” என்ன கொடுமை இது ? மாணவர்கள் கிட்ட வசூல் பண்றது லட்சக்கணக்கான ரூபாய். அவங்களுக்குச் சொல்லிக் கொடுக்கிற ஆசிரியர்களுக்கு எட்டாயிரம் ஒன்பதாயிரமா? இது ரொம்ப தப்பா இருக்கே ? மேடையில பேசும்போது ஆசிரியர்கள் கடவுள்கள்ன்னு பேசுனாங்க ஆனா , அவங்களுக்கு சம்பளம் இவ்வளவுதானா ?

என்று வருத்தப்பட்டனர்.

” தம்பி நீ என்ன படிக்கிற ? “

“நான் ஃபோர்த் ஸ்டாண்டர்ட் “

“அப்பா, அம்மா என்ன பண்றாங்க? “

” அப்பா கவர்ன்மெண்ட் டீச்சர் .அம்மாவும் கவர்ன்மெண்ட் டீச்சர்”

” ஓ.காே… அம்மா, அப்பா வேல பாக்குறது, கவர்மெண்ட்ல , பிள்ளைங்க படிக்கிறது , பிரைவேட் ஸ்கூல்ல .உங்க அப்பா, அம்மா இங்க வந்திருக்காங்க ? “

” ஆமா சார், வந்திருக்காங்க “

என்றதும்,

” வணக்கம் சார். நாங்க தான் இந்த பையனோட அப்பா, அம்மா . இந்த ஸ்கூல் இந்த ஏரியாவுல ரொம்ப பிரபலம் . நல்லா சொல்லித் தாராங்க. நூறு சதவீதம் தேர்ச்சி. இந்த ஸ்கூல்ல படிச்சா கண்டிப்பா அரசாங்க வேலைக்கு போயிரலாம்”

” அரசாங்கப் பள்ளிக்கூடத்துல வேலை செஞ்சிட்டு, உங்க பிள்ளைங்கள தனியார் ஸ்கூல்ல படிக்க வைக்கிறீங்க? இதுவே எவ்வளவு பெரிய தப்பு. தனியார் பள்ளிக் கூடத்தில படிச்சிட்டு அரசாங்க வேலைக்கு போகணும்னு ஆசைப்படுறீங்க. இது எவ்வளவு பெரிய முரண்பாடு. “

என்று சிறப்பு விருந்தினர்கள் விழிக்க, இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த தனியார் பள்ளித் தாளாளர்,

” இவ்வளவு பேச்சுப் பேசுற, இந்த அரசியல்வாதி வீட்டுப் பிள்ளைகளும் சினிமா பிரபலம் வீட்டுப் பிள்ளைகளும் அரசாங்கப் பள்ளிக் கூடத்திலயா படிக்கிறாங்க. அத விட அரசாங்கப் பள்ளிக் கூடத்துக்கு சிறப்பு விருந்தினரா போனா சோப்பு டப்பாவும் டிபன் பாக்ஸும் தாராங்கன்னு தானே அங்க போகாம, எங்க ஸ்கூலுக்கு வரதுக்கு பல லட்சம் வாங்கிட்டுத்தான இந்த பங்ஷனுக்கே வந்திருக்காங்க. இங்க எல்லாம் மாறணும்னு ஆசப்படுறவன் முதல்ல அவன், அவன் கொள்கைய மாத்தணும். அவனவன் மாறுனா எல்லாம் தானா மாறும் ” என்று கோபமும் தெளிவும் கலந்து பேசினார், அந்தத் தனியார் பள்ளியின் தாளாளர்.

சிறப்பாக நடந்த முடிந்தது, பள்ளியின் ஆண்டு விழா.


Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *