” பூஜைக்கு எல்லாம் தயாரா இருக்கா ? “
என்று கேட்டுக் கொண்டே அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருந்தார், காவிரி மைந்தன்.
” ஏன் இவ்வளவு அவசரப்படுறீங்க? அதான் டைம் இருக்குல்ல “
என்று மனைவி கோசலை சொன்னாலும் அதை ஒரு காதில் வாங்கி, மறு காதில் விட்டபடியே அங்குமிங்கும் அலைந்து கொண்டே இருந்தார், காவிரி மைந்தன்.
” உனக்கென்ன நீ சொல்லுவ? ஆடிப்பெருக்கு எவ்வளவு பெரிய விழா தெரியுமா? இந்த நாள்ல நாம சாமி கும்பிட்டா தானே, அடுத்தடுத்து நல்லது நடக்கும் “
என்று சொல்லியபடியே ஓடிக் கொண்டிருந்தார், காவிரி மைந்தன்.
“அப்பா எப்பவுமே இப்படித்தான். ஒரு வேலை செஞ்சா அத முடிக்கிற வரைக்கும் சுடு தண்ணிய கால்ல ஊத்தின மாதிரி தான் ஓடிக்கிட்டே இருப்பாரு”
என்று மகள் அனாமிகா சொல்ல அதையும் காதில் வாங்காமல் ஓடிக்கொண்டே இருந்தார் ,காவிரி மைந்தன்.
” எல்லாம் ரெடியா இருக்கா?” ” ம்… ரெடி…
மாலை, பச்சரிசி, ஊதுபத்தி , சாம்பிராணி, மஞ்சள், குங்குமம் தேங்காய் ,வெத்தலை பாக்கு பழங்கள், வெள்ளம், மஞ்சள் கயிறு கற்பூரம், விபூதி , சந்தனம், நாணயம், நறுமண பூக்கள், தேன் பச்சரிசி மாவு ,பன்னீர் ,வாழை இலை எல்லாம் எடுத்து வச்சாச்சுங்க “
என்று மூச்சுவிடாமல் சொன்னாள், கோசலை.
” சரி நல்ல நேரம் பாத்து பொங்கல் வைக்கலாமா? “
“சரி வச்சிரலாம் “
கோசலை சொல்ல
வாழையிலை விரிக்கப்பட்டு பூஜைக்கு தயாரானது. இதை எல்லாம் பார்த்தபடியே எதுவும் பேசாமல் அமர்ந்திருந்தார், காவேரி மைந்தனின் தாய் சின்னத்தாயம்மாள்.
நூறு வயதைத் தொடப்போகும் அந்தத் தாய் ஆடிப்பெருக்கு விழாவில் கலந்து கொள்ளவே இல்லை .
“பாட்டியைக் கூப்பிட்டீங்களா? ” என்று காவிரி மைந்தன் கேட்க
” கூப்பிட்டுப் பார்த்தாேம்பா. பாட்டி வர மாட்டேன்னு சொல்லிட்டாங்க. என்னன்னு தெரியல .நீங்களே போய் கேளுங்க. நீங்களாச்சு உங்க அம்மாவாச்சு” என்று அனாமிகா ஒதுங்கிக் கொள்ள ,
“வயசானாலே இப்படித்தான். ஏதாவது குறுக்குப் புத்தியா பேசிக்கிட்டு பிரச்சனை பண்ணிட்டு இருப்பாங்க .இன்னைக்கு ஆடிப்பெருக்கு நல்ல நாள் சாமி கும்பிடலாமில்ல. மூஞ்சிய இப்பிடி உர்ன்னு வச்சிட்டு இருந்தா என்ன அர்த்தம்?”
என்று பேசிக்கொண்டே சின்னதாயம்மாளிடம் சென்றார் காவிரி மைந்தன் .
“என்னம்மா .என்ன ஆச்சு? பூஜைக்கு நேரமாச்சு . வந்து சாமி கும்பிடலாமில்ல “
என்று நிதானமாகவும் அதேசமயம் தாயிடம் பணிவாகவும் பேசினார் காவிரி மைந்தன்.
“ஆடிப்பெருக்குனா என்னன்னு தெரியுமா? வீட்டுக்குள்ள வாழை இலையைப் போட்டு, அவிலும் பொரியும் , பொங்கலும் , பழமும் வச்சுக் கும்பிடுற விழா இல்ல. வீட்டுக்குள்ளயே படையல் போட்டுச் சாமி கும்பிட்டா அது ஆடிப்பெருக்கு விழா ஆயிருமா? ஆடிப்பெருக்குன்னா , ஒரு விடுமுறை அப்படின்னு மட்டும் தான் உங்களுக்கெல்லாம் தெரியும்.
தமிழ்நாட்டில இருக்கிற ஆறுகள் எல்லாம் பெருக்கெடுத்து ஓடுகிற நாள் தான் ஆடிப்பெருக்கு. தமிழ்நாட்டுக்காரன் ஒன்னும் முட்டாளுங்க இல்லடா. தமிழ்நாட்டில் நடக்கிற விழாவெல்லாம் நட்சத்திரத்தையும் கிழமைய அடிப்படையாவும் வச்சு தான் விழாவக் கொண்டாடுறாங்க. அதனாலதான் ஆடி மாசம் பதினெட்டாம் தேதியான, அந்த நாளைத் தான் ஆடிப்பெருக்கு விழா கொண்டாடுறோம். தென்மேற்குப் பருவத்தில ஆத்தோட நீர்ப் பிடிப்பு அதிகமாகிப் புதுப் புனல் பொங்கி வரும், இதுக்குப் பேர் தான் ஆடிப்பெருக்குன்னும் சொல்லுவாங்க. இந்த ஆடி மாசம் மழையும் தண்ணியும் இருக்கிறத பாத்துத் தான் விவசாயிகள் எல்லாம் வெத வெதப்பாங்க .ஆடி மாசத்துல நெல்லு, கரும்புன்னு விதைய நட்டா தை மாசத்துல அறுவடை செய்ய முடியும். அணைகள்ல தேங்கி நிக்கிற தண்ணியை தெய்வமா நினைச்சுச் சாமி கும்பிடுவாங்க. அதுக்கு பூஜையும் செய்வாங்க. அதைத்தான் ” ஆடிப்பட்டம் தேடி விதை “அப்படிங்கிற பழமொழியும் வந்துச்சு.
பாட்டி சொல்வதை அனாமிகா வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டே இருந்தாள்.
“அந்தக் காலத்துல எல்லாம் ஆடிப் பெருக்குங்கிறது எப்படி இருக்கும் தெரியுமா ? ஆத்தங்கரையில மொத்த பேரும் கூடி நின்னு ஆத்தங்கரையிலயே குளிச்சிட்டு அங்கயே பூசை செய்வாங்க. இடம் கிடைக்காமப் போகும்னு அந்த இடத்திலயே பசுச் சாணத்துல மெழுகி ,அதுக்கு மேல வாழை இலை வச்சு, அதுக்கு மேல அகல் விளக்கையும் ஏத்தி, வெத்தலை பாக்கு ,பழம் , பத்தி சூடம் காட்டி ஆத்தங்கரையில உட்கார்ந்து தான் ஆடிப் பெருக்கு விழா கொண்டாடுனாங்க. வீட்ல செஞ்ச விதவிதமான உணவுகளை கொண்டு வந்து ஆத்தங்கரையில தான் சாப்பிடுவாங்க.
இது திருச்சி ஸ்ரீரங்கம் ,காவிரி ஆத்துல அவ்வளவு அழகா நடக்கும் .அந்தக் காவிரி ஆத்துல ஆடிப்பெருக்கு கொண்டாடிட்டு இருக்கும் போது தான் நீ பிறந்த. அதனால தான் உனக்கு காவிரி மைந்தன்னு பேர் வச்சோம். காவிரி நதியில ,திருச்சி திருவரங்கம், அம்மா மண்டபம் படித்துறை முக்கொம்பு படித்துறையில கல்யாணம் ஆனவங்க கல்யாணம் ஆகாதவங்க இப்படி குடும்பம் குடும்பமா காவிரித்தாய வணங்குவதற்கு பேருதான் ஆடிப்பெருக்குத் திருவிழா. நீ என்னடான்னா கான்கிரீட் கட்டட வீட்டுக்குள்ள ஒக்காந்து ஆடிப்பெருக்கு விழா கொண்டாடுகிறேன்வான்னு சொல்லிட்டு இருக்க. இதுக்கு பேரு ஆடிப்பெருக்கு விழா இல்லடா. காங்கீரிட் விழா ” என்று சின்னத்தாயம்மாள் சொன்னது, காவிரி மைந்தன் பிடரில் அடித்தது போல் இருந்தது.
” அம்மா, அதெல்லாம் காலம் மாறிப் போச்சும்மா.. இப்ப மழை, தண்ணி எதுவும் இல்ல. ஆறுகளும் ஏரிகளும் நீர் பிடிப்பு இல்லாம வறண்டு போய் கெடக்கு .எந்த ஆத்துல போயி நாம ஆடிப்பெருக்கு விழா கொண்டாடுறது ? “
என்று அம்மாவிடமே சண்டை போட்டார் , காவிரி மைந்தன்.
” எங்க தண்ணி இருக்கோ, அங்க போய் தான் ஆடிப்பெருக்கு விழா கொண்டாடணும். இப்ப நாம கட்டியிருக்கிற வீடு கூட ஏரி இருந்த இடம்தான? எனக்கு அது நல்லாவே தெரியும்டா .என்ன செய்ய? நீர் நிற்கிற இடம் எல்லாம் வீட்டக் கட்டிட்டாேம். இப்பத் தண்ணீர் நிக்கிறதுக்கு எந்தத் தடமும் இல்ல. எல்லாத்தையும் நாமளே அழிச்சிட்டோம். மாடு இல்லாதவன் தான் பொங்கல் விழா கொண்டாடுறான். பட்டாசுத் தொழிற்சாலையில மனுஷனச் சாகக் குடுத்துட்டுத் தான் தீபாவளிக்கு நாம பட்டாசு வெடிக்கிறோம். இன்னைக்கு ஆறே இல்லாத இடத்தில ஒக்காந்து தான் ஆடிப்பெருக்கு விழா கொண்டாடுறோம். இதெல்லாம் பாக்குறதுக்கும் கேக்குறதுக்கும் எனக்கு தர்ம சங்கடமா இருக்குடா. நான் சின்ன வயசா இருக்கும் போது, ஆடிப்பெருக்கு விழா அப்படி குதூகலமா நடக்கும். நீ என்னாடான்னா, நடு வீட்டுக்குள்ள பத்தி ,சூடம் வச்சு ஆடிப்பெருக்கு விழா கொண்டாடுறதப் பாத்துட்டுத் தான் எனக்கு ஆத்திரமா வந்துச்சு”
என்று சின்னத்தாயம்மாள் சொல்லச் சொல்ல ,வீட்டில் பூஜைக்காக வைத்திருந்த அத்தனை பொருட்களையும் எடுத்து காரில் ஏற்றினார், காவிரி மைந்தன்.
” அம்மா போலாமா? ” ” எங்கடா “
“நான் ஆடிப்பெருக்கு அன்னைக்குத் தானே பிறந்தேன்.. அதுவும் காவிரிக் கரையில பிறந்ததனால தான எனக்கு காவிரி மைந்தன்னு பேர் வச்சீங்க. அந்தக் காவிரியிலேயே போய், நாம ஆடிப்பெருக்கு விழாவைக் கொண்டாடலாம்மா வா “
என்று கூப்பிட்டார், காவிரி மைந்தன். ” ஏண்டா, அங்க தண்ணீர் இருக்குமா? ” என்று சந்தேகமாகக் கேட்டார் சின்னத்தாயம்மாள்.
” தண்ணி இருக்கோ இல்லையோ? வாட்டர் கேனத் தூக்கிட்டுப் போயாவது ஆத்தங்கரையோரம் உக்காந்து நாம ஆடிப்பெருக்கு விழாவ கொண்டாடிட்டு வருவோம்” என்று காவிரி மைந்தன் சொல்ல,
“இப்பத்தாண்டா, நீ என் மகன். உனக்குக் காவிரி மைந்தன்னு பேர் வச்சதுக்கு இன்னைக்குத் தான் நீ சரியா இருக்க ” என்று மகனின் தோளைத் தட்டினாள், சின்னத்தாயம்மாள்.
காவிரியாற்றை நோக்கிப் பறந்து கொண்டிருந்தது, கார்.
இன்னும் சிறிது நேரத்தில் ஆரம்பமாக இருந்தது, ஆடிப் பெருக்கு விழா.
![]()





